ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள்,கருட சேவை, கருடன், ரங்க மன்னார்.,


   ஆண்டாள்,, , ,




அன்ன வாகனமேறி எழிலாக உலா வரும்
 கோதை நாச்சியார்

கருடன் வேத ஸ்வரூபர் மட்டுமல்ல நாத ஸ்வரூபரும் கூடத்தான். ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வர வடிவானவர் கருடன். பெரிய திருவடியான இவர் இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாக பாசத்தினால் கட்டுண்டு கிடந்த இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார். அது போலவே அவர் கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து அவர் அழகாக எழுதிக் கொடுத்த மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார், இவ்வாறே பல்வேறு திவ்ய தேசங்களிலும் கருடன் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன் சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்ய தேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்  என்று இத்தனை பெருமைகளைக் கொண்ட தலம் இத்தலம்.
ஏக சிம்மாசன சேவை

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள், திருஅவதாரம் செய்து, ஆயனுக்காக கனா கண்டு, அரங்கனைக் கைப்பிடித்தமென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் , கருடன் மற்றும் ரங்க மன்னார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.
ஆண்டாள் நாச்சியாரின் திருஅவதாரம் வராக அவதார காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது என்பர் பெரியோர்கள். ஹிரண்யாக்ஷன் பூமிப் பிராட்டியரை எடுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்து பூமிதேவி நாச்சியாரை தனது கோரைப் பற்களின் மேலாக மூக்கில் வைத்துக் கொண்டு வரும் போது தாயார்  மூன்று பிரதிக்ஞை செய்தார் அவையாவன

1.பெருமாளின் திருவடிகளில் இட்டு அர்ச்சனை செய்வது.
2.அவர் நாமத்தை உரக்கச் சொல்லுவது.
3. அவர் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணம் செய்வது.

கோதை நாச்சியாராக இப்பூவுலகில் பிறந்த போது இந்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றினார் பூமி பிராட்டியார்.

கீதா சாரத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி உலகத்தில் உள்ளவர்களை திருத்தவும், மேற் சொன்ன பிரதிக்ஞைகளை நிறைவேற்றவும், மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருடனின் அம்சமான, பெருமாளுக்கே வாத்ச்ல்ய பாவத்துடன் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புஷ்ப நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியின் அருகில் ஆடிப் பூரத்தன்று குழந்தையாய் தோன்றினாள் தாயார். உளம் மகிழ்ந்த பெரியாழ்வார் அக்குழந்தையை உச்சி மோந்து எடுத்து கோதை என்று பெயரிடப்பட்டு வளர்‘ந்து வரும் காலத்தில் அவளுக்கு கிருஷ்ண பக்தி என்னும் அமுதினை அளித்தார். நாச்சியாரும் கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன் ஒருவனையே தன் நாயகனாக வரித்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே, என்று

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்
என்று வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சீராக வளர்ந்து வந்தாள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

ஒரு நாள் பெரியாழ்வார் பெரிய பெருமாளுக்காக தொடுத்து வைத்திருந்த மலர் மாலையை கோதை அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டு பதைத்து. வேறு ஒரு மாலை கட்டி பெருமாளுக்கு சம்ர்பித்தார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள். ஆண்டாள் அணிந்த மாலையே தனக்கு மிகவும் உகந்தது என்று உணர்த்தினார். அன்று முதல் நாச்சியாரும் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்" என்னும் திருநாமம் பெற்றார்.

ரங்க மன்னார் திருக்கோலம்
(சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)

இவ்வாறு தன்னை ஒரு கோபிகையாக பாவித்து, பெரிய பெருமாளை கிருஷ்ணராகவும், கோவிலையே நந்தகோபன் மாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்பதற்காக திருப்பாவை 30 பாடல்கள் பாடினார். இதில் முதல் பத்தில் பெருமாளின் நாமங்களை போற்றுகின்றாள், இரண்டாம் பத்தில் அவரது உயர்வான திருவடிகளில் அர்ச்சனை செய்கின்றாள், மூன்றாம் பத்தில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து பிரதிக்ஞ்னைகளை நிறைவேற்றுகின்றாள். இவ்வாறு பூமாலையும், பாமாலையும் சூடிக் கொடுத்தாள் நாச்சியார்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் பெருமாளை வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கின்றது.

இனி ஏன் கருடனுக்கு சம ஆசனம் என்று யோசிக்கின்றீர்களா? அதற்கும் ஆண்டாள் அரங்கர் கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது. குறித்த நேரத்திற்கு அரங்கர் திருமணத்திற்கு வர முடியாமற் போய் விட்டது, பெரியாழ்வார் உட்பட திருக்கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அனைவரின் நிலையை உணர்ந்த கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளை பிராட்டியாரிடம் சேர்த்தான். இதற்கு கைமாறாக ஆண்டாள் ரங்கமன்னாரிடன் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரி சமமாக நின்று சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார். கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால் மாப்பிள்ளைத் தோழனாகவும் விளங்குகின்றார் என்பது ஐதீகம். மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும் எப்போதும் அருகில் இருப்பதாகவும் ஐதீகம்.

திருமயிலை ஆதி கேசவர் ரங்கமன்னார் -ஆண்டாள் திருக்கோலம்
(முன்னழகும் பின்னழகும்)


அர்த்த மண்டபத்தில் தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்க மன்னாரும், இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர்.ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்து கோல் (தற்காப்புக் கோல்), இடக்கையில் செங்கோல், இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆண்டாள் இடக்கரத்தில் கிளியை தாங்கி, வலக்கரம் திருவடிகளை சுட்டிக் காட்ட வைர மூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள். கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு. ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும்.
ஓம் என்னும் பிரணவ கோலம்

அ + உ + ம் = ஓம் அல்லவா? இதில் அ = பெருமாள் என்னும் பரமாத்மா, ம = ஆண்டாள் நாச்சியார் , ஜீவாத்மா, சரணாகதியின் மூலம் இருவரையும் பாலமாக இனைக்கும் கருடபகவான் = உ. இதன் மூலமும் நாம் கற்பது சரணாகதி தான். எல்லாவற்றையும் பெருமாளின் காலடியில் விடுத்து சரணமடைய அவர் மோட்சம் அளிப்பார் என்பது சத்தியம்.

கணவன் எப்படிப்பட்ட உயரிய பதவியில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக பெருமாள் திகழ்கின்றார்.

 கண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்று வேயர் குல விளக்கு விரும்பியதால் ரங்க மன்னாரே கிருஷ்ணர், ஆண்டாள் ருக்மணி, கருடன் சத்யபாமா என்று அருளுகின்றனர்.

கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

என்னங்க இந்த திவ்ய தேசத்தில் கருட சேவை சிறப்பாக இல்லையா அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சந்தேகம் எழுகின்றதா? இத்தலத்தில் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது வருடத்தில் இரு முறை கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. 
ரங்க மன்னார் கருட சேவை

ஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ர சாயி, ரங்க மன்னார், காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை திருவேங்கடமுடையான், மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன்

ஐந்து கருட சேவைக்கு எழுந்தருளும்
திருத்தண்கால் அப்பன்.

ஆகிய பெருமாள்கள் காலையில் எழுந்தருளி பெரியாழ்வாரின் மங்களாசாசனம் கேட்டருளுகின்றனர். பின்னர் மாலையில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் அன்ன வாகனத்தில் எழுந்தருள பெருமாள்கள் ஐவரும் கருட சேவை சாதிக்கின்றனர்.



No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...