தென்காசி கோவில் ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்தது



தீக்கோளினால் சிதைந்த தென்காசி கோவில் ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்தது கும்பாபிஷேக விழாவில் 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர் தீக்கோளினால் இரண்டாகப் பிளந்து சிதைந்து போன தென்காசி கோவில் கோபுரம் 178 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

கலை அழகும், சிற்ப சிறப்புகளும் கொண்ட தமிழ்நாட்டு கோவில்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இவற்றில் அமைந்துள்ள ராஜகோபுரங்கள் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றுவது போல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.
 
சென்ற 20_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட தென்காசி உலகம்மை _ காசிவிசுவநாதர் கோவில் ராஜகோபுரம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் ஆகியவை தமிழன் பெருமையை இந்தியாவில் _ ஏன், அகில உலகமும் போற்றிப் புகழும் வண்ணம் விண்ணை முட்டும் வகையில் கம்பீரமாக காட்சி தருகின்றன.
 
நெல்லை மாவட்டம் தென்காசி, சிற்றாறு நதிக்கரையில் நெற்களஞ்சியம் சூழ அமைந்த அழகிய நகரம். சுற்றுலா பயணிகள் உள்ளங்களை குளிர வைக்கும் குற்றாலத்துக்கு இந்த தென்காசி நகரை தாண்டித்தான் செல்லவேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்காசியில் சிவத்தலங்களில் சிறப்பு மிக்க உலகம்மை _ காசிவிசுவநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ஆலயம் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
 
தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த சான்றோர் குல நாடாள்வான் பராக்கிரமபாண்டியன் என்ற மாமன்னன் கண்ட கனவினால் இக்கோவில் தோன்றியது. மன்னன் கனவில் விசுவநாதரே வந்து காசியில் உள்ள கோவில் சிதைவுற்று இருப்பதாக சொல்ல மன்னன் இக்கோவிலை கட்டினான் என்பது வரலாறு.
 
இந்த தென்காசி திருத்தலத்தை, 1429_ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1446_ல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த கோவி லுக்கு 9 நிலை கொண்ட ராஜகோபுரத்தை மன்னன் பராக்கிரம பாண்டியன் கட்ட விரும்பி 1456_ல் அந்த பணியை தொடங்கினான். 50 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பணி 1505_ல் முடிந்தது.
 
தென்காசி நகருக்கே அணிகலனாய் விளங்கிய திருக்கோவிலின் ராஜகோபுரம், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீக்கோளினால் சிதைந்து, கல்காரத்திற்கு மேலுள்ள கோபுரம் இரண்டாகப் பிளந்து விட்டது. 

கோவிலை கட்டிய பராக்கிரமபாண்டியன் கோவில் குடமுழுக்கு விழா நடத்திய போது, ஒரு பாடலைப்பாடி அதனை கல்வெட்டாக அங்கே பதித்துள்ளார். "இந்த ஆலயம் காலத்தால் சிதைவு அடையுமானால், அந்த சிதைவுகளை அகற்றிச் செப்பம் செய்பவர்களின் திருவடி யில் விழுந்து வணங்குவேன்" என்று அப்பாடலில் பராக்கிரமபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
 
அப்படி இருந்தும் களை இழந்து நின்ற ராஜகோபுரத்தை புதுப்பித்துக்கட்ட யாராலும் முடியவில்லை. பல முறை திருப்பணி குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனாலும் முயற்சி ஈடேறவில்லை. 1963_ம் ஆண்டு "தமிழவேள்" சர் பி.டி.ராஜன் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, கல்காரத்துக்கு மேல் இருந்த சிதைந்த கோபுரத்தை அகற்றியது. அதன் பிறகு பணி தொடர முடியாமல் போயிற்று.
 
அதன் பிறகு, 18 ஆண்டு காலம் கழித்து, 1981_ம் ஆண்டு ராஜகோபுரத்தைக் கட்டுவதற்கு முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அமைந்த தமிழக அரசு முயற்சி எடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆலோசனை பேரில் அந்தப் பொறுப்பு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலின் திருப்பணிக்குழு தலைவராக அவர் பொறுப்பு ஏற்றார்.
 
28_11_1984 அன்று ராஜகோபுர பணியை தொடங்கினார். பராக்கிரமபாண்டியன் 50 ஆண்டுகளாக கட்டிய ராஜகோபு ரத்தை 6 ஆண்டுகளில் கட்டி முடித்தார். முதல் நிலை மற்றும் 9_ம் நிலைகளை கட்டி முடிக்கும் செலவுகளை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் ஏற்றார். 2 முதல் 7 வரையுள்ள 6 நிலைகளும் தமிழ்நாட்டின் மற்ற திருக்கோவில்கள் வழங்கிய நிதியை கொண்டு கட்டி முடிக்கப்பட்டன. 8_வது நிலைக்கு நாடார் சமூகத்தினர் நிதி வழங்கி திருப்பணியை நிறைவேற்ற உதவினார்கள். இவ்வாறு ரூ.1 கோடி செலவில், 178 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்தது.
 
இந்தியாவில் 25 கோபுரங்களை அமைத்தவரும், அமெரிக்காவில் மீனாட்சி கோவில், வெங்கடேஸ்வரர் கோவில், கணேசர் கோவில், லெட்சுமி கோவில் ஆகியவற்றை உருவாக்கியவருமான "சிற்ப கலாமணி" எம்.முத்தையா ஸ்தபதி இக்கோபுரத்தை எழிலுற அமைத்தார்.
 
தென்காசி காசிவிசுவநாதசுவாமி ராஜகோபுர குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) 25_6_1990 அன்று காலை சிறப்பாக நடந்தது. விழாவுக்கு அன்றைய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி தலைமை தாங்கினார். பா.சிவந்தி ஆதித்தன் வரவேற்று பேசினார்.
 
புதுச்சேரி கவர்னர் சந்திராவதி, அமைச்சர் தங்கவேலு, காங்கிரஸ் தலைவர் மூப்பனார், முன்னாள் மத்திய மந்திரி அருணாசலம், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி, ஜெயந்தி நடராஜன் எம்.பி, எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
 
கும்பாபிஷேக விழாவை காண சிறப்பு அழைப்பாளர்கள் அமர்வதற்காக ராஜகோபுரத்தின் அருகில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து நிகழ்ச்சியை பார்த்தார்கள்.
 
சரியாக காலை 10_15 மணிக்கு கோபுர உச்சியில் உள்ள கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். அதே நேரத்தில் கோவில் வளாகத்தில் அமைந்த மற்ற சுவாமி சன்னதி விமானங்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்புகலூர் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையில்  120 சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை செய்தார்கள்.
 
ராஜகோபுர கும்பாபிஷேக விழா நிறை வடைந்ததும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலை அரங்கில் திருப்பணி நிறைவு விழாவும், மலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. தென்காசி பொதுமக்கள் சார்பில் சிவந்தி ஆதித்தனுக்கு 9 நிலை ராஜகோபுரத்தை கட்டியதை குறிக்கும் வகையில் 9 பவுன் தங்கச்சங்கிலியும், "இரண்டாம் அரிகேசரி பராக்கிரமபாண்டியன்" என்ற பட்டமும் வழங்கப்பட்டன.
 
கும்பாபிஷேக விழா இயல்_இசை நாடகம், கவியரங்கம் நிகழ்ச்சிகளுடன் 4 நாட்கள் நடைபெற்றது. கும்பாபிஷேகத் துக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் விடப்பட்டன. 6 லட்சம் பக்தர்கள் விழாவை நேரில் கண்டு களித்து காசி விசுவநாதரை தரிசித்தனர்.

தென்காசி ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு தலைவர் பா.சிவந்தி ஆதித்தன், காங்கிரஸ் தலைவர் மூப்பனார், புதுச்சேரி கவர்னர் சந்திராவதி, அறநிலையத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி 
திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பக்த பிரமுகர் கிருபானந்தவாரியார், மூப்பனார் ஆகியோர் புகழாரம் சூட்டினார்கள். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் கிருபானந்தவாரியார் பேசும்போது கூறியதாவது:-
 
"பராக்கிரமபாண்டியனால் கட்டப்பட்டு தீக்கோளினால் சிதைந்த இந்த கோபுரத்தை, சிவந்தி ஆதித்தன் கட்டி முடித்துள்ளார். இதுவரை யாரும் செய்யாத திருப்பணி இது. இந்த ராஜகோபுரம் உள்ளவரை சிவந்தி ஆதித்தன் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் கோபுரத்தை வணங்கும்போது கட்டியவருக்கு புண்ணியம் கிடைக்கும்."
 
இவ்வாறு கிருபானந்தவாரியார் கூறினார்.
 
ராஜகோபுரத்தின் உச்சியில் 11 கலசங்கள் எழிலுற காட்சி தருகின்றன. கோபுரத்தின் மீது ஏறி தென்காசி நகரையும், குற்றாலம் அருவியையும், சுற்றுப்புற சூழலையும் கண்டுகளிக்க 9_வது நிலையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
 
14 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இக்கோவிலுக்கு மீண்டும் திருப்பணி செய்ய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் தலைமையில் திருப்பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது. ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த குழு முடிவெடுத்துள்ளது.
 

இதனைத் தொடர்ந்து கோவில் திருப்பணி 29_8_2004 அன்று தொடங்கியது.
 

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...