சரியகுலப்பெருமாள் கதைப்பாடல்


சரியகுலப்பெருமாள் கதைப்பாடல்
          சரியகுலப்பெருமாள் கதைப்பாடல் தென்தமிழகத்தில் நிகழ்த்தப்பெற்ற ஒரு கலை வடிவம் ஆகும்.வில்லுப்பாடல் என்ற நாட்டுப்புறக் கலை வழி இப்பாடல்கள் பாடப்பெற்றன.இக்கதைப்பாடல் சரியகுலப்பெருமாள் என்னும் பிற்கால மதுரைப்பாண்டியனின் வழித்தோன்றலைப் பற்றி கூறுகிறது. கி.பி.16 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த போரைப் பற்றிய செய்தியும் போரில் மரணமெய்தி தெய்வமாகி மளையாள நாடு சென்று பின்பு தென்தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டத்தில்,குரும்பூர் என்னும் ஊரில் கோயில் கொண்டு வழிபடப் பெறும் செய்திகளையும் எடுத்தியம்புகிறது.அக்காலப் பண்பாட்டுக்கூறுகளின் தொகுப்பாக விளங்கும் இந்நூல் ஒரு வரலாற்றுக் கதைப்பாடல் ஆகும்இக்கதைப்பாடல் சுவடியைச் சேகரித்தவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழியற்புலத்தின் முன்னாள் தலைவராக இருந்த பேராசிரியர் முனைவர் தி.நடராசன் ஆவார்.
நூற்பெயர்
         இக்கதைப்பாடலின் தொடக்கத்தில் சரியகுலப்பெருமாள் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கதைத்தலைவன் சரியகுலப்பெருமாள் குரும்பூரில் கோயில் கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கதைப்பாடல் அமையப்பெற்றது.அவருடைய பெயரிலே இக்கதைப்பாடல் அமைந்துள்ளது
நூலாசிரியர்
         நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் கதைப்பாடல்களை இயற்றியவர் யாரென அறிந்துகொள்ள முடியாது.செவிவழியாக கேட்கப்பெற்று வாய்மொழிக் காப்பியமாக மலர்ந்து புலவரொருவர் மூலம் வரி வரிவடிவம் பெறும்.
      வீரன் சரிய குலநயினார்
      மெய்விளங்கும் காவியத்தை
      பாடும் மெந்தன்று நன்பியந்தன்
      பெருமாள் சொன்ன சொல்படியே
      பண்ம்பினுடன் பொன்னணஞ்சவனு
      []ரைத்தே நிக்கதையை
என்ற பாடல் அடிகள் மூலம் இக்கதைப் பாடலைப் பாடியவர் பொன்னணைஞ்சான் எனக்கொள்ளலாம்.பாடல்களில் குமரி மாவட்டச் சொற்களும் மளையாளச்சொற்களும் விரவி வருகின்றன.எனவே புலவரின் ஊர் குமரி மாவட்டமாக இருக்கலாம்.
காலம்
            இக்கதைப்பாடல் தமிழகத்தில் வேறெங்கும் நிகழ்த்தப் பெறவில்லை. கதைத்தலைவனான சரியகுலப்பெருமாள் மற்றும் அவருடைய அண்ணன் உலகுடையப்பெருமாள் ஆகியோர் குரும்பூரில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி தங்களுக்கு கோயில் அமைத்துக் கொண்டு பூசையும் கொடைவிழாவும் பெற்றதாகக் கதைப்பாடல் கூறுகின்றது.தற்போது இக்கதைப்பாடல் குரும்பூர் பகுதியில் நிகழ்த்தப் பெறவில்லை.இக்கதைத் தலைவனின் தாய்மாமன் ஜடாவர்மன் குலசேகர பராக்கிரமப் பாண்டியனின் காலம் கி.பி.1480-1507 ஆகும்.இம்மன்னனின் மறைவுக்குப்பின்  உலகுடைய பெருமாளும் அவரது தம்பியும் பிறந்து வளர்ந்து,மாமன் பழி தீர்க்கப் போரிட்டு மதுரையை மீட்டதாக உலகுடையப் பெருமாள் கதை கூறுகின்றது.எனவே கதை நிகழ்ந்த காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகும். கதைப்பாடல் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் உருவானது எனலாம்.மேலும் இக்கதைப்பாடல் உருவான காலத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், சமகாலச் செய்திகள் காலத்தைக் கணித்திட உதவுகின்றது.
            கதைப்பாடலில்,சரியகுலப்பெருமாளின் உத்தரவினால் பூதகணங்கள் மானாடு பகுதியிலிருந்து,ஆதித்தநாடார் கிணற்றிலிருந்த கல் தொட்டி ஓன்றினைத் தூக்கி வந்து குரும்பூரில் அவருடைய கோயில் முன்பு வைக்கின்றன.ஆதித்த நாடார் கல்தொட்டியைத் தேடி வருவது குறித்து,
    இருக்கிற நாளையிலேயிதைத்ததாரு மானாட்டில்
    திருத்தமுடன் நாடார்கள் சேரவங்கேகூடுவாராம்
    ஆண்டார் கிணத்தில் கிடந்து வாசற்கல்லு தொட்டிதனை
    கண்டவர்கள் தேடியல்லோ குறும்பூரு தனிலே வாறார்
    ஆதிச்சநாடாரும் ஆள் கொண்டு போனாரென்று
    காத்திருந்து தான் தேடி கண்டாரே குரும்பூரில்
    சரியகுலநயினார்தான் தன்னதியும் அரமணையும்-[485-491]
             என்ற பாடல் வழி அறியலாம்.காயாமொழி ஆதித்த நாடார்கள் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டில் மானவீரவளநாடென்றும் மானாடு என்றும் அழைக்கப்பெற்ற பகுதியில் நிர்வாகம் செய்து வந்துள்ளதாக அறிய முடிகின்றது.மேலும்,
    பூத்தமரச் சோலைகளும் பூத்தகாவும் யிளமணலும்
    நகன் படைவீடுகளும் நாடுகண்டான் தேரிகளும்
             இப்பாடல் அடியில் குறிப்பிடப்பட்டுள்ள நகன் [நளன்] படைவீடு என்பது வலங்கை நூல் என்னும் காவியத்தில்,வெங்கலராஜனென்பான் வெங்கலக் கோட்டைக் கட்டிவாழ்ந்த இடமாகும்.தற்போதுள்ள குதிரைமொழித் தேரியின் வடபகுதியில் இவ்வரலாறு நிகழ்ந்தது.வலங்கை நூலின் காலமும் கி.பி.16 ஆம் நூற்றாண்டு ஆகும்.
கதைப்பாடலின் நிலை
           சங்ககாலச் சிறப்புக்களையும் சங்ககாலத்திற்கு முற்பட்ட தொன்மைகளையும் தன்னுள்ளடக்கி குரும்பூரும் அதனுடைய சுற்று வட்டாரமும் அமைந்துள்ளது.கொற்கையும் இதனருகில்தான் உள்ளது. அந்நாளில் குடநாடு என்றும் திருவழுதி வளநாடு,தென் மதுரை என்றும் கொற்கை அழைக்கப்பெற்றது.கொற்கைத் துறைமுகமும்,முத்தும் பெரிதும் போற்றப்பட்டன.இக்காலக் குரும்பூர் அந்நாளில் குரும்பிலாதன ஸ்ரீராசேந்திர நல்லூர் என்றழைக்கப் பெற்றதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.நாகரீகம் நிறைந்த பகுதிகளாக தாமிரபரணியின் கரையோரங்களும்,அதனை அடுத்து அமைந்திருந்த தேரிப்பகுதிகளும் விளங்கின. நவத்திருப்பதிகள், நவகைலாசங்கள், மற்றும் ஆயிரக்கணக்கான சிறுவழிபாட்டு மரபிலான தெய்வக்கோயில்கள்,தொன்மச் சிறப்புமிக்க ஐயனார் கோயில்களும் இங்குதான் உள்ளன.இத்தேரிப்பகுதிதான் வில்லுப்பாடல்களின் தாயகமாகக் கருதப்படுகின்றது.
      இசைக்கலை தமிழனின் பண்பாட்டுக் கலையாகும்.இசைக்கலையை இசைத்தமிழ் என்பர்.இவ்விசைத் தமிழ் வில்லுப்பாடல் வழி கிராமப்புற வழிபாட்டுத் தமிழிசையாக மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பெற்றுள்ளது. வில்லுப்பாடல் என்ற கலைவடிவம் கதைப்பாடலை கதைத்தலைவனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும் படையலிட்டு கொடைவிழா எடுக்கின்ற நாளில் நிகழ்த்தப்பெறுகின்றது.சாமியாடுபவருக்கு சாமியைக் கொண்டு வரும் ஊடகமாக உள்ளது.கதை நிகழ்வுகளுக்கேற்ப சாமியாடல் நிகழும்.
     கோயில் கொடைவிழா நாள் குறித்தவுடன் வில்பாடும் புலவருக்குத் தகவல் கொடுத்துப் பதிவு செய்கின்றனர்.கொடை விழாவின் முதன்மையானக் குறியீடாக வில்லிசைக் கருதப்படுகின்றது.தற்காலத்தில் வில்லிசையைக் கேட்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.தமிழரின் பண்பாடுகளைச் சீரழிக்கும் ஆடல்,பாடல் என்ற நிகழ்ச்சியின் மீது ஆசை கொள்கின்றனர். வில்பாடும் நாளினைக் குறைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.முற்காலத்தில் நடைபெற்ற காலநிலை தொடர வேண்டும். தெய்வக் கோயிலுக்கு வில்பாடும் புலவர்களில் பல தலைமுறைகளாக ஒரே குல தெய்வக் கோயிலுக்குச் செல்பவர்களாக உள்ளனர். தவிர்க்க முடியாத காரணங்களினாலோ அல்லது வாரிசற்ற நிலையிலோ பிற வில்பாடும் புலவர்களை அழைக்கின்றனர்.
      இக்கதைப்பாடல் குரும்பூர் பகுதியில் வழிபாட்டில் காணப்படவில்லை. ஏனெனில்,
    1 ] சரியகுலப்பெருமாள் கதைப்பாடலை வில்பாடும் புலவர் பரம்பரையினர் உரிமை கோரி சுவடியைக் கையகப்படுத்தியபின் வழிபடுவோருக்கும் வில்பாடுவோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இக்கதைப்பாடல் கொடைவிழாக்களில் பாடாமல் விடுபட்டிருக்க வேண்டும்.
   2 ] வில்பாடும் புலவருக்கு வாரிசில்லாமல் அவருடைய குடும்பத்தில் எவரும் முன் வராததால் சரியகுலப்பெருமாள் கதைப்பாடல் பாடும் வழக்காறு நின்று போனது.
3 ] சுவடியின் எழுத்துக்களை வாசிக்க இயலாமல் போனதாலும் கையெழுத்துப்படி எழுத இயலாமல் போனதாலும் கதைப்பாடல் பாட இயலாமல் போனது.
4 ]  சரியகுலப்பெருமாள் சாமியின் கோயில் தற்போது பெயர் மாற்றமாகியும், வழிபாடு மரபுகள் பல நூற்றாண்டுகளாக வழக்கொழிந்து போனதாலும் இக்கதைப்பாடல் இனங்காண முடியாமல் போயுள்ளது.
      கல்வெட்டுக்கள்,செப்பேடுகள் முதலிய ஆவணங்களில்லாத நிலையில் மக்கள் இலக்கியமான கதைப்பாடல்கள்,மற்றும் வழிபாட்டு மரபுகள் இவற்றுள் பொதிந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டறிந்து வழங்க வேண்டியது ஆய்வாளர்களது கடமையாகும்.
       கதைப்பாடல்கள் அக்கால மக்களின் பண்பாட்டுக்கூறுகளின் காலக்கண்ணாடியாகும்.இவற்றுள் அரிய வரலாற்றுச்செய்திகள் பொதிந்துள்ளன. இத்தகையப்பாடல்களில் கற்பனைப் புனைவுகளும் இருக்கும். கதைத்தலைவனை உயர்வாகக் காட்டுவதற்கும்,பாடலைக் கேட்கும் மக்களுக்குச் சலிப்பு ஏற்படாத வண்ணம் சுவை கூட்டுவதற்கும் புனைவுகள் உதவுகின்றன.ஆயின் கதைப்பாடலின் பகுதிகளனைத்தும் கற்பனையானது என்று ஒதுக்கிவிட இயலாது.
       கதையில் பொதிந்திருக்கும் வரலாற்றுண்மைகளை பிரித்தறிய வேண்டியது அவசியமாகும்.ஏனெனில் சாதாரண மக்களின் வரலாற்றுச் சிறப்புகள் இத்தகையப்பாடல்களுள் ஒளிந்துக்கிடக்கின்றன.அவற்றை இனம் காண வேண்டியது ஆய்வாளர்களது கடமையாகும்.
       முதன்மை வரலாற்று ஆவணங்களான கல்வெட்டுகள்,செப்பேடுகள், செவ்விலக்கியச்சுவடிகள் கிடைக்கப்பெறாத நிலையில் ,அம்மக்களின் வரலாற்றை எடுத்தியம்பும் வாய்மொழி இலக்கியங்களான கும்மிப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,வில்லுப்பாடல்கள் ஆகியன உதவுகின்றன.இவ்வாறே 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியகுலப்பெருமாள் கதைப்பாடலும் குரும்பூர் நாட்டின் 16 ஆம் நூற்றாண்டு கால நிகழ்வின் பதிவாகும்.
கதைச்சுருக்கம்
       மதுரையில் பிற்காலப் பாண்டியர்களில் குலசேகரன்,வரோதையன், மதுரை வீரப்பெருமாள் உள்ளிட்ட ஐந்து சகோதரர்கள் [1480-1507] ஆட்சி செய்து வந்தனர்.சிறப்பாக நடைபெற்று வந்த அவர்களது ஆட்சிக்காலத்தில் மாற்றார் படையெடுத்து வந்தனர்.துணையாய் நின்றோர் பகையாயினர்.ஐவர் ராசாக்களும் அப்போரில் மடிந்து வீரசுவர்க்கம் புகுந்தனர்.ஐவருக்கிளையாள் பொன்னுருவியின் அருந்தவத்தால் அவளுக்கு ஐந்து புதல்வர்கள் பிறந்தனர். உலகுடையப்பெருமாள்,சரியகுலப்பெருமாள் உட்பட ஐவராவர்.மதுரை மண்ணில் தாய் மாமனுக்கேற்பட்ட அவலத்தைத் துடைத்திட வீறு கொண்டு எழுந்தனர்.மருமக்கள் போருக்கு அறைகூவல் விடுத்து மாற்றாரைப் போரில் சந்தித்தனர். மானங்காக்க நடைபெற்றப் போரில் மதுரையை மீட்டார் உலகுடையப்பெருமாள்.மாமன் பழியை அழித்தவன் என்ற பெயர் பெற்றார். கோயில்கள்,கல்வெட்டுக்கள்,செப்பேடுகள் கண்டு சிறப்புடன் 12 ஆண்டுகள் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர்.
      .தோற்றோடிய மாற்றார் படைகள் 12 ஆண்டுகள் ஆயத்தம் செய்து திடீரென மதுரையைத் தாக்கினர்.போரில் பலவீனமடைந்து தோல்வியுறும் நிலையில் உலகுடைய பெருமாள் ,சரியகுலப் பெருமாள் மற்றும் சகோதரர்கள் ,மாற்றார் கையில் இறப்பதைவிட நம்மை நாமே மாய்த்துக் கொள்வோம் எனக் கூறி தங்களைத் தானே குத்திக்கொண்டு இறக்கின்றனர். அவர்களுடைய தவ வலிமையினால் தெய்வமாகி சிவனிடம் உயர்வான பல வரங்களைப் பெறுகின்றனர்.பின்பு மளையாள நாட்டிற்குச் செல்கின்றனர்.அங்கு ஆரியங்காவில் அண்ணன் உலகுடையப்பெருமாள் தவமிருந்து மேலும் பல வரங்களைப்பெற விருப்பம் கொள்கின்றார்.தம்பி சரியகுலப்பெருமாளை, நீ நாட்டு வளங்கண்டு வா என்று ஆசி கூறி அனுப்பியதுடன்,ஆயிரத்தெட்டு சிவலிங்கங்களை அமைத்து தவசிப்பண்டாரமாய் தவத்திலிருந்தார்.
       பரிவாரங்களும்,பணியாளர்களும் சரியகுல நயினார் புறப்படுவதற்கு குதிரையை அலங்கரித்தனர்.விண்ணில் பரவும் கதிரவனைப் போல மின்னலென சரியகுல நயினாரின் குதிரைப் பறக்கிறது.எந்நாட்டாரும் போற்றும் பொன்னாடாம் மானாட்டை நோக்கி குதிரை சென்றது. சரியகுலப்பெருமாளின் ஒளி வீசும் முகத்தைக்கண்ட தெய்வங்கள் இவர் சூரியனோ, முருகனோ,கண்ணனோ என்று மயங்கி நின்றனர்.
      மானாடு தேரியில் இந்திரலோகமென அருளுடன் வீற்றிருக்கும் கருக்குவேலய்யனாரைக் கண்டவுடன் குதிரையிலிருந்து இறங்கி தம் பரிவாரங்களுடன் வணங்கினார்.பதிலுக்கு வணங்கிய கருக்குவேலய்யனார், சந்திரகுல மன்னவனே எங்கிருந்து வருகின்றீர்,என்றார்.மதுரையில் நடந்த போரில் இறந்து சிவனிடம் வரம் வாங்கியதையும் அண்ணன் உலகுடையப் பெருமாள் ஆரியங்காவிலே தவமிருப்பதையும்,நாட்டு வளம் காண தாம் வந்ததையும் கூறினார் சரியகுலப்பெருமாள்.
        எம்முடன் அமர்ந்து ஆட்சி செய் என்றார் கருக்குவேலய்யனார் உம்முடையப் பக்கத்திலே நானின்றால் என்னை யார் நினைப்பார்கள்.நான் தனியாக அமர்ந்து ஆட்சி செய்யும் ஆற்றல் மிக்கவன். எனக்கு விடை கொடுங்கள் என்று கூறிப் புறப்பட்டார்.அங்கிருந்து புறப்பட்டு உச்சித்தேரி ஏறிப் பார்த்த சரியகுலப்பெருமாளுக்கு நீரோடையும், அடர்ந்த சோலைகளும், விண்ணுயர வீடுகளும்,மதில்களும் நிறைந்த குரும்பூர் தெய்வலோகமாகக் காட்சி தருகின்றது.இதுதான் நாம் அமர்ந்து ஆட்சி புரிவதற்குகந்த இடமென்று உறுதி கொண்டார் சரியகுலப்பெருமாள் .ஆனால் அங்கு தந்தலைவெட்டி மகாதேவசாமி என்ற தெய்வம் தன்னுடைய நான்கு பரிவார தெய்வங்களுடன் கோயில் கொண்டு பூசை பெற்று வருவதைக் கண்டறிந்தார்.இப்பூசைகளை நிறுத்தி அத்தெய்வத்தையும் விரட்டி விட வேண்டுமென நினைத்தார். .கோயிலுக்குள் மாட்டையும்,ஆட்டையும் அறுத்துப் போட்டார், கோபுரத்தின் மீது பிணங்களைத் தூக்கி வைத்தார். பிண நாற்றத்தால் கோயில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.பொதுமக்கள் மகாதேவசாமி கோயிலுக்கு வருவதற்கு அச்சம் கொண்டனர்.
        பூசைகள் செய்யும் பூசாரிகள் தந்தலை வெட்டி மகாதேவ சாமியிடம் முறையிட்டனர்.கோயிலில் நடக்கும் இச்செயல்களைத் தடுத்திடக்கோரினர். அவருடய நான்கு சகோதரத் தெய்வங்கள் சரியகுலப்பெருமாளுக்குச் சிறிது இடம் கொடுத்திடப் பரிந்துரைத்தனர்.மகாதேவசாமி கோபமுற்று கண் சிவந்தார். மதுரையை விட்டு பின்பு மளையாள தேசம் விட்டு வந்து இவ்விடத்தில் குடிகொள்ள திட்டமிட்ட சரியகுலப்பெருமாளுடைய சதித்திட்டமிது. நம்மை விரட்டி விட்டு இவ்விடத்தில் ஆண்டுகொள்ள மேற்கொண்ட செயலிது.நாம்தான் வையகத்தில் வல்லவனென்று நினைத்திருந்தோம். ஆனால் நம் கோயிலிலே இடையூறு செய்யும் வல்லவனாக உள்ளான்.தனி ஒருவனாக ஒரு குதிரையில் வந்துள்ள சரியகுலப்பெருமாளை வெட்டி விரட்டிவிட வேண்டுமென உறுதி கொண்டார். அவருடைய பரிவாரப்படைகள் ஆர்ப்பரித்து நின்றன.நான்கு திசைகளிலிருந்தும் படைகள் சாரைசாரையாகக் கூடின.
        தனி ஒருவனாக நிற்கும் சரியகுலப்பெருமாள் அந்நேரம் அண்ணன் உலகுடையப் பெருமாளையும் மதுரையாண்ட தாய் மாமன்மார் குலசேகரப்பாண்டியன் உட்பட ஐவரையும் மனதிலெண்ணி தொழுகின்றார். தவமிருக்கும் அண்ணனைப் பிரிந்து வந்தோமே என்று வருந்தி, அனைவரும் வந்து உதவிட வேண்டினார்.தவத்திலிருந்த உலகுடையப் பெருமாள் அக்கணத்தில் தன்னுடைய சேனைகளுடன் வந்து இறங்கினார். மதுரை மாமன்மாரின் பூதகணங்களும் குதித்தோடி வந்து நின்றன.
         சரியகுலப் பெருமாள் சூறாவளி போலச் சுழன்று எதிரிப் படைகளுக்குள் புகுந்து வெட்டி வீசுகின்றார்.அண்ணன் பொன்முடி வேந்தன் பெரிய தம்புரானான உலகுடையப்பெருமாளும் பூதகணங்களும் எதிரிப் படைகளை அழிக்கின்றன.மகாதேவசாமியின் தம்பிமாரும் பரிவாரங்களும் போரில் மாய்கின்றன.தன்னுடைய இருப்பிடமான கோயிலை விட்டகன்று பூசைப்பெற்று வாழ்ந்திருந்த குரும்பூரை விட்டகன்று ஆத்தூருக்கு வடகரையில் தன்னுடைய தளத்தை அமைத்தார் மகாதேவசாமி .தொடர்ந்து போரை நிகழ்த்தி,எஞ்சியவர்களை அழிக்கிறார் சரியகுலப்பெருமாள்.தனக்கும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று அஞ்சிய மகாதேவ சாமி ஆத்தூர் வடகரை முக்காணி விட்டகன்று வல்லநாடு மலை ஏறி தப்புகிறார். சரியகுலப்பெருமாள், உலகுடையபெருமாள்,சிவனணைஞ்சபெருமாள், சலுவைக்காரன்,வடமாலை சூடும்பெருமாள் மற்றுமுள்ள பரிவாரங்கள் போரில் பெற்ற வெற்றியால் ஆர்ப்பரித்து நின்றனர்.தோற்றோடி சென்றவரைத் தொடர்ந்து சென்று யுத்தம் செய்வது தகாது என்று கூறி ஆத்தூரில் தீர்த்தமாடி குரும்பூருக்கு தனது பரிவாரங்களுடன் வருகின்றனர்.ஏற்றதொரு இருப்பிடத்தைக் குரும்பூரில் தேர்வு செய்து சிவனருளால் அமர்கின்றார் சரியகுலப்பெருமாள்.தக்க நேரத்தில் வந்துதவிய படைகளுக்கு நன்றி கூறி விடை கொடுத்தனுப்பினார்.ஆற்றல்மிக்க தன்னுடைய அமர்வினைக் குரும்பூர் மக்களுக்கு வெளிப்படுத்த திருவுளம் கொண்டார்.
சரியகுலப்பெருமாள் அற்புதம் செய்தல்
      குரும்பூர் நாட்டில் ஆளடிமை,வளமையுடனிருந்த வாச்சான்பெரியவன் என்பவரை ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டு தன்னுடைய சோதனைக்கு உட்படுத்தினார். அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் ஆடு,மாடு, கன்றுகளுக்கு திடீரென நோய் வாய்ப்படுமாறு செய்தார்.திடீரென தோன்றிய பிணிகளால் நிலைகுலைந்தார் வாச்சான்பெரியவன்.தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிய முக்காலத்தையும் கணித்தறியும் ஆற்றல் மிக்க குரும்பூர் சந்திரக்குட்டி சோதிடரை வரவழைத்தார்.பரல்பரத்தி பிரசன்னம் கண்டறிந்த சோதிடர், பத்திரகாளி மகனே கேள்,மதுரையாண்ட பாண்டியராசாக் குடும்பத்தினர்கள் முடிமன்னவர்கள் ஐவர் மதுரையில் நிகழ்ந்த போரில் இறந்து போனார்கள்.அவரது மருமக்கள் பேரழகன் சரியகுலப்பெருமாளும்,பொன்முடி வேந்தன் பெரிய தம்புரானான உலகுடையப்பெருமாளும் இங்கு வந்தமர்ந்துள்ளனர்.வையகத்தில் ஈடு இணையற்ற மாவீரனான சரியகுலப்பெருமாளின் திருவிளையாடல் இது.நீ அவரை வழிபட்டால் உன் குறைகளைப் போக்குவார்.உன் குடியைத் தழைக்க வைப்பார்.இது உறுதி என்று கூறி சரியகுலப்பெருமாளை வணங்கிச் சென்றார்.
கோயில் கட்டுதல்
        வாச்சான்பெரியவன் சரியகுலப்பெருமாளுக்குக் கோயில் கட்டுவதற்குஆசாரிகளை வரவழைத்தார்.கருவறைமண்டபம்,     கோட்டையுடன் இருபத்தொரு மணியுடன் கூடிய கழு மரமும் பரணும் அமைத்தார்.தினசரி பூசைகளை நடத்தி வந்தார். கோயில் பூசைகளை அவருடைய மருமகன் பொன்னின்வாச்சான் செய்து வந்தார்.மகிழ்ச்சி பொங்க குறைகளின்றி வாழ்ந்து வந்தனர்.
பூசைக்கு பால் தரமறுத்தல்
        குரும்பூரில் செல்வாக்குடன் திகழ்ந்த வாச்சான்பெரியவனுடைய பராமரிப்பில் சரியகுலப்பெருமாள் சாமி கோயில் நடைபெற்று வந்ததால் அப்பகுதியில் வசித்த அனைத்து மக்களும் தங்கள் மாடுகளில் கிடைக்கும் பாலில் ஒரு பகுதியை சரியகுலப்பெருமாள் கோயிலுக்குக் கொடுத்து வந்தனர்.பொன்னின்வாச்சான் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாலைச் சேகரித்து வந்து சாமிக்கு அபிசேகம் ,வழிபாடு செய்து வந்தார்.இவ்வாறு நடைபெற்று வந்த வேளையில்,அப்பகுதி மக்களுள் ஒருபிரிவினர் சைத்தானுக்குப் பால் கொடுப்பதில்லை என்று மறுத்தனர்.அதுகண்ட சரியகுலப்பெருமாள் கோபமுற்றார். பசுவின் பால் கொடுக்க மறுத்தவர் வீட்டிலுள்ளவர்களிடமும்,மாடுகளிடமும் தன்னுடைய அற்புதத்தைச் செய்தார். பசுவின் பால் ரத்தமானது.கீழே விழுந்து துடித்தன.பசுக்கள் படும் துன்பம் கண்டு பல்வேறு மந்திரங்கள் ஓதி தண்ணீர் வீசி எறிந்தனர்.யாதொரு பயனுமில்லை.சரியகுலப்பெருமாள் கோயிலுக்கு பால் கொடாதோர் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கும் பாலில்லை,குழந்தைகள் வாடினர். என்ன செய்வது,என்று மனம் நொந்தவர்கள்,தாங்கள் சரியகுலப்பெருமாள் கோயிலுக்குப் பால் கொடாததால் நேர்ந்ததிது என்று உணர்ந்து கொண்டனர். சரியகுலப்பெருமாள் கோயிலிருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டனர் அறியாமல் செய்த பிழை பொறுத்தல் வேண்டும்.இனி தவறாமல் பால் வழங்குவோம் என்றனர்.சரியகுலப்பெருமாளின் அருளால் குறைவின்றி வாழ்ந்தனர்.
பொன்னின்வாச்சானின் காதல் மணம்
          வாச்சான்பெரியவனின் மருமகனான பொன்னின் வாச்சான் தன்னுடைய வலங்கைக் குலத்திலன்றி மற்றொரு மதத்தைச்சேர்ந்த பெண்ணொருத்தியுடன் காதல் கொண்டு மணம் புரிந்து குழந்தையும் பெற்றெடுத்தான்.அப்பெண்ணின் குலத்தார் வாச்சானின் தகாத செயலிது என்று மனதில் வஞ்சமாக வைத்துக்கொண்டு பழி தீர்க்க தக்கநேரத்தைஎதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
மந்திரமூர்த்தி செம்மான் குரும்பூர் வருதலும் கண் குருடாதலும்
          அனைத்து மந்திரம் தந்திரங்களில் தேர்ந்த மந்திரவாதி செம்மான் என்பான் திருநெல்வேலியில் வாழ்ந்து வந்தான்.அவன் குரும்பூரிலிருந்த தாசி ஒருத்தியுடன் தொடர்பு கொண்டிருந்தான்.அவளைப்பார்க்க வரும்போது குரும்பூர் பகுதிலிருந்த அப்பாவிப் பேய்கள் பூதங்களைக்கட்டிவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். நம்முடைய கோட்டைக்குள்ளே அப்பாவிப் பேய்கள் மீது மந்திரக்கட்டுகளை உபயோகிப்பது மந்திரவாதி செம்மான் என்பதறிந்த சரியகுலப்பெருமாள் ,செம்மானுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்குத் தயாராக இருந்தார்.தாசியைக் காண வழக்கம் போல குரும்பூர் நுழையும்முன் நான்கு திசைகளையும் தனது மந்திர வலிமையினால் கட்டத் தொடங்கினான்.அவன் முன்னால் சரியகுலப்பெருமாள் மாயமாய் நின்று கொண்டிருந்தார் .அவரைக்  கவனியாமல் மந்திரத்தை உச்சரித்தான் மந்திரவாதி செம்மான்.செம்மானுக்கு ஓங்கி ஒரு அடிகொடுத்து அவன் கண்களிரண்டையும் குருடாக்கினார். சரியகுலப்பெருமாள்.அடித்த அடியில் பார்வையிழந்து உடல் நடுங்கிய செம்மான் அதிர்ச்சி அடைந்தான். இதற்குக் காரணம் சரியகுலப்பெருமாள் என்பதை மந்திரசக்தி மூலம் அறிந்தான். புரண்டழுதான்,கவிபாடிப் பணிந்தான்,வணங்கி,நூற்றெட்டு பணத்துக்கு உடைவாளும் பரிசையும் வாங்கி வைக்கிறேன் சரியகுலப்பெருமாளுக்கு என்று நேர்ந்து கொண்டான்.மனமிரங்கிய சரியகுலப்பெருமாள் அவனது கண்களுக்குப் பார்வை வழங்கினார்..
கல்தொட்டியை பூதங்கள் தூக்கி ருதல்
           நீராடுவதற்கு விருப்பம் கொண்ட சரியகுலப்பெருமாள் பூதங்களை அழைத்து,மானாடு குன்றுமலை அய்யனுடைய கோயிலருகில் உள்ள உடைமரக்காட்டின் கிணற்றோரம் பெரிய கல்தொட்டி உள்ளது.அதனை தூக்கி வாருங்கள் என்று கூறினார்.பூதங்கள் கல்தொட்டியைத் தூக்கிவந்தன. இந்நிலையில் மானாட்டின் நிர்வாகியாக இருந்த ஆதித்தநாடார் தன்னுடைய கிணற்றில் கிடந்த கல்தொட்டி காணாமல் போனதறிந்தார்.அவரது வேலையாட்கள் தேடிஅலைந்து,கல்தொட்டி குரும்பூரில் ஒரு புளிய மரத்தடியில் இருப்பதை அறிந்தனர். நேரில் சென்றுl கல் தொட்டியை தூக்கிவர அசைத்துப் பார்த்தனர். ஆனால் அசைக்க முடியவில்லை. சரியகுலப்பெருமாளின் அற்புதம் கண்டு வியந்த ஆதித்த நாடார் கும்பிட்டுக் கல் தொட்டியை அங்கேயே விட்டு வந்தார்.
புதிய மணியமாக வாலா ராகுத்தன் பதவியேற்றல்
       சரியகுலப்பெருமாளை வழிபட்டு வந்தோர் வளமையான பனையேற்றத் தொழிலைச் செய்து வந்தனர்.அந்நாளில் அப்பகுதியில் வரி வசூலித்திட புதிய மணியமாக வாலா ராகுத்தன் என்ற பட்டாணி ராகுத்தன் பொறுப்பேற்றார்.வாள் வலைமையும்,நாவின் வலிமையும் கொண்ட அவன் எந்நேரமும் கஞ்சா,அபின்,சாராயம் என மதிமயக்கும் வெறியிலேயே இருந்தான்.காவலர் புடை சூழ மிகக் கடுமையாக வரி  வசூலிப்பவனாக விளங்கினான்.
பொன்னின் வாச்சான் கைது செய்யப்படல்
       பட்டாணி ராகுத்தன் பொறுப்பேற்றவுடன் ,அவனுடைய சமயத்தார் பொன்னின்வாச்சானின் காதல் மணம் பற்றிக் கூறி அவனைத் தண்டிக்க கோரினர்.பொன்னின்வாச்சானைக் கட்டி இழுத்துவர உத்தரவிட்டான் பட்டாணி ராகுத்தன்.வாச்சான்பெரியவன் வீட்டிலிருந்த பொன்னின்வாச்சானைக்கட்டி இழுத்துச்சென்றனர்.அதிகார பலம்,ஆள் பலத்துடனிருந்த பட்டாணிராகுத்தனை எதிர்க்க துணிவில்லாமல் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.
       இனம் பாராமல் பெண்ணாசை கொண்டபொன்னின்வாச்சானை புளிய மரத்தில் கட்டி அடியுங்களென்றான்.காவலர்கள் பளியஞ்சவுக்கால் அடிக்கத்தொடங்கினர்.முதல் அடி விழுந்ததும் திடுக்கிட்ட சரியகுலப்பெருமாள் நம்மை நம்பி நம் கோயிலைச் சார்ந்து வாழும் பொன்னின்வாச்சான் மீதுஒரு அடி கூட விழாமல் காப்பாற்றுவேன் என்று பொன்னின்வாச்சான் உடம்பினுள் புகுந்து கொண்டார்.விழுகின்ற அடிகள் பொன்னின்வாச்சானுக்கு எவ்வித வலியையோ,வடுவையோ ஏற்படுத்தவில்லை.ஏழுகட்டு புளியஞ் சவுக்குகளைக்  கொண்டு அடித்தும் அசையாமலும் அலறாமலும் நின்றார் பொன்னின்வாச்சான்.
       சரியகுலப்பெருமாள் பொன்னின்வாச்சான் உடம்பினுள் புகுந்து காத்துக் கொண்டிருப்பதை அறியாத பட்டாணி ராகுத்தன் பத்து நகத்தினுள்ளும் ஊசியை ஏற்றுங்கள் ,உச்சித் தலையிலே ஊசி கொண்டு அடியுங்கள் என்றான்நடப்பதையெல்லாம் உணர்வற்றவனாய் பார்த்துக்கொண்டிருந்த பொன்னின்வாச்சான் தன்னுடைய துன்பத்தையும் வலியையும் சரியகுலப்பெருமாள் தாங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தார். தன் பக்தனுடைய கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது கண்ட சரியகுலப்பெருமாள் கொதித்தெழுந்தார்.தன்னுடைய கோபத்தைப் பொன்னின் வாச்சான் வாய் வழியாக வெளிப்படுத்துகின்றார்.என்னை சுமந்தவனைக் கட்டிஅடித்துத் துன்புறுத்தினாய்.நீ செய்த கொடுமைகளையெல்லாம் இது வரை பொறுத்தேன்.இனி பொறுப்பதில்லை இன்றிலிருந்து எட்டாம் நாளில் உன்னுடைய உயிரை நான் எடுப்பேனடா என்றார். நகக்கண்ணில் ஊசி ஏற்றியாகி விட்டது.உச்சித் தலையில் ஆணி அடித்தாகி விட்டது. சவுக்கால் விளாசி விட்டோம்.ஆனால் இவனிடத்தில் எவ்விதத் தளும்போ,காயமோ, இரத்தக் கசிவோ காணப்படவில்லையே. இது என்ன மாயம்.என்று ஒதுங்கினர் காவலர்கள்.இந்த அவலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குரும்பூர் மக்கள் கண்ணீர் சிந்தினர்.விரும்பிய பெண்ணை மணம் புரிந்து நல்லவிதமாக குழந்தையுடன் வாழ்ந்துவரும் பொன்னின் வாச்சானுக்கேற்பட்ட துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினர்.
           சரியகுலபெருமாள் மீண்டும் பேசினார். என்னை நம்பியிருந்தவனை நீ கொடுமை செய்தபடியாலே நீ இவ்விடம் விட்டு அச்சத்தால் அகன்று போகும்போது முக்காணி தாண்டுவதற்குள் உன்னைக் கொன்று அந்த சாலையிலே கருப்புக்கட்டி,புண்ணாக்கு உனக்கென வைக்காவிடில் சரியகுலப்பெருமாள் நானல்ல என்று உறுமினார்.
            வாள்நாளில் அதுவரை கேட்டிராத உறுமலையும் சப்தத்தையும் கேட்ட பட்டாணி ராகுத்தன் உள்ளத்தில் அச்சம் ஏற்பட்டது.தன்னுடைய காவலர்களை அழைத்து வரிவசூல் செய்யக்கூறி, பணங்களையும், பொன்னையும் பொருளையுமேற்றி புறப்படக் கூறினான்தன்னுடைய பட்டத்துக்குதிரையிலேறி தக்கப் பாதுகாப்புடன் புறப்பட்டான். ஆத்தூரையடைந்து ஆற்றுக்குள் இறங்கி மறுகரை அடைந்து முக்காணிக்குள் நுழைகிறான். சரியகுலப்பெருமாளின் அற்புதத்தால் பட்டாணி ராகுத்தனின் பட்டத்துக்குதிரை கால் மடிந்து குப்புற விழுந்தது.நிலை தடுமாறி கீழே விழுந்த ராகுத்தனைக் காவலர்கள் தாங்கிப்பிடித்தனர் அவன் வாயிலிருந்து இரத்தம் பீறிட்டது. காவலர்கள் திகைத்தனர். கீழே விழுந்த பட்டத்துக்குதிரை அலறியவாறு உயிரை விட்டது.பட்டத்துக்குதிரை உயிரை விட்டது கண்ட பட்டாணி ராகுத்தன் பதறினான்.வல்லவன் சரியகுலப்பெருமாளின் செயல்தானிது என்று உணர்ந்தான்.உயிர் தப்பிட,சரியகுலப்பெருமாளுக்கு கொடைகொடுக்க நூறு பொன் கொடுக்கிறேன் என்று நேர்ச்சை செய்தான். எட்டாம் நாளிலே கொல்வேன் என்று கூறியபடி தன்னுடைய வல்லயத்தால் பட்டாணி ராகுத்தனைக் குத்தித் தூக்கிக் கொன்றார் சரியகுலப்பெருமாள். இறக்கும் வேளையில் தன்னை உணர்ந்து கொண்டபடியால் ,பணிந்ததால் தன்னருகே நிற்கப் பதவி கொடுத்தார்.மேலும் பக்தர்கள் தனக்கு ஊட்டுப் படையலிட்டு வழிபடும் வேளையிலே தன்னுடைய குதிரையின் காலடியிலே கருப்புக்கட்டியும்,புண்ணாக்கும் உனக்காக வைத்துக் கும்பிடுவார்கள் என்று இடமும் வரமும் கொடுத்தார்.
           சரியகுலப்பெருமாள் தன்னுடைய அண்ணன் உலகுடையப்பெருமாள் மற்றும் பரிவாரங்களுடன் குரும்பூர் பட்டணத்தைக் காத்து வருகின்றார்.
           இக்கதை நிகழ்வுகள் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.மதுரை மற்றும் தென்தமிழகத்தில் பாண்டியராட்சியை விஜயநகர மன்னர்கள் முடிவுக்குக் கொண்டு வந்த காலகட்டத்தில் குரும்பூர் பகுதியில் நிகழ்ந்ததாகும்.
          மதம் கடந்த காதல்திருமணம்,அந்நாளில் ஏற்பட்ட சமயப்பூசலில் இறந்தவர்கள் தெய்வமாகியுள்ளனர்.இக்கதைப்பாடல் சமயப்பூசலை வெளிப்படுத்திய காரணமாகவும் தெய்வங்கள் சமயங்கடந்து பிற சமய வழிபாட்டில் நிலைபெற்றதாலும் இக்கதை வழக்கொழிந்து போயிருக்கலாம். கதை வழக்கொழிந்து போனாலும் சில மரபுகள் ,தொடர்புடையதாக உள்ளன.
           சரியகுலப்பெருமாள் வழிபாடு நிலைபெற்ற காலத்தில் நாடார் இனத்தவர்களுக்கு குல தெய்வமாகவும்,பிற சமுதாய மக்களுக்கு பொது தெய்வமாகவும் வழிபடப் பெற்றது.
          குரும்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பாதகரைசாமி என்ற தெய்வம் குறித்த வழிபாட்டுச்செய்திகள் மற்றும் வழிபாட்டு மரபுகள் சரியகுலப்பெருமாள் ஓலைச்சுவடி கூறும் கதையுடன் பொருந்தி வருகிறது.
கதைப்பாடல் வழி பொருந்திவரும் கூறுகள்  
1.கேரளாவில் ஆரியங்காவு மலையிலிருந்து குரும்பூர் வந்தமர்கின்றார் சரியகுலப்பெருமாள் = [ 1.கேரளாவில் கொழுந்து மாமலையிலிருந்து குரும்பூர் வந்தமர்கின்றார் பாதகரை சாமி ]
2.பனையேறி நாடார்கள் வழிபடுகின்றனர்  = [ 2.பனையேறி நாடார் முதலாவதாக வழிபடத்தொடங்குகின்றார் ]
3..குரும்பூரிலிருந்த பேய்களைக் கட்டிய மந்திரவாதி செம்மானின் இரு கண்களைக் குருடாக்குகின்றார்.பின்பு கண்களைக் கொடுக்கிறார்  சரியகுலப்பெருமாள். = [3.பனையேறும் வயதான பெரியவரின் இரு கண்களைக் குருடாக்கிப் பின்பு பார்வையைக்கொடுக்கிறார் பாதகரைசாமி ]
4.மானாட்டிலிருந்து ஆதித்தநாடாரின் கல்தொட்டியை சரியகுலப்பெருமாள் பூதங்கள் குரும்பூருக்குத் தூக்கி வருதல். = [ 4.பாதகரைசாமி கோயிலில் பழங்காலக் கல் தொட்டி இருந்ததாகக் கூறுகின்றனர்.பாதகரை சாமியை வழிபடும் நாலுமாவடி,பணிக்க நாடார் குடியிருப்பு நாடார் குடும்பத்தினருக்கிடையே மண உறவுகள் உள்ளன.
5.வாச்சான்பெரியவன் நாடானின் மருமகன் பொன்னின்வாச்சான் இசுலாம் சமயத்தைச்சேர்ந்த பெண்ணைக் காதல் மணம் புரிகிறான்.புதிய மணியமாக பதவியேற்ற பட்டாணி ராகுத்தன் அவனைத் தண்டித்தல்.   = [5.நாலுமாவடியில்வழிபடப்பெறும் பெண் தெய்வமான உலகுபெரியம்மனுக்கு இசுலாம் சமயத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பட்டுச்சேலை எடுத்துக் கட்டும் வழக்காறும்,விளக்கிற்கு எண்ணெய் கொடுக்கும் வழக்கமும்  முன்னாளிள் இருந்துள்ளது.தற்போது இவ்வழக்கம் நின்று போனது ]
6.பட்டாணி ராகுத்தனை முக்காணியில் வைத்துக் கொல்றார் .உயிரை விடுமுன் தன்னைப்பணிந்த அவனுக்கு ,தன்னுடைய கொடைவிழாவில் அவருடைய குதிரையின் காலடியில் பக்தர்கள் வைக்கும் படையலையும், கருப்புக்கட்டி புண்ணாக்கையும் ஏற்றுக்கொண்டு அமர அருள் வழங்குகின்றார். = [ 6.பாதகரைசாமி வழிபாட்டில் பட்டாணி உள்ளார்.குதிரைக் காலடியில் கருப்புக்கட்டியும்,ரொட்டியும் படைத்து வழிபடும் வழக்காறு உள்ளது ]

    மேற்கண்டவாறு சரியகுலப்பெருமாள் கதைப்பாடல் சுவடியில் காணப்பெறும் செய்திகள் இக்கால மக்களின் வாழ்வியற் செய்திகளுடன் பொருந்தி வருகின்றன.

2 comments:

  1. i read this story, i want kn abt the pattakari village..
    hw it create tat pattakarai village,,..
    plzzz want to knw thzzzzzz... :) can yu xplain?????//

    ReplyDelete
  2. This temple is situated at panickanadar kudieruppu.

    ReplyDelete

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...