தியாகி வீரர் வேலுச்சாமி நாடார் - (நன்றி -கருவூர் சோழன் நாடான்)


தியாகி வீரர் வேலுச்சாமி நாடார் #ஆகஸ்ட்_14

முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் இவர்களைத் தெரிந்த அளவுக்கு உங்களுக்கு வேலுச்சாமி நாடாரைத் தெரியுமா?

இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் ராமநாதபுரம் மாவட்ட அரசியலிலும், தமிழ்நாடு அரசியலிலும் இந்த வேலுச்சாமி நாடார் என்ற கேரக்டர் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.

ஆனால்... முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற கவனம் வேலுச்சாமி நாடாருக்குக் கிடைக்கப் பெறவில்லையோ என்ற சந்தேகமும் ஊடகங்களைப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும்.

ஆகஸ்டு 14-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூரில் (இதுதான் வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊர்) அவருக்கு நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது நினைவுநாள் ஆகஸ்டு 14.

வேலுச்சாமி நாடாருக்கு நினைவுமண்டபம் என்றவுடனே...  கடைசி நேரத்தில் அனுமதி கொடுக்க மறுத்தது போலீஸ்.  வேலுச்சாமி நாடாரின் மகன் போஸ் உடனடியாக எஸ்.ஐ. அணுக, அவர் உடனே ஏ.எஸ்.பி.யை அணுகச் சொல்லியிருக்கிறார். 

ஏ.எஸ்.பி., ‘யார் இந்த வேலுச்சாமி நாடார்?’ என்று கேள்வி கேட்க...
‘முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸில் 1957-ல் நடந்த அமைதி கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் இந்த வேலுச்சாமி நாடார் நினைவிடத்தைத் திறந்துவைத்தார். 

ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.யைப் போலவே பலரும் கேட்கும் கேள்வி,
யார் இந்த வேலுச்சாமி நாடார்?

1907-ம் ஆண்டு அப்போதைய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பேரையூர் கிராமத்தில் பிறந்தவர் வ.மூ.சி.வேலுச்சாமி நாடார். 

இவர் பிறக்கும்போது அவர்களின் குடும்பத்துக்கு அவர் பாட்டி காலத்தில் கட்டிய மாடிவீடு இருந்தது என்றால் அவரது பொருளாதார நிலையை யோசித்துக் கொள்ளுங்கள்! 

1936-ல் காங்கிரஸில் தீவிரமாக  இயங்கத் தொடங்குகிறார் வேலுச்சாமி. அந்த காலகட்டங்களில் முத்துராமலிங்கத்தேவரும் காங்கிரஸில் தீவிரமாக இருந்தார். தேவரையும், நாடாரையும் இணைத்தது காங்கிரஸ் கட்சி.

முத்துராமலிங்கத் தேவரோடு மிகவும் நெருக்கமானார் வேலுச்சாமி நாடார். அதற்கு அடையாளமாக 1936-ம் ஆண்டு பேரையூரில் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது.

குற்ற பரம்பரை சட்டத்தை எதிர்த்துதான் இந்தக் கூட்டம். இக்கூட்டத்தில் பேசியதற்காக முத்துராமலிங்கத்  தேவர், வேலுச்சாமி நாடார் உள்ளிட்டோர்  மீது வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது.

இந்நிலையில் 1936-ல் கமுதியிலிருந்து காங்கிரஸ் ஜில்லா போர்டு மெம்பர் ஆனார் வேலுச்சாமி நாடார்.  அதே ஆண்டில் காமராஜர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிறார்.

இந்தத் தகவல் கேள்விப்பட்டதும், காமராஜரைப் பற்றி கிண்டலடித்துவிட்டார் முத்துராமலிங்கத் தேவர். 

இதை அருகிருந்து கேட்ட வேலுச்சாமி நாடார், அப்படிப் பேசவேண்டாமே என்று தேவரிடம் கூறியிருக்கிறார். 

தேவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரையும் நெருங்க வைத்த காங்கிரஸே இருவருக்கும் இடையில் உரசலை உண்டுபண்ணியது.

1939-ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவா, நேதாஜியா என்ற போட்டியில் சீதாராமையாவை ஆதரித்தார் காந்தி. 

 நேதாஜிக்கும் காந்திக்கும் ஏற்பட்ட உரசல் இந்தியா முழுவதும் நேதாஜி ஆதரவாளர்களுக்கும் காந்தி ஆதரவாளர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது.

வேலுச்சாமி நாடார் காந்தி பக்கம். முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி பக்கம் என்று ஆனார்கள். இந்நிலையில் 1940-ம் ஆண்டு தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்குகிறார் வேலுச்சாமி நாடார். டபுள் பேரல்  ரைபிளும் வாங்குகிறார்.

காமராஜர் விவகாரத்தில், வேலுச்சாமி நாடார்- முத்துராமலிங்கத் தேவர் உறவில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில்.... வேலுச்சாமி நாடார் வாங்கிய துப்பாக்கி முத்துராமலிங்கத் தேவருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இருவருக்குமான இடைவெளி அதிகமானது.

19410-ம் ஆண்டில் பிரிட்டிஷார் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்துவதைக் கண்டித்து காந்தி இந்தியா முழுதும் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். 

அதன்படி பேரையூரில் சத்தியாக்கிரகம் நடத்த வேலுச்சாமி நாடாருக்கு காந்தியிடமிருந்து கடிதம் வந்தது மாவட்ட கமிட்டி மூலமாக. இதில் பங்கேற்று வேலுச்சாமி நாடார் அலிப்பூர் மூன்றரை மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார்.
சிறை சென்று வந்தபின் காங்கிரஸின் மாவட்ட துணைத்தலைவர் ஆகிறார் வேலுச்சாமி நாடார்.

 காமராஜரோடு நெருங்க நெருங்க முத்துராமலிங்க தேவரிடமிருந்து விலகுகிறார்!
இந்த நிலையில்தான் தேவரின் வைத்தியரான பெருமாள் பீட்டர் மூலம் வேலுச்சாமி நாடாருக்கு அறிமுகமாகிறார் இமானுவேல் சேகரன். துடிப்பான இளைஞரான இமானுவேலை காங்கிரஸ் கட்சிக்காக பட்டை தீட்டுகிறார் வேலுச்சாமி நாடார்.

 இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான அரசியல் சக்தியாக மாறுகின்றனர் வேலுச்சாமி நாடாரும், இமானுவேல் சேகரனும்!

வரலாறு திரும்புகிறது எதிர்த்திசையில்!

1936-ல் பேரையூரில் கூட்டம் போட்டு வேலுச்சாமி நாடாரைப் புகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர்...

1957-ம் ஆண்டு மீண்டும் அதே பேரையூரில் கூட்டம் போட்டார்

 வேலுச்சாமி நாடாருக்கு எதிராக. ஜூன் 28-ம் தேதி 8 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம். வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊரில் நடந்த கூட்டத்தில் அவரைப் பற்றிக் கடுமையாகப் பேசுகிறார் முத்துராமலிங்கத் தேவர்!

imanuel-sekaranமுதுகுளத்தூர் கலவரம் தொடர்பாக 1957 செப்டம்பர் 10&ம் தேதி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பணிக்கர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறது. 

அதில் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் ஆகியோரோடு கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர் வேலுச்சாமி நாடார்.

 அந்த கூட்டத்தில் இமானுவேலுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் தடித்த வாக்குவாதங்கள் நடைபெற்றபோது... இமானுவேலுக்கு ஆதரவாகப் பேசினார் வேலுச்சாமி நாடார்!

அந்தக் கூட்டத்தை தொடர்ந்து இமானுவேலுக்கும், வேலுச்சாமி நாடாருக்கும் கொலைமிரட்டல்கள் விடப்பட்டன.

இமானுவேலுவின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அறிந்த வேலுச்சாமி நாடார் அன்று இரவு இமானுவேலை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 

தலைக்குக் குறிவைக்கப்பட்டிருந்த இருவரும் பேரையூரில் பாதுகாப்பாக இருந்தனர். அதற்கு முக்கியக் காரணம் வேலுச்சாமி நாடாரிடம் இருந்த துப்பாக்கி!

மறுநாள் செப்டம்பர் 11 காலை... பாரதி விழா ஒன்றில் பேசவேண்டியிருப்பதாகச் சொல்லிக் கிளம்பினார் இமானுவேல் சேகரன்.

இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை என்று வேலுச்சாமி நாடார் தடுத்தும் இமானுவேல் கேட்காமல் புறப்பட்டார். அன்று இரவுதான் இமானுவேல் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இமானுவேலைத் தொடர்ந்து வேலுச்சாமி நாடாருக்கு கொலைமிரட்டல்கள் தொடர்ந்தன. அப்போது வேலுச்சாமி நாடாருக்கு ஐம்பது வயது!

 ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் என ஏழு பிள்ளைகளின் தகப்பன். பிள்ளைகளுக்காக உயிர்வாழவேண்டுமே என்ற எண்ணத்தில் பேரையூரிலிருந்து மூன்று மாதங்களில் காலி செய்து, மதுரைக்குச் சென்றார். அங்கேயும் கொலை நிழல்கள் துரத்தவே மணப்பாறைக்கு வந்தார். 
தனது எழுபத்து நான்காம் வயதில் 1981-ம் ஆண்டு மறைந்தார்.

காங்கிரஸூக்கு மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றி, வகுப்பு நல்லிணத்துக்காக பாடுபட்ட வேலுச்சாமி நாடாரை... இமானுவேலை கைவிட்டது போலவே விட்டுவிட்டது காங்கிரஸ்! 
வேலுச்சாமி நாடார் பற்றி இது சுருக்கமான பதிவுதான்.

#வீரர் #வேலுச்சாமி #நாடாரும் #முதுகுளத்தூர் #கலவரமும் #என்ற #நூலிலிருந்து

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...