வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு- எஸ். இராமச்சந்திரன்
thanks-thinnai.com
ஆராய்ச்சியாளர்-எஸ். இராமச்சந்திரன்வில்லுப்பாட்டுக் கதையும் கல்வெட்டுக் குறிப்புகளும்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் என்ற ஊரைச் சேர்ந்த ஆறுமுகப் பெருமாள் நாடார் என்பவரால் "வலங்கை நூல் எனும் வெங்கலராசன் காவியம்" என்ற தலைப்பில் 1979 ஆம் ஆண்டில் இவ்வில்லுப்பாட்டுக் கதை பதிப்பிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 781 (கி.பி.1605)இல் இக்கதைப்பாடல் அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப் புலவர் என்பவரால் இயற்றப்பட்டது என்பதற்கான அகச்சான்று பாடலில் உள்ளது. வில்லுப்பாட்டின் முற்பகுதியில் "வலங்கை உய்யக் கொண்டார்கள்" என அழைக்கப்பட்ட சான்றோர் குல வீரர்கள் பற்றிய புராணக்கதைகளும் வரலாற்றுச் செய்திகளும் கால ஒழுங்கின்றிக் கலந்து எழுதப்பட்டுள்ளன. அதன்பிறகு ஓரளவு வரலாற்றுச் சாயல் புலப்படத் தொடங்குகிறது. காந்தம ரிஷி மக்களாகிய வலங்கைத் தலைவர்கள் சோழநாட்டில் கோட்டை எனுமிடத்தில் ஆட்சி புரிந்து வருகின்றனர். சோழ அரசனுடன் ஏற்பட்ட பூசலில் எழுநூற்றுவர் எனப் பெயர் பெற்ற வலங்கைத் தலைவர்கள், கோட்டையிலிருந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். வலங்கைத் தலைவர்களுல் ஒருவன் கண்டி ராஜ்யத்துக்குச் சென்று ஆட்சியமைக்கிறான்; ஒருவன் தொண்டை மண்டலத்தை ஆளத் தொடங்குகிறான்; மற்றொருவன் இலங்கை ராஜ்யத்தை ஆளத் தொடங்குகிறான்; இன்னொருவன் இலங்கையிலுள்ள இளம்பனைக்கா எனப்படும் இடத்துக்குச் சென்று கள்ளிறக்கும் தொழில் செய்து பெருஞ் செல்வனாகிறான். இளம்பனைக்காவிலிருந்த அவனது வம்சத்தைச் சேர்ந்த வீரசோழ நாடான் என்பவன் ரஸவாதம் கற்றுப் பொருள் சேர்த்து அதிகாரமும் செல்வாக்கும் பெறுகிறான். அவனுக்கு வெள்ளைக்காரனின் நட்பு கிட்டுகிறது. வீரசோழ நாடான், "சாணான் காசு" எனப்படும் பொற்காசு அடித்துப் புழக்கத்தில் விடுகிறான். தனது உருவத்தைக் காசில் பொறித்து வெளியிடுமாறு வெள்ளைக்காரன் கேட்கிறான். வீரசோழ நாடான் மறுத்ததால் வெள்ளைக்காரன் வீரசோழ நாடானைக் கொன்று விடுகிறான். வீரசோழ நாடானின் மகன் வெங்கலராசன், எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி உயிர் பிழைத்துக் கப்பலேறித் தென் தமிழகக் கடற்கரைக்கு வருகிறான். குமரிக்கருகிலுள்ள மணக்குடிக் காயலில் கரையிறங்கிச் சாமிக்காட்டு விளையில் வெண்கலக் கோட்டை கட்டி வாழ்கிறான். கண்மாளர் உதவியுடன் காசு அடித்து வெளியிடுகிறான். ஒரு முறை சுசீந்திரம் தேரோட்டம் காண அவனுடைய இரு மகளிரும் சென்றிருந்த போது திருவிதாங்கோட்டு ராஜா ராமவர்மா அவர்களுள் ஒருத்தியைக் கண்டு திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். மருமக்கள் தாய மரபைப் பின்பற்றும் அரசனுக்குப் பெண் கொடுக்க விரும்பாத வெங்கலராசன் அப்பெண்ணைக் கொன்றுவிட்டு, திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குரும்பூருக்குக் குடும்பத்தினர் மற்றும் பரிவாரத்துடன் வந்து விடுகிறான். குரும்பூரையாண்ட நளன் என்பவன் வெங்கலராசனின் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விழைகிறான். தனது குலமான வலங்கை உய்யக் கொண்டார் குலத்துக்குச் சமமல்லாத குலத்தவனான நளனுக்குப் பெண் கொடுக்க விரும்பாத வெங்கலராசன் தனது மற்றொரு பெண்ணையும் கொன்றுவிட்டுத் தானும் இறந்து விடுகிறான்.
குலப் பெருமிதவுணர்வு, அதிகாரத்தை இழந்தாலும் அந்தஸ்தை இழக்க விரும்பாமை, பரிதாப மரணம் ஆகிய அவல நாடகங்களுக்குரிய கதைத்தன்மைகள் கொண்டிருந்ததால் இக்கதைப்பாடல் "வெங்கலராசன் காவியம்" என்ற பெயரில் சான்றோர் குலமக்களிடையே 17, 18, 19ஆம் நூற்றாண்டுகளிலும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வந்தது. சாமிக்காட்டு விளையில் வெங்கலராசன் அரண்மனை இருந்த இடம் முதலிய தடயங்கள் உள்ளன. வெங்கலராசன் கூட்டம் என அழைத்துக் கொள்ளும் சான்றோர் குலப் பிரிவினர் அப்பகுதியில் உள்ளனர்.
வெங்கலராசன் குறித்த கல்வெட்டுகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, இளவேலங்கால் நடுகற் கல்வெட்டுகளும், திருக்குறுங்குடிக் கல்வெட்டும் ஆகும். மேலும், திருநெல்வேலியில் அண்மையில் கண்டறியப்பட்ட "வெங்க(ல)" எனப் பொறிக்கப்பட்ட இருகாசுகளும் குறிப்பிடத்தக்கவை. அவை குறித்த விவரங்களைக் காண்போம்.
(வெங்கலராசா போர்-நடுகல், முரம்பன், ஓட்டப்பிடாரம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.)
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இளவேலங்கால் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் சகவருடம் 1469 (கி.பி.1546-47)இல் திருநெல்வேலிப் பெருமாள் எனப்பட்ட வெட்டும் பெருமாள் பாண்டிய மன்னர் முகாமிட்டிருந்த போது, வெங்கலராசா வடுகப் படையுடன் வந்து தாக்கினார். அத்தாக்குதலை எதிர்கொண்டு போரிட்ட குண்டையன் கோட்டை மறவர்கள் பதின்மர் வீர சொர்க்கம் அடைந்தனர். "மிண்டுவெட்டி சொர்க்கம் சேர்ந்த" அவ்வீர மறவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களில் இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இந்நடுகற்கள், தற்போது பாளையங்கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.அ
நெல்லை மாவட்டம் நான்குநேரி வட்டம் திருக்குறுங்குடியில் நம்பியாற்றுப் படுகையில் அணிலீஸ்வரம் என்ற பெயருடனமைந்த சிவன் கோயில் உள்ளது. அக்கோயிலில் கி.பி. 1551ஆம் ஆண்டில் வெங்கலராசா சில திருப்பணிகளை மேற்கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், "விரோதிகர வருஷம் மார்கழி மாசம் 3 தேதி ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் ராமராசா விட்டல தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான வேலம் பாட்டி வெங்கள தேவ மகாராசா" என்ற வாசகம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயவியல் ஆய்வாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன், 1995ஆம் ஆண்டில் நெல்லையில் இரு பழங்காசுகளைக் கண்டறிந்து சேகரித்தார். அக்காசுகள் வரலாற்று ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் அவர்கள் மூலமாக எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அவற்றில் "வெங்க" என்ற எழுத்துக்கள் தெளிவாகவும் "ல" என்ற எழுத்து இவ்வெழுத்துக்களுக்கு இடையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகள் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை.
இளவேலங்கால் நடுகற்களில், காலாட் படைவீரர்களான மறவர்களை (நடுகல் வீரர்களை)த் தாக்குகிற படைத்தலைவனாகக் குதிரை மீது அமர்ந்த நிலையில் கிரீடமகுடம் அணிந்த ஒருவனின் உருவம் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவன் அரச அந்தஸ்து உடையவன் என்பதை உணர்த்துவதற்காக, அவனது தலைக்குமேல் வெண்கொற்றக் குடை கவிந்திருக்கும் வகையில் பணியாளன் ஒருவன் குடை பிடித்து நிற்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இது வெங்கலராசாவின் உருவம் என்பதில் ஐயமில்லை. விஜயநகர அரசர் ராமராய விட்டலரின் காரியத்துக் கர்த்தர் எனத் திருக்குறுங்குடிக் கல்வெட்டில் குறிப்பிட்டுக் கொண்டாலும், வெங்கலராசன் முழுமையான அரச அதிகாரத்துடன் ஆட்சி செய்ய முயன்றுள்ளான் எனத் தெரிகிறது. தன் பெயரில் கண்மாளர் உதவியுடன் காசுகள் வெளியிட்டான் என வில்லுப்பாட்டு நூல் குறிப்பிடும் செய்தி சரியானதே என்பது "வெங்கல" காசுகளால் நிருபணம் பெறுகிறது; மட்டுமின்றி விஜயநகர மேலாதிக்கத்தைப் புறக்கணித்துத் தனது பெயரிலேயே காசுகள் வெளியிட்டுப் புழக்கத்தில் விட்டுள்ளான் என்பதும் கவனத்துக்கு உரியதாகிறது.
16ஆம் நூற்றாண்டைய தென்பாண்டி நாட்டுச் சூழலில் வெங்கலராசன் வரலாற்றின் பொருத்தப்பாடு:
கல்வெட்டு - காசு ஆதாரங்களால் தெரிய வருகிற வெங்கலராசாதான் வில்லுப்பாட்டு நாயகனான வெங்கலராசன் என்று நாம் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முதன்மையான தடையாக இருப்பது, அவனுடைய பூர்வீகம் பற்றிய குறிப்பேயாகும். ஆவணங்களால் தெரியவருகிற வெங்கலராசன், விஜயநகர அரசின் மகாமண்டலேஸ்வரர் ராமராய விட்டலர்க்குக் காரியகர்த்தனாக இருந்தவன்; கி.பி. 1546ஆம் ஆண்டில் ராமராய விட்டலர் கன்னியாகுமரியை நோக்கிப் படையெடுத்து வந்த போது அவருடன் வந்த வடுகப் படைப் பிரிவொன்றுக்குத் தலைமை தாங்கியவன்1; வேலம்பாடு அல்லது வேலம்பாட்டி என்ற ஊரின் பெயரைக் குடும்பப் பெயராகக் கொண்டவன் என்பன போன்ற விவரங்கள் கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன. வேலம்பாட்டி என்ற ஊர் காளஹஸ்தி (காளத்தி)க்கு மேற்கே அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் வெங்கலராஜா கண்டிகை என்ற ஊரும் உள்ளது. எனவே வெங்கலராசனின் ஊர், இந்த வேலம்பாட்டியே என்பது உறுதியாகிறது. ஆனால் வில்லுப்பாட்டு, வெங்கலராசன் வீர சோழநாடான் மகன் என்றும் இலங்கையிலுள்ள இளம்பனைக்காவை ஆண்டவன் என்றும் வெள்ளைக்காரனால் துரத்தப்பட்டவன் என்றும் குறிப்பிடுகிறது. இதுவே முதன்மையான முரண்பாடாகும். ஆனால், விஜயநகர அரசர்கள், கி.பி. 15ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, உறையூர் (திருச்சிராப்பள்ளி) முதலிய சோழநாட்டுப் பகுதிகளில் தெலுங்குச் சோழர் குலத்தைச் சேர்ந்தவர்களை மண்டலேஸ்வரர்களாக நியமித்திருந்தனர் என்பதையும் அவர்களுள் சிலரை இலங்கையில் தமது பிரதிநிதிகளாக நியமித்திருந்தனர் என்பதையும் நாம் அறிந்து கொண்டால் இம்முரண்பாடு வெறும் வெளித்தோற்றமே என்பது புலனாகும்.2 வெங்கலராசனின் முன்னோர்கள் சோழராட்சிக் காலத்தில் கோட்டை எனுமிடத்தில் ஆட்சி செய்தனர் என்ற புராணமும் வரலாறும் கலந்த வில்லுப்பாட்டுக் குறிப்புகூட ஆந்திர மாநிலத்திலுள்ள அமராவதிப் பிரதேசத்தைக் குறிக்கக்கூடும். "கோட்டை அரசர்கள்" என்றே அமராவதிச் சிற்றரச மரபினர் தெலுங்குதேச வரலாற்றாய்வாளர்களால் குறிப்பிடப்படுவர். "தீபாள திண்ணே" என்பது அமராவதி அமைந்துள்ள மலையைக் குறிக்கும். தெலுங்குச் சோழ அரச மரபினைச் சேர்ந்த விஜயநகர மண்டலேஸ்வரர்கள் சிலர் "அபிநவ தீபாளி வல்லப" எனக்குறிப்பிட்டுக் கொள்வதைத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணலாம்.3 எனவே வெங்கலராசனின் முன்னோர், இலங்கையின் சில பகுதிகளில் அதிகாரம் செலுத்திய தெலுங்குச் சோழர் குலத்தவர் என நாம் முடிவு செய்வது தவறாகாது. வெங்கல என்ற பெயர்கள் வெங்கல் (வெம்மையான மலை), அதாவது வேங்கடம் என்று பொருள்படக்கூடும். வெங்கல்ராவ் என்பது போன்ற ஆட்பெயர்கள் இன்று வரை ஆந்திர மாநிலத்தில் வழக்கிலுள்ளன.
இனி, கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தென்தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் பற்றி ஆராய்வது, வெங்கலராசனின் அவலமுடிவு குறித்துப்புரிந்து கொள்ள உதவும். கி.பி. 1546இல் நிகழ்ந்த விட்டலராயரின் படையெடுப்பு, அப்போது Bettibumal (வெட்டும் பெருமாள்), Iniquitibirim (உண்ணிகுட்டி வர்மா என்கிற பூதலவீரராம வர்மா) ஆகியோரின் நிலை ஆகியவை குறித்து ஏசுசபை ஆவணங்களில் கண்ட செய்திகளின் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக விவாதித்துள்ளனர். Mortem (குமரிக்கு அருகிலுள்ள முட்டம் - கோவைக் குளம்) என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு அதிகாரம் செலுத்திய முக்குவர் குலத்தலைவர் கத்தோலிக்க சமயத்திற்கு மாறிய செய்தியும் ஏசுசபை ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. இவர், பாண்டிய மன்னனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார் என்றும் கன்னியாகுமரி அரசர் என்றே அழைக்கப்பட்டார் என்றும் அறிகிறோம்.4 திருவிதாங்கூர் அரசரான பூதலவீரராமவர்மா, விட்டலராயருக்குப் பணிந்து கப்பம் கட்டித் தமது நிலையைக் காத்துக் கொண்டார். கி.பி. 1546ஆம் ஆண்டைச் சேர்ந்த கோடகநல்லூர்க் கல்வெட்டு5, விட்டலராயர் ஆணைப்படி ராமவர்மா, தாத்தப்பையங்கார் மகன் சிங்கரையன் என்பவர்க்குக் கடமை, வலங்கை முதலிய வரிகளை வசூலித்துக் கொள்ள அதிகாரம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது. விட்டலராயர், வெங்கலராசனைத் தமது காரியத்துக்குக் கர்த்தராக நியமித்துச் சென்ற பின்னர், பூதலவீர ராமவர்மா, விஜய நகர மேலாதிக்கத்தைப் பொருட்படுத்தாமல் முத்துக்குளிதுறை (காயல்பட்டணம், தூத்துக்குடிப் பகுதி)யைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார் எனத் தெரிகிறது. கி.பி. 1558ஆம் ஆண்டில் இந்நிலை நிலவிற்று என அறிஞர் ஆர். சத்தியநாத ஐயர் எழுதியுள்ளார்.6 இது இஸ்லாமிய மரக்காயர்களின் கடற்படை வலிமையின் துணை கொண்டு சாதிக்கப்பட்டிருக்க வேண்டும். "பூதலவீரராம" எனப் பொறிக்கப்பட்ட காசுகள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் கண்டறியப்பட்டுள்ளது.7 இக்காசுகள், ராமவர்மா சுயாட்சியடைந்துவிட்டார் என்பதையும் நெல்லைச் சீமையின் கடற்கரைப் பகுதி அவரது ஆதிக்கத்தில் இருந்துள்ளது என்பதையும் உணர்த்துகின்றது.
சற்றொப்ப இதே காலகட்டத்தில் தன்மப் பெருமாள் குலசேகரதேவன் என்றும் திருநெல்வேலிப்பெருமாள் என்றும் வெட்டும் பெருமாள் என்றும் அழைக்கப்பட்ட கோமாறவர்மன் ஸ்ரீவல்லபன் (சீவலமாறன்) தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். இவருடைய ஆட்சிக் காலத்திலேயே தென்காசிப் பாண்டியர்கள், பலவிதமான மனச் சமாதானங்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்ள நேர்ந்தது. தலைநகரான தென்காசியிலேயே பூதலவீர ராமவர்மாவுக்கு உதவி புரிந்த "வன்னியர்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் குலப் பிரிவினரின் மூப்புக்கூறு ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது எனப் பாளையப்பட்டுகளின் வம்சாவளி மூலம் தெரியவருகிறது.8 பெயரளவுக்காவது தமது அதிகாரத்தைக் காத்துக் கொள்வதற்காகத் தென்காசிப் பாண்டிய அரச வம்சத்தவர், கள்ளர்-மறவர் குலத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களுடைய படைத்துணையை உறுதிப்படுத்திக் கொண்டனர். கோசடிலவர்மன் அழகன் பெருமாள் அதிவீரராமரான ஸ்ரீவல்லபதேவன், கி.பி. 1565ஆம் ஆண்டில் சாம்பவர் வடகரைச் சிவன் கோயிலின் பண்டாரக் கணக்கு, திருவாழிக் கண்காணி, திருமாலை ஆகியவற்றினை நிர்வகிப்பதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டுக் கிடாரத்தூர் இராக்கதப் பெருமாள் கள்ளப்பிரான் சீவலக் காலிங்கராயனுக்குக் காணியாட்சி வழங்கினார்.9 இதே அரசன், கி.பி.1567இல் உலகு சிந்தாமணி வளநாட்டுக் கிடாரத்தூர் சீகையிலாசமுடையான் மறத்திரு வாணாதராய பெருமாளுக்குக் கிளாங்காட்டூர் ஆலயத் தர்மகர்த்தா கணக்குக் காணியாட்சி வழங்கினார்.10 இவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் செயல்பாடே, கி.பி.17 ஆம் நூற்றாண்டில் சிவகிரி, ஊற்றுமலை, நெற்கட்டுஞ் செவல், தாருகாபுரம் போன்ற பாளையப் பட்டுகள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பாளையப்பட்டுகளுள் சில சீவலமாறராசாவால் தமக்குப் பாளையப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுவது இக்காரணத்தாலேயே ஆகும்.11 மட்டுமின்றி, கம்பளத்து நாயக்கர்கள், அனுப்பக் கவுண்டர்கள் போன்ற தெலுங்கு-கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட குலத்தவரும் சீவல மாற ராசாவுக்குத்தாம் படைத்துணை புரிந்ததற்குப் பிரதியுபகாரமாகச் சில அதிகாரங்களை அடைந்ததாகச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.12
தென்காசிப் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை விஜய நகர அரசர் அச்சுதராயர், தமது தாமிரவர்ணிக் கரை திக் விஜயத்தின் போது (கி.பி. 1530) மணம் புரிந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.13 விஜயநகர அரசவம்சத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இத்தகைய மண உறவுகள் மூலம் பாண்டிய அரசின் வாழ்நாள் சிறிது காலம் நீடிக்க முடிந்தது. ஆயினும், 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை நாயக்க அரசர் (கவறை நாயுடு குலப் பிரிவைச் சேர்ந்தவர்) இரகுநாதநாயக்கர், களாவதி என்ற பெயருடைய பாண்டிய குல இளவரசியை மணம் புரிந்தார், எனக் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் செங்கல்வ காளகவி என்பவரால் இயற்றப்பட்ட "ராஜ கோபால விலாஸமு" என்ற தெலுங்கு இலக்கியத்தால் தெரியவருகிறது.14 களாவதி என்ற பெயர், கரிவலம் வந்த நல்லூர் இறைவனின் பெயராகிய "களாலிங்கர்" என்ற பெயருடன் தொடர்புடையதாகும். கரிவலம் வந்த நல்லூரைத் தலைநகராகக் கொண்டு வரதுங்கராம பாண்டியன் ஆட்சி புரிந்தார் என்றும், இவர் அதிவீரராம பாண்டியனின் சகோதரர் என்றும், கொக்கோக நூல் இயற்றியவர் என்றும் கருதப்படுகின்றன. கரிவலம் வந்த நல்லூர்க் களாலிங்கர் மீது "கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி" பாடியவர் இவரே என்று கருதப்படுகிறது. இந்நூல், குட்டித் திருவாசகம் என்றே புகழப்படும்.15களாவதி, வரதுங்கராமனின் மகளாக இருக்கலாம். இவரே இரகுநாத நாயக்கரின் பட்டத்தரசியாவார். இரகுநாத நாயக்கர்க்கும் களாவதிக்கும் பிறந்த ராமபத்ர நாயக்கர் என்பவர் சோழநாட்டுக் கடற்கரைத் துறைமுக நகரங்களை கி.பி. 1630 வரை நிர்வகித்து வந்ததோடு, கடற்படையின் துணை கொண்டு இலங்கையின் யாழ்ப்பாண ராஜ்யத்திலும் அதிகாரம் செலுத்த முயன்றுவந்தார்.16 இவருக்கு இராமேஸ்வரம் பாண்டி நாட்டுக் கொற்கை போன்ற துறைமுக நகர்களுடன் தொடர்பிருந்ததாகக் ஊகிப்பதற்கு ஆதாரம் உள்ளது.17
பாண்டிய அரச வம்சத்தவர் மிகவும் வலிமையிழந்த நிலையிலிருந்த இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் கடற்படை வலிமை வாய்ந்த போர்ச்சுகீசியர் ஆதிக்கம் செலுத்திவந்தனர். வெங்கலராசனின் தகப்பன் வீர சோழ நாடான் பொற்காசு அடித்து வெளியிட்ட போது வெள்ளைக்காரன் தனது உருவத்தைப் பொறித்து வெளியிடச் சொன்னான் என்றும், வீர சோழநாடான் அதற்கு மறுத்ததால் வெள்ளைக்காரன், வீரசோழநாடானைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் வில்லுப்பாட்டு நூல் குறிப்பிடுவது, இலங்கை அரசியலில் போர்ச்சுகீசியர் ஊடுருவலையும் ஆதிக்கத்தையும் குறிக்கும் சான்றுகளாகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாரசீகரின் தலையீட்டால் நேபாள அரசன் தனது ராஜ்யத்தை விட்டுப் புகலிடம் தேடிவந்து தஞ்சை நாயக்கரின் அரண்மனையில் தங்கியிருந்தான் என 'சாஹித்ய ரத்னாகரம்' என்ற நூலால் தெரியவருகிறது. இந்நூலில் பாரசீகர் எனக் குறிப்பிடப்படுவோர் போர்ச்சுகீசியரே என்றும், நேபாள அரசன் எனப்படுபவன் யாழ்ப்பாண ஆரியச் சக்ரவர்த்தி வம்சத்தவனே என்றும் அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். யாழ்ப்பாண அரசில் மட்டுமின்றி, கண்டி அரசியலிலும் போர்ச்சுகீசியர் தலையீடு அதிகரித்துவந்தது. அரச குடும்பத்தவரிடையே கத்தோலிக்க சமய மதமாற்றம் நிகழத் தொடங்கிற்று. தென்பாண்டி நாட்டைப் பொருத்தவரை கடற்கரைப் பரதவர்கள் ஒட்டு மொத்தமாகக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களாக மாறிவந்தனர். கி.பி. 1540 அளவில் போர்ச்சுகீசியரான பிரான்சிஸ் சேவியர், விஜய ந்கரப் படைகளுக்கு எதிராகப் பரதவர்களின் அணியை வழிநடத்திய படைத்தலைவராகவே இருந்தார் என்றும், பின்னர் திருவிதாங்கோட்டு அரசர் ராமவர்மாவுக்கும் விஜயநகர அரசர்க்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார் என்றும் சில வராலாற்றாய்வாளர்கள் எழுதியுள்ளனர்.18 இது எந்த அளவுக்குச் சரியான செய்தி எனத் தெரியவில்லையாயினும், பூதலவீர ராமவர்மா போர்ச்சுகீசியரின் கடற்படையைத் துணை கொண்டு இயங்கிய முத்துக்குளிதுறைப் பரதவர்கள், விஜய நகர அரசு ஆகிய முத்தரப்பினரிடையிலும் ஒருவித ஒப்பந்தம் நிலவிற்று என்றும், பூர்விக அரச மரபினரான பாண்டியர்களே தமது இருப்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டுக் கவறை நாயுடு சமூகத்தவரான நாயக்க அரசர்களுக்குப் பெண் கொடுத்து மண உறவு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதென்றும், இத்தகைய சூழலின் காரணமாக வெங்கலராசன் வெற்றிகரமாகச் செயல்படவும் தனது அரசியல் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் இயலாத நிலை உருவாகி விட்டதென்றும் தெளிவாகத் தெரிகின்றன. கி.பி. 1565 அளவில் மதுரை நாயக்க அரசர் குமார கிருஷ்ணப்ப நாயக்கர், கண்டியின் மீது படையெடுத்துச் சென்று கண்டியரசனைக் கொன்று அந்த அரசைக் கைப்பற்றினார் என்றும், தமது மைத்துனர் விஜயபூபால நாயக்கரைக் கண்டியின் ஆளுநராக நியமித்தார் என்றும் அதிலிருந்து கண்டி நாயக்கர் வம்சம் உருவாக்கப்பட்டது என்றும் "சிம்ஹளத்வீபகதா" என்ற நூலால் தெரிய வருகிறது.19 இத்தகைய சூழலில், வலிமையான கடற்படை மற்றும் காலாட்படையின் உதவியோ, அரசியல் உறவுகளோ இன்றித் தனித்து விடப்பட்ட வெங்கலராசன் வீழ்ச்சியின் விளிம்பை நோக்கிச் சென்றது தவிர்க்க இயலாததே.
இந்த இடத்தில், மதுரை நாயக்கராட்சி உருவான விதம் குறித்த பழங்கதைகளும் ஆராயப்பட வேண்டியவையாகின்றன. சந்திரசேகர பாண்டியனுக்கும் வீரசேகர சோழனுக்கும் ஏற்பட்ட பூசலில் சந்திரசேகர பாண்டியன் ஆட்சியிழந்தான் என்றும், விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயரையணுகித் தனது ஆட்சியை மீட்டு வழங்குமாறு சந்திரசேகர பாண்டியன் வேண்டுகோள் விடுத்ததால் கிருஷ்ணதேவராயர் படையுடன் நாகம நாயக்கரையனுப்பிப் பாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்துமாறு ஆணையிட்டார் என்றும் நாகம நாயக்கர் தாமே ஆட்சியைப் பிடித்துக் கொண்டார் என்றும், நாகம நாயக்கர் மகன் விஸ்வநாதன் கிருஷ்ணதேவராயருக்கு விசுவாசத்துடன் நடந்து கொண்டு தந்தையையே போரில் வென்று சிறைப்பிடித்தார் என்றும் அதனால் மனமகிழ்ந்த கிருஷ்ணதேவராயர், விஸ்வநாதநாயக்கரையே மதுரையின் ஆளுநராக நியமித்தார் என்றும் பழங்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கல்வெட்டு, செப்பேடு போன்ற ஆதாரங்களை ஆராய்ந்தால், இன்றைய சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இலங்கையோடு கடல் வழித் தொடர்பு கொள்வதற்கு வசதியான இடங்களில் தான். நாகமநாயக்கர், சந்திரசேகரபாண்டியன் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.20 திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிங்கம்புணரி உருத்திர கோடீஸ்வரர் ஆலயத்தில் சுபானு வருடத்தை (கி.பி. 1523)ச் சேர்ந்த கல்வெட்டில் "நரஸிங்ஹராயஸிம்ஹாஸனத்து சந்த்ரசேகர பாண்ட்ய" என்ற குறிப்பு காணப்படுகிறது.21கிருஷ்ண தேவராயரின் ஆதரவுடன் இப்பாண்டிய மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான் என்பது நரசிங்கராய சிம்ஹாஸநம் என்ற குறிப்பால் தெரிய வருகிறது. கி.பி. 1542இல் அச்சுதராயரையடுத்து ஆட்சிக்கு வந்த விஜயநகர் அரசர் சதாசிவராயர், திருவாடானைப் பாண்டியர்களை ஒடுக்கினார் எனச் சில வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர். அது சரியானதாக இருக்குமானால் சந்திரசேகர பாண்டியனைத் திருவாடானைப் பாண்டியனாகவே கொள்ள வேண்டும். வீரசேகர சோழன், திருச்சிராப்பள்ளியை ஆண்டு வந்தான் என்றும், அவனுக்கும் சந்திரசேகர பாண்டியனுக்கும் பூசல் ஏற்பட்டதென்றும் அதன் விளைவாகவே கொடியம் நாகம நாயக்கர் தமிழக அரசியலில் தலையிட்டார் என்றும் "தம்மம் பட்டி திருமலை முத்து மாதா நாயக்கர் வம்சாவளி" குறிப்பிடுகிறது.22 பழனி சின்னப்ப நாயக்கர் வம்சாவளியோ, ஈழத்துராசா, குறுமன்னியர் உதவியுடன் பாண்டிய தேசத்தைக் கட்டிக் கொண்டமையால் நாகம நாயக்கரும் விருது கட்டாரி சாளுவ நாயக்கரும் ஈழத்தரசனுடன் போரிட்டனர் என்று குறிப்பிடுகிறது.23 இத்தகைய குறிப்பிலுள்ள குழப்பங்களை நீக்கி, ஒத்த கருத்தை உருவாக்கினால் தெலுங்குச் சோழ மரபினனான வீரசேகர சோழன் மகன் வேலம்பளட்டி வெங்கலதேவ மகாராசன், விஜயநகர அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உறையூரிலிருந்து கொண்டு ஈழநாட்டின் சில பகுதிகளை நிர்வகித்து வந்தான் என்றும், போர்ச்சுகீசியருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஈழத்திலிருந்து விரட்டப்பட்டுத் தமிழகத்திற்கு வந்தான் என்றும் உறையூர் (திருச்சிராப்பள்ளி) தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் கவறை நாயுடு குலத்தவரின் நாயக்கத்தனம் உருவாகிவிட்ட நிலையில் அங்கு குடியேற இயலாமல் இலங்கை வன்னியர்களின் துணையுடன் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் காலூன்ற முயன்று சந்திரசேகர பாண்டியனுடன் போரிட்டான் என்றும், விட்டலராயரின் ஆதரவுடன் நெல்லைச் சீமையில் அதிகாரம் செலுத்த முயன்றான் என்றும், இவற்றுள் எந்த முயற்சியிலும் முழு வெற்றி கிட்டாமலும் குறுகிய காலம் சுயாட்சியமைத்த பிறகு கூட நட்பு அரசர்களின் துணையின்றிப் போனதாலும் தென்குமரிக்கருகே மணக்குடி காயல் பகுதிக்குச் சென்று வாழ்ந்தான் என்றும் யதார்த்தமான அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இயலாமல் பழைய யுகத்தின் பிரதிநிதியாக வாழ்ந்து மறைந்தான் என்றும் முடிவு செய்யலாம்.
வெங்கலராசன், சாமிக்காட்டுவிளையை விட்டுத் திருச்செந்தூர்க்கு அருகிலுள்ள குரும்பூரில் குடியேறினான் என்றும், குரும்பூரையாண்ட நளன் என்பவன் பெண் கேட்டபோது அவனுக்குப் பெண்கொடுக்க விரும்பாமல் பெண்ணைக் கொன்றுவிட்டுத் தானும் உயிர்துறந்தான் என்றும் வில்லுப்பாட்டு குறிப்பிடும் செய்தி வரலாற்றுக்குப் பொருந்தக் கூடியதா என ஆராய்வோம். குரும்பூர்ப் பகுதியில் மிகப் பெரிய மணல் தேரிக்காடு உள்ளது. அக்காட்டுப் பகுதியில் நளன் துலா எனப்படும் இடம் உள்ளது. அங்குதான் குரும்பூர் அரசன் நளன் துலாவினால் நீரிறைத்த கிணறு இருந்ததாக நம்பப்படுகிறது. இக்கதையில் குறிப்பிடப்படும் நளன் என்ற பெயர் ஓர் அடையாளப் பெயராக இருக்கலாம். இலங்கை வழக்கில் கள்ளிறக்கும் தொழில் புரியும் 'நளவர்' என்ற சாதிப் பெயரே இவ்வாறு குறிப்பிடப்பட்டது எனக் கொண்டால், சான்றோர் குலத்தின் தாழ்ந்த பிரிவாகக் கருதப்படும் கள்ளச் சான்றோர் பிரிவைச் சேர்ந்த ஒருவனே நளன் எனக் குறிப்பிடப்படுகிறான் என முடிவு செய்யலாம். கள்ளர் குலத்தவர் 'நிஷாதர்' எனக் குறிப்பிடப்படும் மரபு உண்டு. நிஷத ராஜனான நளன் என்ற காவிய நாயகனின் பெயருடன் குரும்பூர் நளனின் பெயரைத் தொடர்புபடுத்திப் பார்த்தாலும் நளன் கள்ளச் சான்றார் குலத்தவன் என்ற முடிவுக்கு வர இயலும். பொதுவில், குரும்பூர் நளன், தானும் சான்றோர் குலத்தின் ஒரு பிரிவைச் சார்ந்தவனே என்பதால்தான் வெங்கலராசனிடம் பெண் கேட்டான் என நாம் ஊகிப்பது தவறாகாது. ஆயினும், சோழ அரச குல மூலத்துக்கு உரிமை கோரிய வெங்கலராசனின் பாரம்பரியப் பெருமித உணர்வு, இத்தகைய மண உறவை ஏற்க மறுத்துள்ளது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குரும்பூர்த் தேரிக் காட்டையட்டியுள்ள பகுதிகளில் ஏழுகரைக்காரர் என்றும் எழுகரை முகரியராயர் என்றும் அழைத்துக் கொண்ட சிலர் ஆண்டுவந்தனர் என்றும் அத்திபெரியான், அறம்வளர்த்தாண்டான், வெட்டியாண்டான், சரவணப்புதியவன், சிம்மங்கரையான், பின்னங்கரையான், குமரிக்கரையான் போன்ற பெயர்கள் கொண்ட அக் கரைக்காரர்கள், 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேறிடங்களிலிருந்து வந்த அரச குலச் சான்றோரிடம் போரிட்டுச் சரணடைந்தனர் என்றும், இவ்வரலாறு குறித்த செப்பேடு ஒன்று, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை மானவீர வளநாடு (மானாடு) கலியுகவரதர் ஐயனார் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்தர விழாவின் போது வாசிக்கப்படும் என்றும் 'பாண்டிய தேச ஆதித்த வம்ச வரலாறு' என்ற நூலில் மாசிலாமணி நாடன் என்பவர் (பதிப்பு: 1936) குறிப்பிடுகிறார். சாத்தான்குளம் அருகிலுள்ள பழங்குளம் என்ற ஊரிலிருந்த வேளாளர் சமூகத்தவர் அச்செப்பேட்டினைப் பராமரித்து வந்தனர் என அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரைக்காரர் என்றும் முகரியராயர் என்றும் குறிப்பிடப்படும் இவர்கள் சான்றோர் குலத்தின் தாழ்ந்த அடுக்காகக் கருதப்படும் மேனாட்டார் அல்லது கள்ளச் சான்றோர் பிரிவினர் ஆகலாம். கரையான் என்ற பட்டத்தைப் போன்றே பெரியான் என்ற பட்டப் பெயரையும் இவர்கள் சூடியுள்ளனர். பெரியான் என்ற பட்டம் கி.பி.13, 14 ஆம் நூற்றாண்டுகளில் சூரைக் குடி வன்னியர் மரபினர் என்றும் விசயாலத் தேவன் மரபினர் என்றும் குறிப்பிட்டுக் கொண்ட கள்ளர் குலத்தாரால் சூடப்பட்டுள்ளது. கள்ளச் சான்றோர் பிரிவைச் சேர்ந்த எம்பெரும் பெரியான் என்பவர் கி.பி. 1696ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகர்கோவில் சரலூர்க் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளார்.24 மேலும், "கரை பிரித்தல்" எனப்படும் கூட்டு நிலவுடைமைப் பேறு, தஞ்சைப் பகுதிக் கள்ளர் சமூகத்தவரிடையே அண்மைக் காலம் வரை நிலவி வந்ததற்கு ஆதாரம் உள்ளது. இத்தகைய வழக்கங்களின் அடிப்படையிலும், குரும்பூர் - தேரிப் பகுதியில் இருந்த கரைக்காரர்கள் கள்ளச் சான்றோர் மரபினராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகமுள்ளன என நாம் உறுதி செய்யலாம்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலேயே நெல்லைச் சீமை, நாயக்க அரசின் பிரதிநிதிகளான தளவாய் முதலியார்களின் அதிகாரத்துக்குள் வந்துவிட்டதென்பதற்கும் சான்றுகள் உண்டு. பாளையங்கோட்டையில் அரண்மனை அமைத்து ஆண்டுவந்த சீவல மங்கை வளநாட்டுத் தலைவர் தெய்வச் சிலை முதலியார் பற்றித் தெய்வச் சிலையார் விறலி விடுதூது நூலில் மூலம் அறியலாம். இவர் தளவாய் அரியநாயக முதலியாரின் வம்சத்தைச் சேர்ந்தவர்; கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறது. இவ்வாறு, தன்னைச் சுற்றியிருந்த அதிகாரச் சூழலிலிருந்து அன்னியப்பட்டுப் போன வெங்கலராசன் அரசகுலப் பெருமிதத்தை விட்டுக் கொடுக்காமல் இறந்தகாலத்தின் இறுதிப் பிரதிநிதியாக வாழ்ந்து மறைந்தான் என்ற வரலாற்றுச் செய்தியே, 'வெங்கலராசன் காவிய'த்தால் வெளிப்படுத்தப் பெறுகிறது.
அடிக்குறிப்புகள்:
அ. இந்நடுகற் கல்வெட்டுகள் இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத்துறை கல்வெட்டுப் பிரிவினரால் படியெடுக்கப்பட்டு Annual Report on Epigraphy 300-309/1940-41இல் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. ராமராய விட்டலரின் தென்குமரிப் படையெடுப்பு குறித்து வரலாற்றாசிரியர்கள் பலர் விரிவாக விவாதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் செய்துங்க நல்லூர் என்ற ஊரையடுத்து விட்டலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூர் விட்டலராயரால் உருவாக்கப்பட்ட ஊராகும். இவ்வூரிலுள்ள பாண்டுரங்க விட்டலேஸ்வரர் கோயிலில் கி.பி.1546 ஆம் ஆண்டுக்குரிய விட்டலராயரின் கல்வெட்டுகள் உள்ளன. இவருக்குப் பணிந்து கப்பம் கட்டிய திருநெல்வேலிப் பெருமாள் அல்லது வெட்டும் பெருமாள் எனப்பட்ட சீவலமாறன்,
"தொட்டில் இருக்கத் தொடங்கிய நாள் முதலாய்
அட்டதிக்கும் நின் குடைக் கீழாயிற்றே - விட்டலையா
தன் குமரியின்றித் தனிக்குமரி கொள்ளா நீ
தென்குமரிக் கோடுவதேன் செப்பு
- எனப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடியதாக ஒரு தனிப்பாடல் உள்ளது.
2. கி.பி. 1480 தொடங்கி 1550 வரை காமையதேவர், போகையதேவர், பாலையதேவர் போன்ற பெயர்களையுடைய தெலுங்குச் சோழர் குல மண்டலேஸ்வரர்கள் வட ஆர்க்காடு தொடங்கிச் சோழமண்டலத்தின் மையப்பகுதி வரை கோயில்களை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது கல்வெட்டுகளால் தெளிவாகிறது. பார்க்க பக்கம் 466, பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974.
3. கி.பி. 1457ஆம் ஆண்டைச் சேர்ந்த பாபநாசம் கல்வெட்டில் (தொடர் எண் 108/1986 - பாபநாசம் கல்வெட்டுகள் - இரண்டாம் தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை - 60008, 2005). "சோளர் பீம சோளர் நாராயண அபிநவ தீபாளிவல்லப உறை ஊர் பூர்வாதிஸ்வரனான ----- வாச்சராசர்" என்ற மண்டலேஸ்வரர் குறிப்பிடப்படுகிறார்.
4. இவர் 'செண்பகராமன் பள்ளு' இலக்கிய நாயகனான கோவைக்குளம் செண்பகராமக் காலிங்கனே எனத் தோன்றுகிறது.
5. Annual Report on Epigraphy - 584/1916
6. History of India - Vol. II, p.339, publishers: Rockhouse & sons Ltd., Esplanade, Madras, 1941.
7. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மதுரை அலுவலகக் கல்வெட்டாய்வாளர் திரு. வெ. வேதாசலம் நெல்லையிலிருந்து இக்காசினைச் சேகரித்தார். இக்காசில் அமர்ந்த நிலையில் ஈழமனிதன் உருவமும் "பூதலவீரராம" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசினைத் திரு. பெ. வேதாசலம் நேரில் என்னிடம் காண்பித்துள்ளார். இது 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த காசு என்பது உறுதி.
8. "ஏழாயிரம் பண்ணை சிதம்பர வன்னியன் கைபீது" - பாளையப்பட்டுகளின் வம்சாவளி - தொகுதி - 4, பதிப்பாசிரியர்: க. குழந்தைவேல், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை - 1981. இக்கைபீது, சீவலமாறன் கதை என்ற இலக்கியம், 'சின்னணைஞ்சான் கதை' வில்லுப்பாட்டு நூல் ஆகியவற்றாலும் இக்காலகட்டத்து அரசியல் சூழல் தெளிவாகிறது. பார்க்க: பக்கம் 1-10, வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் - சீ. இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, 2004.
9. Travancore Archacological Series, Vol. I, Page 384.
10. Travancore Archacological Series, Vol. I, Page 386.
11. 'தாருகாபுரம் செப்பேடு' - தமிழகச் செப்பேடுகள் தொகுதி 1 - எண் 24, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு, சென்னை - 600008, 2005
12. சமூக ரெங்கபுரம் செப்பேடு, புதுப்பட்டிச் செப்பேடு, பாறைக்குட்டம் செப்பேடு ஆகியவற்றால் இச்செய்தி தெரியவருகிறது. பார்க்க புதுப்பட்டிச் செப்பேடு - எஸ்.இராமச்சந்திரன், பழங்காசு - இதழ் எண்:13; பாறைக்குட்டம் செப்பேடு - எஸ்.இராமச்சந்திரன், பழங்காசு - இதழ் எண் 14.
13. South Indian Inscriptions, Vol. VII No. 53; Vol. XXIII No. 409.
14. தஞ்சை சரஸ்வதி மகாலில் தெலுங்குப் பண்டிதராகப் பணிபுரிந்த காலஞ்சென்ற விஸ்வநாதம் அவர்களுடன் 1990ஆம் ஆண்டில் நான் தஞ்சை மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பகக் காப்பாட்சியராகப் பணிபுரிந்தபோது மேற்கொண்ட உரையாடலில் கிட்டிய செய்தியை அடிப்படையாகக் கொண்டே இக்கருத்து தெரிவிக்கப்படுகிறது. விஜயராகவ நாயக்கரின் 'விபரநாராயண சரித்ரமு' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் (பதிப்பு: திரு. N. விஸ்வநாதம், திரு. N. சீனிவாசன், சரஸ்வதிமகால் நூலகம், தஞ்சை) களாவதியின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ராஜகோபால விலாஸமு நூலில் 'களாவதி' என்ற வடிவமே (கலாவதி அன்று) மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
15. தென்காசிப் பாண்டியர் - மு. அருணாசலம், காந்தி வித்யாலயம், மாயூரம், 1977.
16. இராமபத்ர நாயக்கர் குறித்து அதிக அளவில் ஆவணங்கள் கிடைக்கவில்லை. தஞ்சைப் பெரியகோயிற் சுவரோவியங்களில் எழுதப்பட்டுள்ள ஆட்பெயர்கள், தஞ்சை மராட்டிய அரசர் பிரதாப சிம்மனின் கி.பி. 1745ஆம் ஆண்டைய அம்மாப்பேட்டைச் செப்பேடு (வரி 10), தஞ்சாவூர் மேலவாயில் சுப்பிரமணியர் கோயிலுள்ள கி.பி. 1757ஆம் ஆண்டைய செப்பேடு (வரிகள் 8-9) ஆகியவற்றில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. (தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50 - செப்பேடு எண் 4 - செ. இராசு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1983, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் - பக்கம் 231, செ. இராசு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை, 1987.)
17. "மனுநீதிச் சோழன் நிலைமையில்" நாகப்பட்டினத்தையாண்ட வடுகத்துரை ராம நாயக்கர்க்கு நெடுங்காலம் பிள்ளை இல்லாமலிருந்து இராமேஸ்வரம் இறைவனருளால் பிள்ளை பிறக்கிறது. லாட சன்யாசிகள் அப்பிள்ளையைக் கொற்கையிலிருந்த பாண்டிய மன்னனிடத்தில் சிறிது காலம் வளரட்டும் என்று விட்டுச் செல்கின்றனர். பாண்டிய மன்னன், அப்பிள்ளையைத் தனது புதையலுக்குக் காவலாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நரபலி கொடுத்துக் கொற்கையிலுள்ள வன்னி மரத்தடித் தைலக்கிணற்றில் புதைத்து வைக்கிறான். இவ்வாறு தொடர்கிற, பாடல் வடிவிலமைந்த ஒரு கதை "கிழக்கத்தி சுவாமி கதை" என்ற பெயரில் கொற்கைப் பகுதியில் பாடப்பட்டு வந்தது. இப்பாடல் சுவடி, கொற்கையையடுத்துள்ள வாழவல்லானைச் சேர்ந்த 'பக்கிள்' என்பவரின் குடும்பத்தார் வசம் உள்ளது. அவ்வூரில் கிழக்கத்தி சுவாமி பீடமும் உள்ளது. (இக்கதைப் பாடல் சுவடி, என்னால் வாசித்து எழுதிவைக்கப்பட்டுள்ளது. இன்னமும் பதிப்பிக்கப் பெறவில்லை). ராமபத்ர நாயக்கர் அவரது தம்பி விஜயராகவ நாயக்கரால் சூழ்ச்சி செய்து கொல்லப்பட்டார் என்ற ஒரு கருத்து வரலாற்றறிஞர்களிடையே உள்ளது. அதிகாரத்தை இழந்த பாண்டிய அரச குல வாரிசால் தமது மகன் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்து அவர் இறந்திருக்கலாம்.
18. A survey of Kerala History - A. Sreedhara Menon, Publishers: S. Viswanathan Private Ltd., Madurai, 1996.
19. Pages 70-71, History of the Nayaks of Madura, R. Sathyanatha Ayyar, 1924.
20. கீழக்கரைச் செப்பேடு - நாகம நாயக்கர் பெயரைக் குறிப்பிடுகிறது. Ramanathapuram - An Archaeological Guide, Dr. R. Nagaswamy & N.S. Ramaswamy - issued by the Ramanathapuram Collector - 1978.
21. வரலாறு இதழ் 11, பக்கம் 9 - மு. நளினி, இரா. கலைக்கோவன் ஆகியோர் கண்டறிந்து வாசித்த கல்வெட்டு, டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சி - 17, 2001.
22. பாளையப்பட்டுகளின் வம்சாவளி - தொகுதி 4, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1981.
23. பாளையப்பட்டுகளின் வம்சாவளி - தொகுதி 4, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1981.
24. சரலூர்க் கல்வெட்டும் துளிர்விடும் சில அனுமானங்களும் - செந்தீ. நடராசன், பழங்காசு, இதழ் எண் 13, 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019.
(சென்னை National Folklore Support Centreஇல் "வட்டாரத் தரவுகளும் கல்வெட்டு ஆதாரங்களும்" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)
maanilavan@gmail.com
நன்றி-thinnai.com
No comments:
Post a Comment