பாண்டியன் ஆரியப்படை கடந்த
 நெடுஞ்செழியன்:-
இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில்
வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களுள் ஒருவனாவன். இவன்
ஆட்சிக் காலத்திலேதான் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களுள் ஒருவனாகிய கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் வாணிகஞ் செய்யக் கருதி மதுரைக்குச் சென்றனன். அவன் அங்கு ஆயர் பாடியிலுள்ள இடைச்சியர் தலைவியாகிய மாதரியின் இல்லத்தில் தன் மனைவியை இருத்தி, அவளது சிலம்பொன்றை வாங்கிக்கொண்டு, அதனை விற்பதற்கு அகநகர்க்கும் சென்றபோது எதிரில் வந்த அரசாங்கப் பொற்கொல்லனது சூழ்ச்சியினால் கோப்பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனென்று இப் பாண்டி யனால் கருதப்பட்டுக் காவலாளனால் வெட்டி வீழ்த்தப்பட்டான்.
இத் துன்பச் செய்தியை யுணர்ந்த கண்ணகி, தன் நாயகனை ஆரா யாமல் அநீதியாகக் கொல்வித்த இவ்வாசன்பாற் சென்று தன் வழக்கை எடுத்துரைத்துத் தன் நாயகனாகிய கோவலன், கோப் பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனல்லன் என்று மெய்ப் பித்தாள். உண்மையை யுணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன், தான் ஒரு கற்புடைமகளின் கணவனை ஆராயாது கொல்வித்த மைக்குப் பெரிதும் கவன்று, அத் தீச் செயலை உன்னியுன்னி நெஞ்சம் நடுக்குற்றுத் தாழ்ந்த குடையனாய்த் தளர்ந்த செங் கோலனாய்ப்
"பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுகளன் ஆயுள்"
என்றுரைத்து அரசுகட்டிலில் மயஙகி வீழ்ந்து உயிர் துறந் தனன்.
தன் கணவன் இறந்த செய்தியை யறிந்த கோப்பெருந்தேவியும் அத்துன்பத்தை ஆற்றாது சிறிது நேரத்துக்குள் உயிர் நீத்தனள். தான் அறியாது புரிந்த ஒரு பிழைக்காகத் தன் ஆருயிரையே இவ் வாசன் போக்கிக் கொண்டனனெனில் இவனது ஆட்சிக்காலத்திற் குடி மக்கள் எல்லோரும் எத்தகைய இன்னல்களும் எய்தாது இன்புற்று வாழ்ந்திருத்தல் வேண்டுமென்று கூறுவது சிறிதும் புனைந் துரை யாகாது.
இப் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களைக் கேட்ட சேர மன்னனாகிய செங்குட்டுவன் பெரிதும் வருந்தித் தன்பால்
வந்திருந்த சங்கப்புலவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரை நோக்கி, 'புலவீர்! அவன் செங்கோலினின்று தவறிய செய்தி என்னை யொத்த அரசர்க்கும் எட்டு முன்னர் உயிர் துறந்தமை, தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே செங்கோ லாக்கியது; அரசரா யுள்ளார்க்குத் தம் நாட்டிற் காலத்தில் மழை பெய்யா தாயின் அச்சம்; உயிர்கள் தவறிழைக்குமாயின் அச்சம்; கொடும் கோற்கஞ்சிக் குடிகளைப் பாதுகாத்தற்குரிய அரசர் குலத்திற் பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லை' என்று மிகவும் இரங்கிக் கூறிய அரிய மொழிகள் ஈண்டு அறிந்து கோடற்கு உரியனவாகும்.
அன்றியும், மதுரைமாநகரம் தீப்பற்றியெரிந்த ஞான்று, கண்ணகி முன்னர்த் தேன்றிய மதுரைமா தெய்வம், நெடுஞ் செழியனது செங்கோற் சிறப்பையும் கோவலனது ஊழ்வினை உருத்துவந்து தன் பயனை நுகர்வித்ததென்னும் உண்மையினையும் விளக்கிக் கூறிய வரலாற்றைச் சிலப்பதிகாரத்திலுள்ள கட்டுளை காதையிற் பார்க்கக் காணலாம். இதனாலும் இவனது செங்கோலினது மாண்பு ஒருவாறு இனிது புலனாகும்.
இனி இவனது செங்கோற் பெருமையோடு ஒருங்குவைத்துப் புகழ்தற்குரியனவாய் அடுத்து நிற்பன இவனுடைய வீரமும் செய் தமிழ்ப்புலமையுமாகும். இவன் வடநாட்டிலிருந்த ஆரிய மன்னர் களைப் போரிற் புறங் கண்டு புகழெய்தியவன் என்பது,
'வடவாரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்கு காணப்
புரை தீர்கற்பிற் றேவிதன்னுடன்
அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்'
என்னும் இளங்கோவடிகளது அருமைத் திருவாக்கினாலும், இவனது இயற்பெயருக்கு முன்னர் அமைந்துள்ள 'ஆரியப் படை கடந்த' என்னும் அடைமொழிகளாலும் நன்கு வெளியாகின்றது.
இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவன் என்பதும், கல்வி கற்றலையே பெரும்பயனாகக் கருதியவன் என்பதும், இவன்பாடியுள்ள .183 ஆம் புறப்பாட்டினால் அறியப்படுகின் றன. 
அப் பாடல்
அடியில் வருமாறு:-
"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.
நன்றி - பாண்டியர் வரலாறு 
 
 
 
 
No comments:
Post a Comment