மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு, காமராஜர் பெயரை சூட்டுவதற்கான தீவிரத்தில், பிரதமர் மோடி இருப்பதாக செய்தி பரவ, அதற்கு வலுசேர்ப்பது போல, நாடார் மற்றும் அதற்கு இணையாக கருதப்படும் ஜாதி சங்கங்கள், அதை விரைந்து செய்ய வலியுறுத்துகின்றன.
தமிழக காங்., தலைவராக இருந்த காமராஜர், தமிழக முதல்வராகவும் இருந்தார். இவர் ஆட்சி காலத்தைத் தான், தமிழகத்தின் பொற்காலம் என, காங்., தலைவர்கள் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை, முதன் முதலில் துவங்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், பள்ளிக்கு செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததாக, புள்ளி விவரங்கள் உள்ளன.அப்படிப்பட்ட தலைவர் பெயரை, மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு சூட்ட வேண்டும் என, தமிழகத்தின் நாடார் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர்.இதனால், இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க, மோடி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து, டில்லி பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:காமராஜர் தமிழகத்தைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும், அவர் அகில இந்திய அளவில், அரசியலில் கொடி நாட்டியவர். அவரை ஜாதிய கண்ணோட்டத்துடன், யாரும் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், அவரது புகழை, ஜாதியை சேர்ந்தவர்கள் தான், சொல்ல வேண்டியதாகி விட்டது.தமிழகத்தில், நாடார்களைப் போல, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, டில்லி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பண்டாரி, ஜெய்ஸ்வால், அகுவாலியா, ஈழவா, கவுடா, பூஜாரி, கவுடு ஜாதிகளை சேர்ந்தவர்கள், கள்ளுக்காக மரம் ஏறும் பணியை செய்து வந்தனர்.இவர்கள், தங்களை வாக்னர் சேனா ஜாதி என அழைத்து, இந்தியா முழுவதும், சகோதர ஜாதிகளாக ஒன்றிணைந்து உள்ளனர். இந்தியா முழுவதும், இந்த ஜாதிகளை சேர்ந்தவர்கள் மட்டும், சுமார் 6 கோடி பேர் உள்ளனர்.அவர்கள் அவ்வளவு பேரும், மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு, தங்களின் ஆதர்ஷ தலைவராக இருந்த, காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என, விரும்புகின்றனர். இதற்காக, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், இந்துார், டில்லி, மும்பை, லக்னோ போன்ற இடங்களில், குறிப்பிட்ட இந்த ஜாதிகளை சேர்ந்தவர்கள், தீர்மானம் போட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கின்றனர்.ஏற்கனவே 1992ல், பிரதமராக நரசிம்மராவ் இருந்த போது, குமரி அனந்தனின் வேண்டுகோளை ஏற்று, மதிய உணவு திட்டத்துக்கு, காமராஜர் பெயரை சூட்ட முன் வந்தார். ஆனால், சோனியா பின்னணியில், மணிசங்கர் அய்யர் அப்போது தடுத்து விட்டார். அதனால், நரசிம்ம ராவ், தன் முயற்சியை கிடப்பில் போட்டுவிட்டார். அது முதல் இன்று வரை, அந்த திட்டத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. வேண்டுகோள்கள் நிறைய வந்திருப்பதால், மத்திய மதிய உணவு திட்டத்துக்கு, காமராஜர் பெயரை சூட்ட, மோடி முடிவெடுத்திருக்கிறார். காமராஜரை, ஜெயலலிதா புறக்கணித்திருக்கும் சூழ்நிலையில், 7 கோடி மக்களின் ஆதர்ஷ தலைவரை மதிப்பதன் மூலம், அந்த மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும், அரசியல் ரீதியில் தன்பக்கம் திருப்பவும், முடிவெடுத்திருக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment