தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கருங்கல் தூணை பலமுறை பார்த்துச் சென்றாலும் அதில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுச் செய்தியை அறிய முயற்சிக்கவில்லை.
இன்று அதை புகைப்படம் எடுத்ததுடன் அதன் செய்தியையும் அறியமுடிந்தது.அது ராவ் பகதூர் ரத்தினசாமி நாடாரின் நினைவு தூண் என்பது தான் ஆச்சரியம் !
பொறையாரில் புகழ்பெற்ற நாடார் எஸ்டேட் என்று அறியப்படும் வம்சத்தினரின் வாரிசு தான் இந்த ரத்தினசாமி நாடார். நாடார் எஸ்டேட்டின் வரலாறு 300 ஆண்டுகள் பழமையானது.
கி.பி. 1790 இல் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வியாபாரத்தின் பொருட்டு வந்து பொறையாரில் குடியேறினார் பெருமாள்சாமி நாடார்.
இவருடைய மகன் வெள்ளையன் நாடார். கள்ளுக்கடை ஏலம் எடுத்து நடத்திவந்தார்.கள்ளுக்கடையின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு சாராயம் தயாரித்து விற்பனைச் செய்யும் தொழிலைத் தொடங்கினார்.
வெள்ளைய நாடாரின் மகன் தான் தவசுமுத்து நாடார். இவருடைய காலத்தில் சாராய வியாபாரம் பல மாவட்டங்களில் ஏன் ? பல மாநிலங்களில் விரிவடைந்திருந்தது.
இதோடு தவசுமுத்து நாடார் தஞ்சை மாவட்டத்தின் பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி விவசாயமும் செய்து வந்தார். இதன் பொருட்டே இவர்களது குடும்பம் நாடார் எஸ்டேட் என்று அழைக்கப்பட்டது.
பொறையாரின் மையப் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அழகிய தோட்டத்தில் அமைந்திருந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் மாளிகையை ஆங்கிலேயரிடமிருந்து வாங்கிய வெள்ளைய நாடார் அதை தனது மகன் தவசுமுத்து நாடாருக்கு பரிசளித்தாராம். அந்த மாளிகை முன்பு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு ஆளுநர் மாளிகையாக இருந்துள்ளது.எனவே தான் இது இன்றும் கம்பெனி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.
தவசுமுத்து நாடார் தனது மாவட்ட மக்களின் கல்வித் தேவையை கருத்தில் கொண்டு 1882 இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அதுவே இன்று உள்ள தவசுமுத்து நாடார் பள்ளி.
தவசுமுத்து நாடார் 1880 ஆம் ஆண்டில் காரைக்காலில் " சத்தியாபிமணி " என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்திவந்துள்ளார்
ஆங்கிலேய அரசும் தவசுமுத்து நாடாருக்கு " ராவ் பகதூர் " பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
தவசுமுத்து நாடாரின் மூன்று மகன்களில் ஒருவர் தான் ரத்தினசாமி நாடார்!
No comments:
Post a Comment