விருதுநகர் பங்குனிப் பொங்கல் பற்றிய என் தமிழ்ப் பதிவு.
விருதுநகர் பங்குனிப் பொங்கல்.
வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர்வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன்அருளால் குடைபிடிப்பாய் - மாரியம்மா எங்கள் மாரியம்மா!
தமிழகத்தின் சராசரி மழை அளவிற்கும் குறைவாக, ஆண்டுக்கு 780மிலி மட்டுமே மழை பெறும் வறட்சியான ஊர், மதுரைக்குத் தெற்கே அமைந்துள்ள விருதுநகர். மழை பார்த்து நிற்கும் பூமியில், மழைத் தெய்வமான மாரியம்மன் வழிபாடும், மழை நீரைத் தேக்கி, நகரின் நிலத்தடி நீரைப் பெருகச் செய்திருக்கும் விருதுநகர் தெப்பக்குளமும் சிறந்து விளங்குகின்றது!
வெயில் உச்சத்தில் ஏற ஆரம்பித்து, கோடைக்கால நோய்களான அம்மை, சின்னம்மை, காலரா போன்றவை பரவ ஆரம்பிக்கும் பங்குனி மாதத்தில் வானம் பொழிய வேண்டி கொண்டாடப் படுவதே மாரியம்மன் திருவிழாவான பங்குனிப் பொங்கல். 29 நாட்கள் நடக்கும் இத்திருவிழா தான் தமிழகத்தில் அதிக நாட்கள் நடக்கும் மாரியம்மன் திருவிழா என்பதும் ஒரு சிறப்பு.
1780ம் ஆண்டு - விருதுநகர் சிறு கிராமம் விருதுவெட்டியாக இருந்த காலம். அங்கிருந்த நாடார் பெருமக்கள் மழைக்காகவும், நோய்கள் மற்றும் இயற்கை இடர்களிலிருந்து காக்க வேண்டியும், எல்லைக் காவலாகவும் ஊரின் வடகிழக்கில் சிறிய சதுரப் பீடம் அமைத்து மாரியம்மனாக வழிபட்டனர். 1850ம் ஆண்டில் அம்மன் சிலை அமைக்கப் பெற்றது. சிறிய கருவறை, அர்த்த மண்டபம், சுற்றி ஒரு பிரகாரம், வடக்கிலும், மேற்கிலும் வாசலுடன் 1923 ல் அமைக்கப் பட்ட இச்சிறு கோயில் தற்போது தங்க விமானத்துடன் தகதகத்துக் கொண்டிருக்கிறது.
விருதுநகர் நாடார்களால் கட்டப்பட்டு, விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படும் இக்கோயிலில் அனைவரும் சென்று வழிபடலாம்.
வெயிலின் வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு மக்களைக் காக்கும் வெயில் உகந்த அம்மனே விருதையின் பழமையான தெய்வமாகும். நீண்ட பற்கள், எட்டு் கரங்களில் ஆயுதங்கள், தீ மகுடத்துடன், அசுரனை அளிப்பவளாக, மூத்த சகோதரியான வெயிலுகந்தாளின் உக்கிரமான திருக்கோலம்.
இளையவள் மாரியம்மனோ நான்கு கரங்களுடன், இடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு, சாந்தமே உருவாக, அமைதியாக, மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமர்ந்த திருவடிவம். உடுக்கை, பாம்பு, கபாலம் (விருதை மக்கள் மங்கலம் அளிக்கும் குங்குமச் செப்பாகவே கொள்கிறார்கள்) ஏந்தி, அபய கரத்துடன் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
ஊருக்கு வரும் தீமையை, நமக்குள் இருக்கும் தீயவற்றை அழித்துக் காக்கும் வெயில் உகந்த அன்னைக்கும், நன்மைகளை, நல்லவற்றை அருளி நம்மை மேம்படுத்தும் மாரியன்னைக்கும் ஊரின் அனைத்து திருவிழாக்களிலும் சமஅளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரே மாதிரி அலங்காரத்தில், எப்பொழுதும் இருவரும் இணைந்தே வலம் வருகிறார்கள். வேறுபடுத்திக் காட்ட மாரியம்மனுக்கு மட்டும் மகர (பவள) மாலை, மகர கண்டிகை (பவள வளையல்) உண்டு.
பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறன்று, விருதுநகர் மற்றும் சுற்று வட்டார அனைத்து இந்து சமுதாயப் பெரியவர்களும் அழைக்கப் பட்டு, தெப்பக்குளத்தின் மேற்கேயுள்ள பிள்ளையார் கோயிலில் இரவு எட்டு மணியளவில் கூடுகின்றனர். தேவஸ்தானத்தாரால் விழா பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டு, ஊர் முழுவதும் பறையடித்து அறிவிக்கப்படுகின்றது. 'சாற்றுதல்' என்னும் இந்த நிகழ்வுடன் விரதம், நேரத்திக்கடன் செய்வோர், வீட்டில் வேப்பிலைத் தோரணம் விளங்க, கையில் காப்பு கட்டி விரதத்தைத் துவங்குகின்றனர். திருக்கோயில் அலங்கரிக்கப்பட்டு, நாள் முழுவதும் பக்தர்களுக்காகத் திறந்திருக்கின்றது. ஊரும் தோரணங்களுடன் மின் விளக்குகள் விதவிதமாய் மின்ன, மக்கள் உள்ளத்தே மகிழ்ச்சி, நெகிழ்ச்சியுடன் திருவிழா நிகழ்ச்சிகளுக்குத் தயாராகின்றது.
அடுத்த முக்கிய நிகழ்வு பங்குனி மாத மூன்றாம் ஞாயிறன்று நடக்கும் கொடியேற்றமாகும். 25 மீட்டர் நீளமான புதிய கச்சைத் துணி மஞ்சள் நீரில் நனைக்கப் பெற்று, கல்தச்சர் அதில் அம்மனின் வாகனமான சிம்ம உருவினையும் சூலத்தையும் வரைகின்றார். கோயிலிலிருந்து மேளதாளத்துடன் அவரது வீட்டிற்குச் சென்று மரியாதை செய்து, கொடியைப் பெற்று வருகின்றனர். பூசனைகள் நிகழ்ந்து இரவு எட்டு மணியளவில் கொடியேற்றப் படுகின்றது.
அடுத்து வரும் நாட்களில் அன்னையர் இருவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் திருமுழுக்காட்டு நடத்தப் படுகின்றது. அலங்கரிக்கப் பட்ட உற்சவர்கள், விநாயகர் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு, ஊரின் முக்கிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு மண்டகப் படிகளில் எழுந்தருளுகின்றனர்.
விருதுநகர் சில நூற்றாண்டுகளாக வணிகத்தில் சிறந்து விளங்கும் நகரம். அரிசி, தானியம், பருத்தி மற்றும் பலவகை வணிகம் செய்யும் விருதுநகர் இந்து நாடார் வணிகர்கள், தங்கள் வணிகக் குழுக்கள் - மகமை - மூலம் பொறுப்பேற்று ஒவ்வொரு நாள் மண்டகப் படியையும் மிகச் சிறப்புடன் நடத்துகின்றனர். இவர்களும், மதுரை, தேனி, சென்னையில் வாழும் விருதுநகர் இந்து நாடார் மகமைகளும் சேர்ந்து ஊரைக் காக்கும் அன்னையருக்கு பங்குனிப் பொங்கல் திருவிழாவில் நடத்தும் மண்டகப்படிகள் 11.
காளை, குதிரை, சிம்மம் போன்ற நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்த வாகனங்களில் அன்னையரை எழுந்தருளச் செய்து, கலைநிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் என்று பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இரவில் தெய்வங்களைக் கோயிலுக்குக் கொண்டு செல்லும் முன், கோயில் நிர்வாகத்தார் பட்டுக் கட்டி, மகமைக்காரர்களுக்கு மரியாதை செய்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பழக்கம் தொடர்ந்து வருகின்றது.
இத்திருவிழாவின் மற்றொரு முக்கிய அம்சம் பெண்களின் பங்கேற்பு. பின்னிரவு நேரத்திலிருந்து காலை 6 மணி வரை ஆண்கள் கோயிலுக்குள் அனுமதிக்க்கப் படுவதில்லை. சிறுமியர் உட்பட எல்லா வயதுப் பெண்களும் தெப்பக் குளத்திலிருந்தோ, தங்கள் வீட்டிலிருந்தோ குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து பலிபீடம், கொடி மரத்தில் ஊற்றி், தீங்கின்றி மழை பொழிந்து, நாடு செழிக்க வேண்டுகின்றனர். ஆர்வ மிகுதியால் அர்த்த மண்டபம் கருவறை வரை கூட நீர் நிறைந்து விடுவதும் உண்டு.
வறண்ட பூமியில் தண்ணீர் தூக்கிக் துயருற்ற பெண்கள், நீர்வளத்திற்காக மட்டுமன்றி, குடும்ப நலம், மணப் பேறு, மகப்பேறு, நல்ல கல்வி, செல்வம் மற்றும் தங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதற்காகவும் நீர் ஊற்றுகின்றனர்.
விடியற்காலையில் ஆன்மீகக் குழுக்கள் பாடுகின்றனர்.பெண்கள் கும்மியடிக்கின்றனர். ஒரே பரவசம் தான்! அதன் பின் 11, 101 முறை என்று கருவறையைச் சுற்றிவருதல், அங்கப் பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, முடி எடுத்தல் என்று அவரவர் நினைத்த வண்ணம் வேண்டுதல்களை மக்கள் நிறைவேற்றுகின்றனர்.
விருதுநகர் மாரியம்மன் திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் வண்ணம் தீட்டப்பட்ட உருவப் பொம்மைகள் வைத்தல். ஆண், பெண், சிறுவன், சிறுமி, தவழும் குழந்தை, ஆணும் பெண்ணும், தாயும் சேயும், கை, கால், இவைகள் மட்டுமல்ல வீடு, பசுவும் கன்றும், காளை என்று ஆயிரக்கணக்கான பொம்மைகள், நலமுடன் வளமாக வாழ வேண்டி, வழி வழியாக, தலைமுறை தலைமுறையாக, விருதுநகர் மக்கள் அம்மனுக்கு வாங்கி வைக்கின்றனர். வெளியூர் சென்று வாழ்ந்தாலும் கூட, ஊருக்கு வரும் போது அவசியம் வாங்கி வைப்பதுண்டு.
தமிழகத்தின் தொன்மையான வழிபாடு தாய்த் தெய்வ வழிபாடு. மழைக்காக, நோய்களிலிருந்து காக்க அமைக்கப்பட்ட சிறு தெய்வ மாரியம்மனைத் தங்கள் தாயாகவே எண்ணி, இயல்பாக அவளுடன் நெருங்கி, அவளுக்காக சில கடினமான விரதங்களைக் கூட ஏற்றுக் கொண்டு, ஒப்பறற, மேலான பராசக்தி மாரியம்மனாகவே அவளைப் போற்றுவதை விருதுநகரில் காண முடிகிறது.
சிவன் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் சமணர் கழுவேற்றம் நிகழ்ச்சி ஆறாம் நாள் திருவிழாவில் இடம் பெறுவது வியப்பைத் தரும் செய்தியாகும். இங்கும் உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் சமணர் கழுவேற்றம் பற்றி சொல்லப்படுகிறது. இயற்கை வழிபாடான மாரியம்மன் திருவிழாவில் இந்நிகழ்ச்சி இணைக்கப் பட்டது எப்படியோ தெரியவில்லை.
பங்குனி மாத நாலாவது ஞாயிறன்று திருவிழாவின் உச்சமான பொங்கல். கோயில் முன் பொங்கல் வைக்கிறார்கள். விரதம் இருந்தவர்கள் தங்கள் இல்லங்களில் ' ஆக்கி வைத்தல்' என்று புது மண் பாண்டங்களில் அம்மனுக்கு விருந்து படைக்கின்றனர்.
பொங்கல் இரவிலிருந்து மேளச் சத்தத்தாலும், 'ஆகோ ஐயாகோ' என்றும் ஊரே அதிரும். திங்களன்று கயிறு குத்து. பெற்றோர் நேர்ந்து கொண்ட சிறுவர் சிறுமியருக்கு மஞ்சள் நீராட்டி, கோயில் சென்று அவர்கள் உடலில் நூல் கோர்த்து விடப்பட்டு, சுற்றி வந்து கோர்த்த நூல், எடுத்து விடப் படுகிறது. இதுவே கயிறு குத்துதல் சடங்காகும். இதன் அடிப்படை புரியவில்லை. தீச்சட்டிகள் எடுத்து வருதலே அன்றைய நாள் முக்கிய நிகழ்வாக இருந்தாலும், கயிறு குத்து என்றே அன்றைய நாளைக் காலங்காலமாகச் சொல்கிறார்கள்.
மேலும் கரும்புள்ளி, வெண்புள்ளி இட்டு வருதல், ஆயிரம் கண் பானையில் விளக்கேற்றி வருதல் (அம்மை நோயை நினைவு படுத்தும் சடங்குகளாக இருக்கலாம்), தீச்சட்டி எடுத்தல் - இருகைகளிலும் சட்டிகள், 21அக்கினிச் சட்டிகள், 51சட்டிகள், கழுத்தில் குழந்தைத்
தொட்டிலுடன் சட்டி எடுத்தல், கரும்புத் தொட்டில் எடுத்தல், நாக்கிலும், கன்னத்திலும் அலகு குத்துதல், இடுப்பிலும், தோளிலும் கம்பிகள் குத்தி, கயிற்றுடன் இணைத்து சிறிய ரதங்களை இழுத்து வருதல் என்று எத்தனை விதமான நேர்த்திக்கடன்கள்!
பொங்கல் தினமான ஞாயிறு இரவிலிருந்து செவ்வாய் அதிகாலை வரை, எல்லா வயது ஆண்களும், பெண்களும் தொடர்ச்சியாக அக்கினிச் சட்டிகளை எடுத்துவருவது விருதையில் மட்டுமே காணக்கூடியதாகும். கிராமம் முழுவதும் இணைந்தும், குழுக்களாக இணைந்தும் வருகின்றனர்.
மஞ்சர் நீர் ஊற்றி, வேப்பலையுடன் தீச்சட்டி ஏந்தி வருவதால் ஊர் முழுவதும் மஞ்சள் மணமும் வேப்பிலை மணமும் நிறைந்திருக்கும். தொற்று நோய்களைத் தடுப்பதற்காக பழங்காலத்தில் மேற்கொண்ட பாதுகாப்பு முறைகளின் தொடர்ச்சி என்று கருதலாம்.
செவ்வாயன்று மாலையில் 1875ம் ஆண்டிற்கு முன் செய்யப்பட்ட 'சித்திரத்தேர்' எனப் பெயருடைய திருத்தேரில் நகரின் நலம் காக்கும் வெயில் உகந்த அம்மனும், மாரியம்மனும், விநாயகர் சிறிய சட்டத்தேரில் வர, வலம் வருதல். இரவில் தெப்பக் குளத்தின் தென்மேற்குப் பகுதியில் தேர் நிறுத்தப் பட்டு, வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் காலை தேர்கள் நிலையை அடைகின்றன.
கொடியேறிய தினத்திலிருந்து ஆறாம் நாளான வெள்ளி முதல், பத்தாம் நாளான செவ்வாய் வரை மாரியம்மன் திருக்கோயில் மூடப்படுவதில்லை.
பனிரெண்டாம் நாளான வியாழனன்று கொடி இறக்கப் படுகின்றது. மண்டகப்படிகள் ஞாயிறு வரை தொடர்கின்றன. கோயிலை ஒட்டிய திடலில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, இன்னிசை நிகழ்ச்சி, தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலை நிகழச்சிகள் தினமும் நடைபெறும்.
பொங்கலை ஒட்டி பொருட்காட்சியும் உண்டு. திறந்த வெளிக் கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற, குவிந்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு, ராட்டினம் போன்றவற்றில் ஏறி மகிழ்ந்து, அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த விரிப்பில் அமர்ந்து, உறவினர்கள், நண்பர்களுடன் பேசிக் களி்த்து, சுவையான உணவுகளையும் ருசித்துக் கொண்டு, இரவு ஒன்பது மணிக்கு மேல் பொழுது போக்குவது விருதுநகரில் மட்டுமே கிடைக்கக் கூடிய அனுபவமாகும்.
வியாழனன்று கொடி இறக்கியபின், விருதுநகரில் பல திருமணங்கள் முடிவாகும். விருதை மக்கள் வீட்டில் வந்து பெண் பார்ப்பது போன்ற பழக்கங்களை விரும்புவதில்லை. பொங்கலின் போது கோயில், பொருட்காட்சி போன்ற பொது இடங்களில் பார்த்து, குடும்பத்தினருடன் பேசி, அனைத்தும் பொருந்தி வந்தால் மட்டுமே, வீட்டிற்கு வந்து உறுதி செய்கின்றனர்.
விருதுநகரின் பங்குனிப் பொங்கல் ஆன்மீகத் திருவிழா மட்டுமல்ல, மக்கள் அனுபவிக்கும் திருவிழாவும் ஆகும்.! பெண்மக்களை பிறந்தகத்தில் விருந்துக்கு அழைத்து மகிழ்கின்றனர். அந்த வருடம் திருமணமாகிய புதுத் தம்பதியர் புத்தாடை உடு்த்தி, பலகாரத் தூக்குகளுடன் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்குச் செல்லும் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணலாம்.
மக்கள் முக்கிய வீதிகளில் உள்ள தங்கள் வணிக நிறுவனங்களில், உறவினர், நண்பர்கள் வீடுகளில் குடும்பத்துடன் நிதானமாக அமர்ந்து, நாள் முழுவதும் தீச்சட்டி, தேரோட்டம் என்று கண்டு களிக்கின்றனர்.
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு மேல் குடும்பத்தினருடன் - வண்ண வண்ண ஆடையுடுத்தி, அணிமணிகள் அழகு செய்ய, வாங்கிக் கட்டிய பூச்சரங்கள் தலையை நிறைக்க அழகு மயிலெனப் பெண்கள் வர, தெப்பக்குளக் கரையில் வீசும் மென் காற்றை அனுபவித்து, மண்டகப்படியில் சாமி கும்பிட்டு, ரோஸ் மில்க், எல்லோமில்க் குடித்து, ஐஸ்க்ரீம் புரூட் சால்ட் (ஆமாம் விருதையில் காலங்காலமாக புரூட் சால்ட் தான்! சாலட் அல்ல) சாப்பிட்டு, கடைத் தெரு வழியே நடந்து சென்று, மாரியம்மனையும் வணங்கி விட்டு, பொட்டல் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து, முடிந்தால் பொருட்காட்சியும் சென்று, புரோட்டா சால்னாவையும் ஒருபிடி பிடிப்பது - இவையெல்லாம் விருதுநகரில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.
வெளியூர் சென்று வாழும் விருதுநகர் மக்கள் பங்குனிப் பொங்கலின் போது வந்து சாமி கும்பிடுவதுடன், விருதுநகருக்கே உரித்தான கொடுக்காப்புளி, கரிசல் மண்ணில விளைந்த சுவை மிகுந்த வெள்ளைக் கத்தரிக்காய், முள்ளிக்காய், அதலக்காய், மிளகு தக்காளி போன்ற நாட்டுக் காய்கறிகள், அசைவ உணவு வகைகள் மற்றும் பல சிறப்புப் பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது உறவினர்கள் சந்தித்தல், நண்பர்கள் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
சிறிய பீடத்தில் எளிமையாக ஆரம்பித்த மழைத் தெய்வ வழிபாடு, தற்போது தங்கக் கோபுரம் அலங்கரிக்க வளர்ந்து நிற்கிறது. கிராம தேவதையான மாரியம்மன் விருதை மக்களுடன் இணைந்து, அவர்களுக்கு வளம், நலம் எல்லாம் அருளும் பராசக்தி மாரியம்மனாக, பார்வதியின் அம்சமாக நெஞ்சில் நிறைந்து நிற்கிறாள்.
No comments:
Post a Comment