தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்


எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தனக்குரிய இருக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அது மேற்கொள்ள நேர்ந்த போராட்டங்கள், பல முனைகளிலிருந்தும் செலுத்தப்பட்ட அழுத்தங்களின் விளைவாக அது தனது முயற்சியில் அடைந்த தோல்வி, சமூக அமைப்பில் ஒரு கெளரவமான தட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அது மேற்கொண்ட மாற்று நிலைப்பாடு ஆகியவற்றை மிக விரிவாக ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்யும் ஆவணமாகத் தீவிரம் கொள்கிறது. பரந்துபட்ட ஆய்வின் நகர்வு, பல முகமூடிகளைக் கிழித்தெறிந்தும் பொதுப் புத்தியில் பதிந்து விட்டிருக்கிற நம்பிக்கைகளைக் கலைத்துப் போட்டும் முன்னேறுகையில் நூல் நாடகத் தன்மையுடன் வாசிப்பில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. வெறும் வறட்டுத்தனமான தெரிவுகளாக அல்லாமல் வாசகன் சலிப்படையாமல் ஆர்வத்துடன் படிக்குமாறு பக்கங்கள் விரைகின்றன.
கிழிபடும் முகமூடிகளுள் குறிப்பிடத்தக்கது, தமிழ்ப் பண்டித உலகில் ஒர் உயர்ந்த பீடம் அளிக்கப்பட்டுள்ள பிஷப் கால்டுவெல்லினுடையது.
திருநெல்வேலி மாவட்டமும் அதற்குத் தெற்கே நிலப் பரப்பு குறுகலாய் முற்றுப்பெறும் கன்னியாகுமரி மாவட்டமும் நாடார் அல்லது சாணார் வகுப்பினர் மிகுதியும் வாழும் பகுதிகள். இவற்றில் கன்னியாகுமரி மாவட்டம் இந்த நூல் ஆய்வுக்கு மேற்கொள்ளும் கால்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. க்ன்னியாகுமரியிலும் சரி, திருநெல்வேலியிலும் சரி, இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் கிறிஸ்தவ மதமாற்றம் மிக மும்முரமாய் நடந்தேறியுள்ளது. எனினும் மற்ற வகுப்பாரைப் போலன்றி மதமாற்றம் நிகழ்ந்தான பிறகும் சாணாரிடையே வியக்கத்தக்கவாறு வகுப்பொற்றுமை சமயங்களில் வீரியத்துடன் எழுவதற்கு மதம் ஒரு தடையாக இருக்க வில்லை. இது தேசிய உணர்வுக்குச் சமமானது. சாணார் என்கிற பிரிவு, சமூகத்தில் எதிர்ப்புக் காட்டாது தலைமுறை தலைமுறையாக மிகவும் இயல்பாக அடங்கிப் போகிற கீழ்ச் சாதி அல்ல என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.
இதில் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் மத மாற்றம் என்பது கொள்வினை-கொடுப்பினையில் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை. ஹிந்து நாடார்-கிறிஸ்தவ நாடார் என்று இரு மதப் பிரிவினராக இவர்கள் இருந்து வருகிற நிலை ஏற்பட்ட பிறகும், இன்றளவும் இவர்களிடையே மதம் என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெண் எடுப்பதும் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக ஹிந்துக்களும் கிறிஸ்தவராக மதம் மாறியவர்களும் அவரவர் சமய நம்பிக்கைகளுடன் வாழ்வது நாடார் சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது ((எனினும் எல்லாப் பிரிவினரிடயேயும் இவ்வாறான மத வேறுபாடு பாராட்டாத கொள்வினை கொடுப்பினை வழக்கில் இல்லை என ஆய்வாளர் அ. கணேசன் தெரிவிக்கிறார் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் இன்றைய சூழலில் இந்த ஒற்ற்றுமைக்கு பங்கம் விளையத் தொடங்கியுள்ளது என்றும் தெரிய வருகிறது).
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே மட்டும் எத்தகைய நிலையிலும் தமது தனி அடையாளத்தை இழந்துவிடலாகாது என்கிற உறுதிப்பாட்டுடன் அதைக் காத்துக் கொள்கிற அளவுக்குத் தமது வகுப்பு அல்லது சமூகப் பிரிவின் மீது சுயாபிமானமும் பெருமிதமும் இருக்குமானால் அது பொதுவாக இயல்பாகவே போர்க் குணம் வாய்ந்த க்ஷத்திரிய வர்ணத்திற்குரிய லட்சணமாகவே இருக்கக் கூடும்.
எனில் இந்தச் சாணார் அல்லது நாடார் எனப்படுவோர் யார்?
இந்தக் கேள்விக்கு மிகவும் விரிவாக விடை அளிக்கிறது இந்த ஆய்வு நூல். விடை இவ்வாறு விரிவடைகையில், நூலுக்கே தலைப்பாக அமையும் அளவுக்கு முக்கியத்துவம் தரப்படும் தோள் சீலைக் கலகம் இரண்டாம் பட்சமாகி, நாடார் அல்லது சாணார் எனப்படுவோர் நாடாளும் சான்றோர் குலத்தவரே என்பதை நிலை நிறுத்துவதே லட்சியமாகக்கொண்ட ஆவணமாகி விடுகிறது.
நாடார் எனப்படுவோர் நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டுமின்றி அவற்றுக்கு வடக்கே ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கணிசமாக் இருந்து வருகின்றனர். தஞ்சையிலுங்கூட இவர்கள் பெருமளவில் உள்ளனர். தூத்துக்குடி அருகே மிஷனரிகள் நாசரேத் என்கிற குடியேற்ற ஊரை உருவாக்கியபோது அதில் தஞ்சையிலிருந்துதான் மத மாற்றம் செய்யப்பட்ட நாடார் பெரு மக்களைக் குடியேற்றியதாகத் தகவல் உண்டு.

தஞ்சைக்கும் வடக்கே தொண்டை மண்டலம் என்று வந்தால், தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்கிற வழக்கே உ.ள்ளது. இந்தச் சான்றோர் சாணார்தான் என்பதை நிறுவுகிறது, சென்னை கலெக்டராக இருந்த எல்லிஸ் துரை, சென்னைப் பட்டணத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வெட்டிய இருபத்தேழு கிணறுகள் பற்றிய தகவலைப் பதிவு செய்யும் வகையில் எழுதிய தமது செய்யுளில் எடுத்தாண்ட ’ஜெயங்கொண்ட தொண்டிய சாணார் நாடு’ என்ற வழக்கு. இதனை இந்நூலும் பொருத்தமாக நினைவூட்டுகிறது. தொண்டை மண்டலத்துச் சான்றோராகிய சாணார் ஆளுமைக்க்குரிய அதிகாரம் படைத்தோர் என்பதைச் சுட்டும் விதமாக கிராமணி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் நூல் கவனப்படுத்துகிறது.

நமது சமூகத்தில் சாதி அமைப்பானது மேல், கீழ் என்கிற செங்குத்தான கோபுர அடுக்கு அமைப்பாக உருவானது அல்ல. மாறாக, அது கிடையான, அதாவது படுக்கைவாட்டில் உருவான அமைப்பு என்கிற கருதுகோளுக்கு வலுவூட்டுவதாக இந்த நூல் உள்ளது.

ஐரோப்பியப் பார்வையில் மட்டுமே மேல்சாதி கீழ்சாதி என்கிற செங்குத்து அடுக்கிலான சாதி அமைப்பு தென்பட்டுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை வழியிலேயே ஆய்வைத் தொடர்ந்து பழகிய நமது ஆய்வாளர்களும் இன்றளவும் ஐரோப்பியப் பார்வையிலேயே சாதியமைப்பை அணுகி வருகின்றனர். இத்தடத்திலிருந்து விலகி, சுயமான பார்வையுடன் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் சாதியமைப்பை அணுகியிருப்பது நூலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

சாதிகள் என்பவை உயர்வு-தாழ்வு என்கிற அடிப்படையில் உருவானவை யல்ல; ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிகள் கூட்டணியின் கை மேலோங்கி, உயர்வுநிலை பாராட்டி, பிற சாதிகளைத் தம்மைவிடத் தாழ்வானவை என்று சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை வலிந்து நிறுவி வந்துள்ளது. எனவே சாதிகளிடையே உயர்வு-தாழ்வு என்பது அவ்வப்பொழுது இடம் மாறி வந்துள்ளது. நாடாளும் வகுப்பினரான நாடார் அல்லது சாணார் இவ்வாறு வேளாளர் வகுப்பினரின் கரம் மேலோங்கியபொழுது தாழ்வடைய நேரிட்டது என்பதை இந்நூல் பல கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் சான்றாக முன்வைத்து நிறுவுகிறது.

இதன் அடிப்படையிலேதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக விளங்கிய குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த தோள் சீலைக் கலகம் ஆராயப் படுகிறது. சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் ஆதலால் சாணார் சாதிப் பெண்களுக்கு இடுப்புக்குமேல் சேலைத் தலைப்பை தோளில் சுற்றி மார்பகங்களை மறைக்கும் உரிமை இருந்ததில்லை என்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் சாணார் சாதியினரை மத மாற்றம் செய்து அவர்களை நாகரிகப் படுத்திய பிறகுதான் சாணார் சாதிப் பெண்கள் ரவிக்கை அணிந்தும் சேலைத் தலைப்பால் மார்பகங்களை மூடியும் நடமாடத் தொடங்கினர் என்பதும், சாணார் சாதிப் பெண்டிர் இவ்வாறு மார்பகங்களை மறைத்துக் கொள்வதற்கு உயர் சாதியினரான நாயர்களும் பிள்ளைமார்களும் தடை விதித்தபோது, அதனை எதிர்த்து சாணார் நடத்திய உரிமைப் போருக்கு மிஷனரிகள் துணை நின்று அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்கச் செய்தனர் என்பதும் மிஷனரிகள், ஐரோப்பிய ஆய்வாளர்கள், அவர்கள் வழியில் ஆய்வு செய்த நமது ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தி.

குறிப்பாகத் தமிழ் நாட்டுச் சாதிகள் குறித்து ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் எழுதிய ஐரோப்பியருள் பிஷப் கால்டுவெல் முக்கியமானவர். ஆதாரப்பூர்வ மான ஆய்வாளர் என்று கொண்டாடப்படுகிற இவர், திருநெல்வேலிச் சாணார்கள் என்ற தமது நூலில் சாணார்கள் கீழ்ச் சாதியினர் என்றே வகைப்படுத்துகிறார். அவர் எழுதிய சில கட்டுரைகளிலும் ஒரு இடத்தில் அவர்களை சூத்திரராகக் கொள்ள வேண்டும் என்றும் இன்னொரு இடத்தில் சூத்திரரைவிடக் கீழ்ச் சாதியினர் என்று தோன்றுவதாகவும் எழுதுகிறார். பிறகு அவரே சாணார்களில் சிலர் அவர்கள் வாழும் அவ்வப் பிரதேசங்களின் ஆட்சியாளர்களாகத் தோற்றமளிக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். இந்த முரண்பாட்டை இந்நூலாசிரியர்கள் சிந்தனைத் தெளிவின்மை என்ற விமர்சனத்துடன் பதிவு செய்துள்ளனர்.

சாணார்கள் கீழ்ச் சாதியினர் எனில் அவர்களுக்கு நில உடைமையோ தமக்குச் சொந்தமான நிலத்தை தானம் வழங்கும் பாத்தியதையோ இருந்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் முதன் முதலில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக லண்டன் மிஷனரிக்கு நிலக் கொடை அளித்தவர் ஒரு சாணார் என்கிற தகவலை இந்நூல் அளிக்கிறது. மேலும், தோள் சீலைக் கலகம் நடந்த திருவிதாங்கூர் சமஸ்தான ஆவணங்களிலேயேகூட சாணார் எனப்படும் நாடாக்கமார் சிலர் நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளமைக்குச் சான்று உள்ள விவரத்தையும் இந்நூல் தெரிவிக்கிறது.

இதேபோல் வேள்வி நடத்திக்கொடுத்த, வேத அத்யயனம் செய்த பிராமணருக்கும் சாணார்கள் நில தானம் செய்தமைக்கு ஆதாரம் உண்டு.

கால்டுவெல்லேகூட, ’தாம் குடியேறிய இடையன்குடி ஊரினை இவ்வூருக்கு அருகில் உள்ள குட்டம் என்ற சிற்றூரில் வாழ்ந்த மார்த்தாண்ட நாடாக்கள் எனப்படும் சான்றோர் குல நிலைமைக்காரர் பிரிவு நிலக்கிழாரிடமிருந்து 99 வருடக் குத்தகைக்குப் பெற்றார். இப்பகுதியில் குடியிருந்த அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மக்களுமே குட்டம் மார்த்தாண்ட நாடாக்களுக்கு ஆண்டு தோறும் குடியிருப்பு வரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகள் ஆகியவற்றைச் செலுத்தி வந்தனர்’ என்றும், ’குட்டத்தைச் சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப் பற்று, செட்டியாப் பற்று, தண்டு பற்று, பரமன் குறிச்சி, பள்ளிப் பற்று, செம்மறிக்குளம், வீரப்ப நாடார் குடியிருப்பு, காயாமொழி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் எல்லாம் (பல்வேறு சாதிகளைச் சேர்ந்த) தம் குடிமக்கள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர்’ என்றும் நூலாசிரியர்கள் தகவல்கள் அளிக்கின்றனர். இந்த உண்மை தெரிந்திருந்தும் கால்டுவெல் திருநெல்வேலி சாணார்கள் என்ற தமது நூலில் சாணார் சமூகத்தவர் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், ஹிந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும் வைதிக சமயத்துக்கு மாறுபட்ட சிறு தெய்வ வழிபாட்டினையே (இதுவும் ஹிந்துஸ்தானத்து மக்களைப் பலவாறு பிரித்துப் பின்னங்களாக்கினால் எளிதாக அவர்களை மத மாற்றம் செய்துவிடலாம் என்கிற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்டுவாதம்தான்!) பின்பற்றி வருகிறார்கள் என்றும் மந்த புத்திக்காரர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்.

நாடார் அல்லது சாணார் வகுப்பில் உயர்நிலை, இடைநிலை, கடை நிலை என்ற பிரிவுகள் இருப்பதும் உண்மையே. இதனை நூலாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும், பெரும்பாலான சாதிகளில் இவ்வாறான உயர், இடை, கடை நிலைகள் இருக்கவே செய்கின்றன. நாடார் வகுப்பு மட்டும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதையும்கூட கால்டுவெல் அறியாதவர் அல்ல. எனினும், ‘தாழ்ந்த கீழ்ச் சாதிகளில் உயர்ந்த அடுக்குகளைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கீழ் அடுக்கைச் சேர்ந்தவர்கள் என்றோதான் இவர்களை வர்ணிக்க முடியும்; இவர்கள் எழுத்தறிவில்லாத மூர்க்கர்கள்; ஆயினும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து பல மடங்கு உயர்ந்தவர்கள்’ என்றெல்லாம் தமது நூலில் சாணார்களைப் பற்றி மனம்போன போக்கில் விவரிக்கிறார். திருநெல்வேலி மிஷனரிகளின் மதமாற்றப் பணி பற்றிய உரையில், ’பிற சூத்திரச் சாதியினர் ஹிந்து சமயக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதுபோல் சாணார்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சாணார் பெண்கள் இடுப்புக்குமேல் உடையணிவதில்லை’ என்றும் குறிப்பிடுகிறார் (இந்தியாவில் உள்ள கீழ்ச் சாதி மக்களை நாங்கள் அரும்பாடுபட்டு மத மாற்றம் செய்து அவர்களை விவரம் தெரிந்தவர்களாக நாகரிகப்படுத்தி வருகிறோம். இதற்காக நாங்கள் மேல் சாதியினரின் கடும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றெல்லாம் அங்கலாய்த்து, தம் நாட்டு மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று நன்கொடையினை அதிக அளவில் திரட்டுவதே இதன் நோக்கம்).

சாணார் வகுப்புப் பெண்டிர் கிறிஸ்தவ மத மாற்றத்திற்குப் பிறகே இடுப்புக்கு மேல் ஆடை அணியும் வழக்கத்தை மேற்கொணடனர் என்றும் அது பிறகு ஹிந்து சமயத்தில் தொடர்ந்து நீடித்த சாணார் வகுப்பிலும் பின்பற்றப்பட்டது என்றும் கருதுவது தவறான தகவல் என்பதைப் பல வலுவான ஆதாரங்களுடன் நூலாசிரியர்கள் நிறுவுகின்றனர். மதம் மாறாத சாணார் வகுப்புப் பெண்டிரும் ரவிக்கை அணிந்து வந்துள்ளனர் என்பதை நிரூபணம் செய்யும் புகைப்படங்களும் பழங்காலச் சித்திரங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், கேரளத்தில் நாயர் சாதிப் பெண்டிர் இடுப்பில் வெறும் முண்டு மட்டும் கட்டிய நிலையில் வெற்று மார்புடன் நடமாடி வந்துள்ளதைக் காட்டும் படங்களையும் நூலில் காணலாம்.

(நானே கூடச் சிறுவனாக இருக்கையில் நாயர் சாதிப் பெண்களில் எல்லாப் பருவத்தினரும் இடுப்பில் மட்டும் ஒரு முண்டு (நான்கு முழ வேட்டி)உடுத்தி வெற்று மார்புடன் சர்வ சாதாரணமாக எங்கும் சென்று வருவதை எனது பூர்விக கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம் பார்த்துள்ளேன்).

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் பகுதியாக அமைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையினராக உள்ள சாணார் மட்டும் ரவிக்கை அணிந்தும் சீலைத் தலைப்பால் மார்பகத்தை மூடியும் நடமாடியது அங்கு வாழ்ந்த நாயர் சாதியினருக்கு கெளரவக் குறைச்சலாகத் தோன்றியிருக்க வேண்டும். சமஸ்தானத்தில் உயர் சாதியினரான பிராமணர்களுடன் தமது சாதிப் பெண்டிர் தொடர்பு வைத்துக்கொள்ளும் வழக்கம் காரணமாகத் தம்மையும் உயர்சாதியினராக உரிமை பாராட்டிச் சமூகத்தில் மேல்நிலை அடைந்த நாயர்கள், தமது சாதிப் பெண்டிர் இடுப்பிற்குமேல் ஏதும் அணியாமல் நடமாடுகையில் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ள சாணார் வீட்டுப் பெண்கள் மார்பை மூடிக் கொண்டு செல்வதா என்கிற ஆங்காரத்தினாலேயே சாணார் சாதிப் பெண்டிரின் ரவிக்கையைக் கிழித்தும் சேலையின் மேலாக்கை இழுத்தும் அடாவடியில் இறங்கியுள்ளனர். பின்னர், தங்களுக்குத் துணையாகப் பிள்ளைமார்களையும் இதில் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்து தோள் சீலை நீக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளன்ர். இதற்குச் சாணாரிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பி, பின்னர் அது தோள் சீலைக் கலகமாக வெடித்தது.

தோள் சீலைக் கலகத்தின் தோற்றுவாய், மேலாதிக்க மனப்பான்மையின் காரணமாகவே நாயர்-பிள்ளைமார் கூட்டணி சாணார் வீட்டுப் பெண்டிர் ரவிக்கை அணிவதையும் தோள் சீலை அணிவதையும் எதிர்த்துள்ளனரே யன்றி, சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் என்பதால் அல்ல என்பதற்கான சான்றுகள், கிறிஸ்தவ மிஷனரிகளின் சீர்திருத்தத்தாலும் அவர்களின் தலையீட்டாலும்தான் சாணார் சாதிப் பெண்டிர் ரவிக்கை அணியவும் மேலாடையால் மார்பை மூடவும் உரிமை பெற்றனர் என்பது வெறும் பிரசார நோக்கில் பரப்பப்பட்ட தவறான கருத்து என்ற வாதம் முதலான அம்சங்கள் நூலில் மிகவும் விரிவாகவே பதிவாகியுள்ளன.

சாணார் பனையேறிகளாக இருந்துள்ளனர் என்பது சரியே. ஆனால் அவர்கள் பிறர் தோப்புகளில் வெறும் பதநீரும் கள்ளும் இறக்கி ஊழியம் செய்பவர் களாக இல்லை. பனைவெல்லம் காய்ச்சும் தொழிலையும் காய்ச்சிய கருப்பட்டி, பனை வெல்லத்தை விற்பனை செய்யும் வாணிபத்தையும் மேற்கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், சாணார் எனவும் நாடார்கள் எனவும் அறியப்படும் இச்சாதியினர், ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பலவாறான வாணிபத்திலும் ஈடுபட்டு, இருநூறு-இருநூற்றைம்பது ஆண்டுகளான மிகக் குறுகிய காலத்தில் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வந்துள்ளனர். சாணார்கள் காலங் காலமாகக் கீழ்ச் சாதியினராக இருந்து வந்துள்ளனர் எனில் இது எப்படிச் சாத்தியமாயிற்று என யோசிக்க வேண்டும்.

நம் நாட்டில் விடுதலையையொட்டி சுயேற்சையான சமஸ்தானங்கள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு, மன்னர்களின் ஆளும் அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போதும் பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் அறவே கைவிடப்பட்ட பிறகும், மன்னர்களின் அரண்மனைகள் யாவும் ஐந்து நட்சத்திர விடுதிகளாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் மாறின. தலைமுறை தலைமுறையாக அவற்றை ஆண்டு அனுபவித்து வந்த மன்னர்கள் அவற்றின் நிர்வாக இயக்குநர்களாக உருவெடுத்தனர். மேலும் பல்வேறு தொழில்களிலும் வர்த்தகங்களிலும் இறங்கிச் சடுதியில் முன்னேறவும் அவர்களால் எளிதாக இயன்றது. கட்டியாளும் அனுபவமும், நிர்வாகம் செய்யும் ஆற்றலும், புதிய துறைகளில் துணிந்து இறங்கும் சாகசமும் கிளைகள் பரப்பி விரிவாக்கம் செய்தலும் இயல்பான குணாம்சமாகவே அமைந்து விட்டிருந்தமையால்தான் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டிருக்க முடியும்.

தமிழ்நாட்டில் சாணார் அல்லது நாடார் வகுப்பினரின் நிலையுடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. நாடார்கள் நாடாளும் அரச குலத்தினராக இருந்தமையால்தான் அவர்கள் நிலை அதிலிருந்து மாற நேரிட்ட போது, மிகவும் இயல்பாக வாணிபத்திற்கு மாறி அதில் எளிதாக முன்னேற்றம் காணவும் முடிந்திருக்கிறது. அரசியல் ஆதிக்கத்திற்கு இணையானதே பொருளாதார ஆதிக்கம் என்பதும், வர்த்தகத்திலும் உற்பத்தித் தொழிலிலும் இறங்குவதன் மூலம் சமூகத்தில் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியம் என்பதும்கூட கவனத்தில் கொள்ள வேண்டிய நிதர்சனம் அல்லவா?

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உணமைகள்’ ஆய்வு நூலை வாசிக்கையில் இவ்வாறாக நமது ஆய்வுப் பார்வையும் விரிவடைந்து செல்வதற்குத் தூண்டுதல் விளைகிறது. ஆகவே தமிழ்நாட்டின் சமூகவியல் ஆய்வு முயற்சிகளுக்கு மிகவும் கனமான பங்களிப்பு, இந்த நூல்.

நூல்: தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
வெளியீடு: தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,
15 காமகோடி தெரு, பத்மநாப நகர், குரோம்பேட்டை, சென்னை 600 044
தொலைபேசி: +91-44-2223 5172 பக்கங்கள்: 192 விலை: ரூ. 100/- அஞ்சலில் பெற உள்நாடு: ரூ. 125/- வெளிநாடு (விமான மூலம்): US $ 5.
++++++ .
மலர்மன்னன், 18/37 முத்துலட்சுமி சாலை, லட்சுமிபுரம், சென்னை 600 041
தொலைபேசி இலக்கம்: 4351 4248 / மொபைல்: 97899 62333

-மலர்மன்னன்


No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...