பழனி செப்பேடு - வலங்கை



பழனி பண்டாரங்களின் செப்பேடு 
-------------------------------------
காவிரிக்கு கரை கண்ட கரிகால சோழனின் பிரியத்துக்கு உரியவர்கள் 'பண்டாரங்கள்' என்று செப்பேடு கூறுகிறது.

காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 56 தேசத்திலும் வாழும் பண்டாரங்கள் பழனியில் வாழ்ந்த செல்லமுத்து பண்டாரத்துக்கு இச் செப்பேட்டை அறக்கட்டளையாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

``இச்செப்பேடு சாலிமூல மார்க்கண்டேய கோத்திரத்தைச் சேர்ந்த பண்டாரங்களால் விஜயநகர அரசர் இரண்டாம் வெங்கட்ட நாயக்கரின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. கலியுக சகாப்த ஆண்டைத் தவறாகக் குறிப்பிட்டுள்ள இச்செப்பேடு ஏவிளம்பி தமிழ் ஆண்டு தை மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரத்திரமும் அமிர்த யோகமும் பெற்ற சுபதினத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1597 ஜனவரி 26.

செப்பேட்டின் முகப்பில் முருகன் அருள் தரும் வலக்கையோடும் இடக்கை கட்டிய வலம்பித முத்திரையோடும் வலதுபுறம் வேலோடும் அழகாக பொறிக்கப்பட்டுள்ளார். முருகனின் வலது புறம் சேவலும் , இடது புறம் பாம்பை மிதித்த மயிலும் பொறிக்கப்பட்டுள்ளன.செப்பேடு முன்புறம் 50 வரிகளிலும் பின்புறம் 41 வரிகளிலும் மொத்தம் 91 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. 28×17 செ.மீ அளவில் இச்செப்பேடு வடிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பழனி பகுதியில் கிடைக்கும் செப்பேடுகளில் தொடங்கும் "வையநீடுக எனும் வரியுடன் இந்தச் செப்பேடும் தொடங்குகிறது. செப்பேட்டின் முதல் பகுதியில் முருகனின் சிறப்புகள் மூன்று அழகிய பாடல்களில் எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டின் இரண்டாம் பகுதி விஜய நகரப் பேரரசர்களான மல்லிகார்ச்சுனராயர் தொடங்கி வெங்கட்டராயர் வரை உள்ள அரசர்களை புகழ்ந்து பட்டியலிடுகிறது.

சாலிமூல மார்க்கண்டேய கோத்திர பண்டாரங்களின் சிறப்புகளை விரிவாக புகழும் செப்பேட்டின் மூன்றாம் பகுதி , இச்செப்பேடு எழுதப்பட்ட நோக்கத்தை விவரிக்கிறது.

காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 56 தேசத்திலும் வாழும் பண்டாரங்கள் பழனியில் வாழ்ந்த செல்லமுத்து பண்டாரத்துக்கு இச் செப்பேட்டை அறக்கட்டளையாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

சண்முக நதி , திருமஞ்சனம் , திருமாலை, வில்வ அர்ச்சனை கட்டளைக்கு ஒரு பணமும் , கலியாணத்துக்கு இரண்டு பணமும் , காதுகுத்துக்கு ஒரு பணமும் கொடுத்து, பாக்கு வெத்திலை படியரசியும் , அவருக்கு 56 தேச பண்டாரங்களும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, அறக்கட்டளை ஏற்படுத்தி இச்செபேட்டை எழுதிக் கொடுத்துள்ளனர். செப்பேட்டின் இறுதிப் பகுதி , இந்த அறத்துக்கு கேடு விளைவிப்பவன் கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் வருவான் என்று சாபமிடுகிறது.

பண்டாரங்களின் சிறப்பை புகழ்ந்துரைக்கும் இச்செப்பேடு, அவர்களை சொல் இரண்டு உரையாதவர்கள் என்றும், மதுரைத் தலம் உள்பட காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 56 தேசத்திலும் சமயச் செங்கோல் புரிந்து வாழ்பவர் என்றும் ஓம குண்டத்தை உருவாக்கியவர்கள் என்றும், காவிரிக்கு கரை கண்ட கரிகால சோழனின் பிரியத்துக்கு உரியவர்கள் என்றும், சோழப் பேரரசர்களின் வலங்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் வெகு விரிவாகப் புகழ்கிறது.

பழனியைச் சேர்ந்த சத்தியன் என்பவரது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த கிபி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு இதுவாகும். 

நன்றி 

 EPIGRAPHY - கல்வெட்டியல்

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...