அவிநாசி அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் --சான்றார்கள்


""பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே.... சீனக் குடை பிடிக்க அனுமதி "" செய்தி சொல்லும் கல்வெட்டு.... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சீனாக்குடை என்றால்... பட்டுக்குடை என்றொரு சொல் வழக்குண்டு". அதுபற்றிய அடியேனின் பின்னூடம் இஃது. தினமலர் நாளிதழின் இணயப்பக்கத்தில், 25 - 6 - 2010 ஆம் நாள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அன்பர் கணேசன் அவர்களின் பேட்டி புகைப்படத்துடன் வந்துள்ளது. அதனை அப்படியே அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத் தொடர்பு: அவினாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு. மாற்றம் செய்த நாள்: ஜூன் 25,2010 03:12 அவினாசி: ""தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவினாசியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,'' என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். அவினாசி, வ.உ.சி., குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேசன்; ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரான இவர், கொங்கு மண்டலக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து, தொல்பொருள் துறைக்கு தெரியப்படுத்தி வரும் இவர், சில நாட்களுக்கு முன், அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஒரு புதிய கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அதிலுள்ள செய்திகள் குறித்து, "தினமலர்' நிருபரிடம் அவர் கூறியதாவது: கொங்கு நாட்டு அரசர்கள், தம் ஆட்சிக் காலத்தில் சமுதாய வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்த சிற்பாசாரிகள், தச்சர், கொல்லர், இடையர் போன்ற குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி சிறப்பித்துள்ளனர். அவினாசி, பேரூர், கரூர் போன்ற ஊர்களில், இவ்வரிசைகள் (உரிமைகள்) வழங்கியது பற்றிய செய்திகள் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அவற்றுள் அவினாசி கோவிலில் உள்ள கல்வெட்டில், "வட பரிசார நாட்டுப் பாப்பார் சான்றார்களுக்கு வழங்கியுள்ள வரிசைகள் பெரிதும் வேறுபட்டதாகும்' என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. தற்போது வங்கிகளில் வைப்பு நிதி வைத்தால், அதற்கு குறிப்பிட்ட வட்டி வழங்குவதைப் போல, கி.பி., 13ம் நூற்றாண்டில் அரசனுடைய கருவூலத்தில் வைப்பு நிதி வைத்த பெருமக்களுக்கு, அரசர்கள் சிறந்த மரியாதைகளை வழங்கி சிறப்பித்துள்ளது, அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தியில், "கோனேரின்மை கொண்டான் (கொங்கு சோழன் வீரராசேந்திரன் கி.பி., 1207 - 1256) தன் 15ம் ஆட்சியாண்டில் (கி.பி., 1222ல்) வட பரிசார நாட்டுப் பாப்பார் சான்றார் தன் சரக்குக்கு (கருவூலத்தில்) பொருள் வைத்தயின்மையால், அவர்களுக்கு பல சிறப்பு வரிசைகளை வழங்கி சிறப்பித்தான். பல்லக்கேறல், குதிரை ஏறி சவாரி செய்தல், அரசவையில் வீற்றிருத்தல், சீனக்குடை பிடித்துக் கொள்ளுதல், படைகள் சூழ அரசன் உலா வரும் போது பொன்னாரம் பூண்டு உடன் வருதல், பச்சைப்பட்டு போர்த்திக் கொள்ளுதல், தன் வீட்டுத் திருமணத்தின் போது மணமக்கள் பல்லக்கில் ஊர்வலம் செல்லுதல் ஆகியன சிறப்பு வரிசைகளாகக் கூறப்பட்டுள்ளன. கோவில்களில் இறைவன் எழுந்தருளும் போதும், அரசர்கள் உலா புறப்படும் போதும் மட்டுமே குடை பிடிக்கும் மரபு போற்றப்படுகிறது; மற்றவர்களுக்கு இவ்வுரிமை இல்லை. அபிமான சோழ ராசாதிராசன் காலத்தில், திருமுருகன்பூண்டியில் சிவப்பிராமணர் ஒருவருக்கு, "ராசாதிராசன்' என்ற கொடியைப் பிடித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக, அவ்வூர் கல்வெட்டில் குறிப்பு உள்ளது. பாப்பார் சான்றாருக்கு வழங்கிய சீனக்குடை பிடித்துக் கொள்ளும் அரச மரியாதை, ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு குறிப்புரை. தமிழகத்தின் வேறு எப்பகுதியிலும் இதுவரை கண்டறியப்படாத அதிசய செய்தியான "சீனக்குடை' குறிப்பு, அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மட்டுமே காணப்படுவது என்பது தனிச்சிறப்பு. இதனால், சீன நாட்டுக்கும், தமிழகத்துக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பு புலனாகிறது. இதை வைத்து பார்க்கும் போது, தமிழகத்தில் சீனப்பட்டும், குடையும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. "தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே சீன நாணயங்களைக் கண்டறிந்துள்ளது, இச்செய்தியை உறுதி செய்கிறது. வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி மற்றும் அறிஞர் கே.கே.பிள்ளை ஆகியோரும், சோழர் வரலாற்றில், சீனா - தமிழகத்துக்கும் இடையே இருந்த வாணிபத் தொடர்பு, சீனப்பண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டதையும், தமிழரசர்களின் தூதுவர்கள் சீனாவுக்குச் சென்ற செய்திகளையும் விரிவாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எனவே, அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் காணப்படும் புதிய கல்வெட்டில், கொங்கு நாட்டரசர், பாப்பார் சான்றார்களுக்கு சீனக்குடை வழங்கி சிறப்பித்திருப்பதன் பின்னணியில், சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே நிலவிய வாணிகம், பண்பாடு, நட்பு ஆகிய சிறப்புகள் நன்கு புலப்பட்டுள்ளன. இவ்வாறு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் கூறினார். இக்கல்வெட்டு, அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கருணாம்பிகை அம்மன் சன்னிதி பின்புறம், துர்க்கை அம்மன் சன்னிதிக்கு மேற்புறத்திலுள்ள சுவர்களில் காணப்படுகிறது. புகைப்படங்கள் முதற்கண் அன்பர் வேலுப்பிள்ளை அவர்கள் பகிர்ந்த புகைப்படம்;அடுத்ததாக, தினமலர் நாளிதழின் புகைப்படம்.

No comments:

Post a Comment

தென்காசி பாண்டிய அரச வம்சமானநாடார் சமுதாயத்தின்9 மற்றும் 10 திருநாள் மண்டகப்படி

தென்காசி பாண்டிய அரச வம்சமான நாடார் சமுதாயத்தின் 9 மற்றும் 10 திருநாள் மண்டகப்படி தென்காசி ஆண்ட சான்றோர் குல மாமன்னர் சடையவர்மன்...