எல்லீசன் கல்வெட்டு!
சென்னை மாவட்ட ஆட்சியராகவும், பண்டாரத் தலைவராகவும் விளங்கியவர் ·பிரான்சிஸ் வைட் எல்லீஸ். அவர் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்ற அறிஞர். மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவர் திருக்குறள் அறத்துப்பாலை 1812ல் மொழிபெயர்த்தார்.
அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
அவர் தம் உரையில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூற் பகுதிகளை மேற்கொள் காட்டியுள்ளார். கிடைக்காமல் அழிந்துபோன வளையாபதியிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.
1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது.
அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும்.
கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.
வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன்
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன்
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில்
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம்
கலிங்க துளுவ கன்னட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட #தொன்டிய #சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம்
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.
இவர் பண்டாரத் தலைவராக இருந்த காரணத்தால் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார்.
இவர் கல்லறைக் கல்வெட்டிலும்
'திருவள்ளுவப்பெயர்த் தெய்வம் செப்பிய
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.
என்று திருக்குறள் மொழிபெயர்ப்புச் செய்தி கூறப்படுகிறது.
No comments:
Post a Comment