சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்
பல நேரங்களில் நமக்கு இந்த விஷயம் சொல்லப்படுகிறது. ‘இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது.’ பெரும்பாலும் நாம் இதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கொஞ்சமும் இந்த விஷயத்தை சிந்தித்து பார்ப்பது கிடையாது. உண்மையிலேயே நமக்கு வரலாற்று உணர்வு கிடையாதா?
முரணான உண்மை, வடிவேலுவின் பிரபல திரைப்பட நகைச்சுவை போன்றது – வரலாற்று உணர்வு உண்டு; ஆனால் கிடையாது.
வரலாற்று உணர்வு என்றால் என்ன என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய பார்வையில் எது வரலாற்று உணர்வோ, அதுதான் உண்மையில் ’வரலாற்று உணர்வு’ என்று கடந்த இருநூறு முன்னூறு ஆண்டுகளாக நமக்குக் கூறப்பட்டு வருகிறது. அதிகாரம் சார்ந்த மைய வரலாற்று ஓட்டமாக அது ஆரம்பித்தது. பேரரசர்களாலும் பெரும் சாம்ராஜ்ஜியங்களினாலும் ஆனது. வின்ஸெண்ட் ஸ்மித் போன்ற காலனிய வரலாற்றாசிரியர்கள் அத்தகைய ஒரு வரலாற்றினை முன்வைத்தார்கள். மேற்கூறிய காலனிய சாம்ராஜ்ஜிய மையப் பார்வை வரலாற்றுடன் மற்றொரு வரலாற்றுப் பார்வையை இணைத்து மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்றவர்கள் முன்வைத்தனர். இது இனமைய வரலாற்றுப் பார்வை.
சாம்ராஜ்ஜியவாத காலனியமும், மதமாற்ற நோக்கங்களும் இணைந்து முன்வைத்த இந்த வரலாற்றுப் பார்வைகளில், இந்திய வரலாறு என்பது (படையெடுத்த அன்னிய) ஆரிய - (தோற்கடிக்கப்பட்ட பூர்விக) திராவிட இனங்களின் போராட்ட வரலாறாகவே முன்வைக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து தொடர் படையெடுப்புகள் மூலமாக தோற்கடிக்கப்பட்ட இந்தியா. இந்தியாவின் தலைவிதியே அன்னியர்களிடம் தோற்றுக்கொண்டே இருப்பதுதான். இதில் இறுதியாக வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு ஒரு நல்ல சமூக மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ’எனவே, மக்களே ஆங்கிலேயரிடம் விசுவாசமாக இருங்கள். ஆங்கிலேயப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலேயர்கள் அளிக்கும் பார்வையில் உங்கள் வரலாற்றைப் பாருங்கள். ஏனென்றால் உஙகள் வரலாறு புராண சுமைகளால் கழிவுகளால் குழம்பியிருக்கிறது. அதிலிருந்து வரலாற்றைப் பிரித்தெடுக்க ஆங்கிலேய பண்பாட்டு முதிர்ச்சி தேவைப்படுகிறது’. தேவர்களும் அசுரர்களும் இனங்கள் ஆனார்கள். எல்லாம் இன மோதல்களின் அடிப்படையில் சிந்திக்கப் பட்டது. இல்லாத வரலாறு உருவாக்கப் பட்டது. இந்த வரலாற்றைக் குறித்த அறிவே இந்தியர்களுக்கு இல்லையே! வரலாற்று அறிவு இல்லாதவர்கள் இந்தியர்கள்! சொந்த வரலாறு தெரியாதவர்கள் தமிழர்கள்!
அடுத்து வந்தவர்கள் மார்க்சியர்கள். இவர்களும் சமூகப் பிளவுகளையே சமூக வரலாற்றைக் காணும் சட்டகமாக முன்வைத்தார்கள். சமூக உறவுகள், உற்பத்தி உறவுகளால் தீர்மானிக்கப்படும் மோதல் போக்கு கொண்டு, அவற்றின் மூலம் மட்டுமே முன்னகரும் சமுதாய வரலாறு. மார்க்சிய பொன்னுலகு வரும் வரை அதிகார சக்திகளினால் மட்டுமே வரலாறும் பண்பாடும் உருவாக்கப்படும். மக்கள் பண்பாடோ அடக்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும். இந்தப் பார்வையிலும், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்றும், அதை அறிவுஜீவிகள் உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
காலனிய வரலாற்றுப் பார்வைக்கும் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வைக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. இந்திய மக்கள் வரலாற்றுணர்வு இல்லாதவர்கள் என்றும், அவர்களின் பண்டைய வரலாற்றை உருவாக்கும் அதிகாரம் ஒரு சில அறிவுஜீவிகளுக்கு, அவர்களின் மார்க்சிய சித்தாந்த்தத்தால் அல்லது மேற்கத்திய பண்பாட்டு அறிவால், கையளிக்கப் பட்டுள்ளது – என இந்த இரண்டு பார்வைகளும் நம்புகின்றன.
ஆனால், மூன்றாவது பார்வை ஒன்று உள்ளது. அப்பார்வை இந்திய வரலாறு முழுமைத் தன்மையுடனும், குவித்தன்மையற்ற முறையிலும் எழுதப்பட்டு வந்துள்ளது என்று கருதுகிறது. செப்பேடுகள், நாட்டுப்புறப் பாடல்கள், கல்வெட்டுக்கள், சடங்கு முறைகள், தல புராணங்கள் என இவை அனைத்திலுமாக, இந்தியப் பண்பாட்டுப் புலத்தில் வரலாற்று நினைவு தலைமுறை தலமுறையாக பாதுகாக்கப்பட்டும் சேகரிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டு காலனியப் பார்வை நம்மை அந்த வரலாற்றுச் சேகரிப்பிலிருந்து வெகுவாக வெட்டிவிட்டது. இன்றைய வரலாற்று ஆய்வாளன் இந்திய வரலாற்றைப் பார்க்கும் பார்வை ஒரு அன்னியனின் பார்வை. சுவிட்சர்லாந்தையோ அல்லது டென்மார்க்கையோ சேர்ந்த ஒரு அன்னியநாட்டு மாணவன் இந்திய கிராமப் புறத்துக்கு வருகிறான என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் எப்படி அந்த கிராமத்தின் வரலாற்றை அணுகுவானோ அதற்கும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறோ சமூகவியலோ படித்த ஒரு ஆராய்ச்சி மாணவன் இக்கிராமத்தின் வரலாற்றை அல்லது பண்பாட்டை அணுகுவதற்கும், எவ்வித வேறுபாடும் இருக்காது என்றே கருத வேண்டியுள்ளது. ஒருவேளை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவனிடம் ஒரு அதிகப்படி சுமையாக மார்க்சிய சித்தாந்த பார்வையும் சேர்ந்து இருக்கலாம்!
வலங்கை மாலை ஒரு வில்லுப்பாட்டு நூல். சான்றார் (நாடார்) சமுதாயத்தின் வலங்கை உய்யக்கொண்டார்கள் பிரிவின் தோற்றம் முதல், வரலாற்றுக்காலங்களில் இச்சமுதாயத்தின் வளர்ச்சி, எழுச்சி, மறு எழுச்சி என அனைத்தையும் கதைப் பாடல்களாக்கி, சான்றார் சமுதாய குல தெய்வ, குடும்ப ஊர்க் கோயில் திருவிழாக்களில் இதைப் பாடுவது இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை நிலவியுள்ளது.
இப்பாடலின் வரலாற்றையும், அதனுடன் இப்பாடல் கூறும் தொன்மக் கதையில் குறியீட்டுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் வரலாற்றுத் தரவுகளையும் ராமச்சந்திரன் விவரிக்கிறார். காலப் பயணம் என்று சொல்லத்தக்க விறுவிறுப்புடன் இது நிகழ்கிறது! உதாரணமாக, வித்யாதர மகரிஷி நாக கன்னியரை மண்ந்த்தால் உருவான சந்ததிகள் சான்றோர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவள் பத்திரகாளி. வித்யாதரர் என்பதை வானவர் என்பதுடனும், இப்பதம் தமிழக மன்னர்குல பெயராகவும் பயன்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டுகிறார்.
இன்றைய அறிதல்கள் அல்லது பெருமிதக் கற்பிதங்களைக் கொண்டு நம் பழைய வரலாற்றினை மீட்டெடுக்க முயல்வது பல அபத்தங்களை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, ‘நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன. உதாரணமாக, வேங்கி அரசு ‘சதுர்த்தான்வயர்’ அல்லது சூத்திர குலத்தவராகத் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்ட வெலநாண்டி அரசர்கள் வசம் சென்றதையும், அவர்களுக்கு “சோடர்” என்ற பட்ட பெயர் இருந்ததையும் ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார். காகதீய அரசர்களும், அரவீடு ரெட்டிய அரசர்களும் தம்மை சூத்திர குலத்தவர் என்றே பெருமையுடன் கூறிக்கொண்டனர். க்ஷத்திரிய சமுதாய வெளிக்குள் குடியானவர் குலங்கள் நுழைந்த இந்த நிகழ்ச்சி, க்ஷத்திரிய முறைப்படி பூணூல் அணிந்து வேதம் பயின்றனவாக கலிங்கத்துப்பரணி குறிப்பிடும் முதல் குலோத்துங்க சோழனது ஆதரவில் தான் அதன் முழுமையான முனைப்பை எய்திற்று என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் ராமச்சந்திரன் (பக். 65-66).
சோழப்பேரரசின் வீழ்ச்சி, இஸ்லாமியப் படையெடுப்பை எதிர் கொள்ள தமிழ் மக்களை திரட்ட வேண்டிய அவசியம் இவற்றால் பல சமூக மாற்றங்களைத் தமிழ்நாடு எதிர்கொண்டது. “கிபி 12-13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியா முழுமையுமே இஸ்லாமிய ஊழி வெள்ளத்தில் சிக்கித் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தி, தென்னிந்தியாவிலும் இந்த வெள்ளம் பரவவிடாமல் தடுக்கின்ற ஒரு ஜனநாயகக் கூட்டணியே, சம்புவரையர், வாணர் மற்றும் ஹொய்சளர் கூட்டணியாகும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார் (பக். 68).
இந்த சமுதாய அலை மோதல்கள் சான்றோர் சமுதாயத்தின் சமூகவெளியைப் பாதித்தன என்று சொல்லும் ராமச்சந்திரன், நாடார் சமுதாயத்தினரின் பாரம்பரிய அரச குலத்தன்மைக்கு வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இருந்தமையை பல தரவுகளின் மூலம் காட்டுகிறார்:
அரசகுலம் என்பது போர்த்தொழிலையும் குடிகாவலையும் (’பிரஜானாம் பரிபாலனம்’) தன் பரம்பரை உரிமையாகக் கொண்ட குலம் … தமிழகச் சான்றார் குலத்தில் பேரறமுடையார், அடக்கமுடையார் என்ற இரு பிரிவுகள் உள்ளன என்று கொங்கு நாட்டுத் திருமுருகன் பூண்டிச் சான்றார் மடத்துப் பட்டயம் குறிப்பிடுகிறது. பேரறமுடையார் என்ற பிரிவில் சேனாதிபதி என்ற வடசொல்லின் பிரிவாகிய ஏனாதி, பணிக்கன், எழுநூற்றுவர், வலங்கை உய்யக் கொண்டார் போன்ற பிரிவுகள் இருந்தன என கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. … வலங்கை உய்யக் கொண்டார் என்ற பிரிவினர் ’வலங்கை உய்யக் கொண்ட வாள்வீரர்’ எனக் கிபி 17 ஆம் நூற்றாண்டு வில்லுப்பாட்டில் குறிப்பிடப்படுகின்றனர். சோழ அரச குலத்தொடர்புடைய போர் வீரர்களான இவர்கள், காளியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். கிபி 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த சிங்களாந்தகபுரம் (பெரம்பலூர் மாவட்டம், துறையூர் அருகிலுள்ள ஊர்) கல்வெட்டில் வலங்கை உய்ய கொண்டார் என்ற இப்போர் வீரரின் புராணச் சிறப்பு “ஸ்ரீ அமராவதிக்குத் தலைவர்” என்ற பட்டத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இக்குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்ற முசுகுந்த சோழன் கதையுடன் தொடர்புறுகின்றது. மகதை நாடாள்வான் எனப்பட்ட வானாதிராயனை ஒடுக்கி வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளித்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.சான்றார் குலத்தவர் க்ஷத்திரிய போர்வீரர்களாக மட்டுமல்லாது, அந்த போர்க் கலைகளை சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் ஆசான்களாகவும், தோழர்களாகவும் இருந்தனர். ஒரு கலையில் ஒருவருக்கு ஆச்சாரியனாக இருக்கும் ஒருவர், மற்றொரு கலையில் அல்லது அறிவுத்துறையில் அன்னாருக்கு சீடராகவும் இருக்க முடியும். ராமச்சந்திரன் கூறுகிறார்:
ஐம்பொழில் பரமேசுவரியைக் குலதெய்வமாகக் கொண்ட ஐந்நூற்றுவர் என்ற வணிகப் பிரிவினர் வலங்கை உய்யக் கொண்டார்களுக்குப் பலவிதமான சிறப்புகள் செய்தார்கள் என்றும் தங்கள் தோளில் அவர்களை தூக்கிச் சுமந்தனர் என்றும் அதனால் வலங்கை உய்யக் கொண்டார்கள் செட்டி தோளேறும் பெருமாள் என்ற சிறப்பு பட்டம் பெற்றனர் என்றும் அறிகிறோம் (பக்.162-3)
இன்று ஹிந்து வீடுகளிலெல்லாம் கொண்டாடப்படும் நவராத்திரியும் ஆயுத பூஜையும், ஒருகாலத்தில் பாப்பார சான்றார் எனும் சான்றார் குலப்பிரிவினரின் குல உரிமையாக, ஆயுத பூஜை – காளி வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. அது கலைமகள் பூஜையாக இடைக்காலத்தில் மாறி, பின்னர் ஜனநாயக யுகத்தில் காலனிய எதிர்ப்புக் குரலுக்கும் அணி சேர்க்கும் விதமாகப் பரந்து விரிவானது என்று ஒரு கருத்தையும் முன்வைக்கிறார் ராமச்சந்திரன் (பக். 180-196).சேரநாட்டில் சான்றார் பிரிவினர் சேர வம்சத்தவராக இருந்தனர். சேரமான் பெருமாள் அரசர்கள் பனம்பூமாலையை அணிந்த அரசகுலத்தவர் ஆவர். கி.பி எட்டாம் நூற்றாண்டில் இராசசேகரன் என்ற மன்னன் சேரமான் பெருமாளாக இருக்கையில், காலடியில் ஆதிசங்கரர் பிறந்தார். இந்த இராசசேகரன் ”சௌகான்” (சோவன் என்ற ஈழச்சான்றார் பட்டத்தின் திரிபு) குலத்தவன் என்றும், ஆச்சார்யன் (களரி ஆசான்) என்றும், ஆதி சங்கராச்சாரியாரின் நெருங்கிய நண்பனாகவும், பின்னர் சீடனாகவும் இருந்தவன் என்றும், கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மாதவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்ட ”சங்கரவிஜயம்” என்ற சமஸ்கிருத நூல் தெரிவிக்கின்றது. இம்மன்னன் தொடக்கக்காலத்தில் ஆதி சங்கரருக்கு களரிப்பயிற்சியின் அல்லது அங்கக்கலையின் நுட்பங்களைக் கற்பித்தான் எனது நம்மால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஓர் உண்மையாகும். சான்றார் குல மடத்துப் பட்டயமான கருமாபுரம் செப்பேடு, சான்றார் குலத்து முன்னோர் ஒருவரைக் குறிப்பிடும் போது, ‘மன்னருக்கு மன்னராம் சங்கராச்சாரியாருகுக் தயவுடன் உபதேசம் தானருளிச் செய்தவன்’ என்று குறிப்பிடுகின்றது. இக்குறிப்பு இராசசேகரனையும் அம்மன்னன் கற்பித்த அங்கக்கலைப் பயிற்சியையுமே சுட்டுகிறது எனத் தெரிகிறது (பக்.164).
இறுதியாக சில கேள்விகள் எழலாம். இத்தகைய ஆராய்ச்சிகளால் என்ன பயன்? பழம்பெருமை, குலப்பெருமை, சாதிப்பெருமை பேசுவதுதானே இது?
இந்தக் கட்டுரையில் முதலில் கூறியது போல, இந்திய வரலாறு என்பது குவித்தன்மையற்றது. அது அறிவுலக ஏ.சி. சுவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமல்ல. சனங்களுடன் சடங்குகள், கதைப்பாடல்கள், இறைத் தொன்மங்கள் மூலமாக பகிர்ந்து வளர்க்கப்பட்ட ஒரு கூட்டு நினைவாக விளங்குகிறது.
ஒரு தெளிவான எடுத்துக்காட்டைக் காணலாம். அரசகுல சான்றார்களில், பேரறமுடையார் பிரிவில், எழுநூற்றுவர் என்கிற பிரிவு உள்ளது. இந்த ’எழுநூறு’ என்ற எண்ணிக்கை, சிங்கள நாட்டிற்கு 700 வீரர்களுடன் சென்று ஆட்சியைக் கைப்பற்றிய கலிங்க அரசன் விசயனின் தொடர்பைக் குறிக்கின்ற எண்ணிக்கையாக இருக்கலாம் என்கிறார் ராமச்சந்திரன் (பக்.163). அப்படி என்றால், சிங்களவரும் சரி, தமிழரும் சரி, இருவேறு இனத்தவரல்லர் என்றாகிறது. ஒருவரோடு ஒருவர் உறவுள்ள சமுதாயக்குழுக்கள். தாயாதிகள். ஆம், வரலாற்று மோதல்களும், இணக்க பிணக்கங்களும் இருந்திருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகள் ஒருவரையொருவர் கொன்றழிக்கும் இனவெறி வேறுபாடுகள் அல்ல. அப்படியானால், சிங்கள பேரினவாதிகளால் கொல்லப்பட்டும், திராவிடம் பேசி உசுப்பேத்திய தமிழக ’உடன்பிறப்புக்களால்’ முதுகில் குத்தப்பட்டும் ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்.
காலனிய, மார்க்சிய வரலாற்று அறிஞர்களோ,
இந்திய வரலாற்றினையும் இத்தகைய மோதல் போக்கு கொண்ட ஒரு போர்க்களமாக மாற்றவே
முயற்சி செய்கின்றனர். ஒரு தந்திரமான சிறு குழு, அறிவற்ற பெருமந்தையை
அடக்கியும், ஏமாற்றியும் வந்ததாகவே வரலாற்றைக் காணவும், சமைக்கவும்
முற்படுகின்றனர். அதில் அவர்கள் பல நேரங்களில் பொய்யான கதையாடல்களை
உருவாக்கவும் தயங்கவில்லை. இவர்களுக்கு இந்திய வரலாறு பதியப்பட்டு
வளர்க்கப்பட்ட விதம் ஏமாற்றம் அளித்ததில் வியப்பில்லை. எனவேதான் காலனிய
‘வரலாற்றறிஞர்களும்’, அவர்களின் கூலிப்படை சந்ததிகளான உள்ளூர் மார்க்சிய
அறிவுசீவிகளும், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவில்லை என்கிற அதே கதையை கூறிவருகின்றனர்.
நடுவில் நிற்பவர்: எஸ்.ராமச்சந்திரன் (நன்றி: திண்ணை.காம்)
வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்
ஆசிரியர்: எஸ்.ராமச்சந்திரன்
வெளியிட்டோர்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பக்கங்கள்: 215, ஆண்டு: 2004, விலை: ரூ 70.
நன்றி-அரவிந்தன் நீலகண்டன்
No comments:
Post a Comment