தூத்துக்குடி மாவட்டச் சிறுமரபுத் தெய்வ வழிபாட்டுச் சின்னங்கள்



தூத்துக்குடி மாவட்டச் சிறுமரபுத் தெய்வ வழிபாட்டுச் சின்னங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாடுகளுள் வீரர்கள் வழிபாடு,முன்னோர் வழிபாடு இன்றும் நம்மிடையே உள்ளன. இலக்கியங்கள் காலக்கண்ணாடியாக விளங்கும் ,செவ்வியல் இலக்கியமாகட்டும் நாட்டுப்புற இலக்கியமாகட்டும் அதன் கதைத் தலைவனாக ஒரு வீரன் இருப்பான்,அவரது சமாதி,கல்லறை மற்றும்,நினைவுகூறும் இடங்களில் கற்களை நட்டிவைத்தும்,உயரமான நினைவு சின்னங்களையோ அமைப்பர்.இறந்தவரின் பதவி வசதிகேற்ப நினைவுச்சின்னத்தின் வேலைப்பாடு அமைந்திருக்கும். போரில் இறந்தாலும் ,மானம் கருதி உயிர் துறந்தாலும்,வெட்டுப்பட்ட வாதைகளாவர்.அவர்களது உடலையும் எலும்புத்துண்டுகளையும், எடுத்து வைத்து சிதையிலிட்டு அதில் கிடைத்த சாம்பலை வைத்து அதன் மீது நடுகற்களை அமைத்தனர். நடுகற்களின் மீது அவ்வீரனின் உருவம் புடைச்சிற்பமாக, அல்லது கோட்டுருவமாக இருக்கும். அவ்வீரனின் பெயரும் அவன் இறப்பிற்கான காரணமும் குறிப்பிடப்பிட்டிருக்கும். சில நேரங்களில் குறிப்பிடப்படாது. இவைகள் நடுகற்கள் [HERO STONE] என்று அழைக்கப்படும். கி.பி.1547 இல் இளவேலங்காலில் வெங்கலராஜாவிற்கும் பட்டம் பெருமாளுக்கும் நடைபெற்ற போரில் இறந்தவர்களுக்கு 10 நடுகற்கள் அமைக்கப்பட்டன. பெண்கள் வீரத்தின் சின்னங்களாக இருந்திருக்கின்றனர். தாய்மண்ணை காப்பதற்கும் ,மானத்தைக் காப்பதற்கும் மாண்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களுக்கு நடுகற்கள் அமைக்கப்பட்டன. கணவன் இறந்தவுடன், அவரை எரிக்கும் தீயுள் விழுந்து இறந்து விடுவார்கள் . இவ்வாறு தீப்பாய்ந்த பெண்களுக்காக சதி கற்கள் அமைப்பதுண்டு. அவர்களுக்கு கோயில் அமைத்து கொடைவிழாவை தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டத்தினர் நடத்தி வருகின்றனர். ஏரல் அருகே தீப்பாச்சி என்ற பெயரில் ஊர் உள்ளது. சாதிமீறிய காதலுக்கு தீ வைத்துக் கொன்று ;வெட்டுப்பட்ட வாதைகளாக்கி சதிகற்களாக நிறுத்தி வழிபடுகின்றனர். இசக்கி தெய்வமாக போற்றுகின்றனர். நடுகற்கள், சதிகற்கள்,அரிகண்டம்,நவகண்டம், தன்னைத்தானே கொற்றவைக்கு பலிகொடுத்தவருக்கும், குலதெய்வ வழிபாட்டில் இடம் உண்டு. மக்களின் வழிபாட்டு மரபில் இத்தெய்வங்களுக்கு வழிபாட்டையும், கொடைவிழாவையும் காணமுடியும். வாழ்ந்து மறைந்த மன்னர்கள், வீரர்கள், தளபதிகள் ,வீரர்கள் குலதெய்வமாகவும் சில வேளைகளில் பொதுவான தெய்வமாகவும் , அய்யனார் என்ற பெயரில் உள்ளனர். சிற்பமரபில் இத்தெய்வங்களின் கால்கள் அகட்டி வைக்கப்பட்டிருக்கும். கையில் உள்ள வாள் பூமியை நோக்கி குத்தி வைப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். கற்சிலை, மரச்சிலை , சுடுமண் சிலைகளிலும் இது போல இருக்கும். பெண் தெய்மானால் கைகளில் குழந்தையுடன் காட்சிதருவார்கள். இம்மாவட்டத்தில் வழிபாட்டில் பூவுடையார் அய்யனார், ஆயிரங்காவு அய்யனார், படைப்போர் அய்யனார், சடகோபல் அய்யனார், பொன்னும்பெருமாள் அய்யனார், பச்சைப்பெருமாள் அய்யனார், அருஞ்சுனை அய்யனார், கருக்குவேல் அய்யனார், இளம்பாளை அய்யனார், வணங்காமுடி அய்யனார், குன்னிமலை அய்யனார், தூத்துவால் அய்யனார், மானாடு அய்யனார், தலையூனி அய்யனார், பொன்வண்டு அய்யனார், பலவேசமுத்து அய்யனார், மருதமலை அய்யனார், அல்லியூத்து அய்யனார், குட்டிசாத்தான் அய்யனார், தூசிமுத்து அய்யனார், கோட்டைவாழ் அய்யனார், இல்லங்குடி அய்யனார், தலகாணி அய்யனார், மணிமுத்து அய்யனார், மற்றும் பலபெயர்களில் தங்களுடைய இருப்பிடங்களை கண்டறிந்து பூஜைகள் பெறுகின்றனர் . மேலும் ஐவர் ராஜாக்கள், குலசேகரராஜா, சிவனிணைந்த பெருமாள் ராஜா, வெங்கலராஜா, உடையார் சுவாமி, கிழக்கித்துமுத்துசாமி, சரிகுலப்பெருமாள் சாமி, உலகுடையபெருமாள் சாமி, பாதகரை சாமி, பட்டாணி சாமி, பனையடி சாமி, உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர். இத்தெய்வங்கள் கொடைவிழாவில் வில்லுப்பாடல்,கணியான் பாடல்களை வழியாக நிகழ்த்துக்கலைகள் நடைபெறுகின்றன. வில்லுப்பாடலில் பிறந்த கதை, இறந்த கதை என்று இரண்டு வகைகள் உள்ளன. இத்தெய்வங்களுடன் இருபத்தொரு துணை தெய்வங்களும் இருப்பார்கள். , தவசுத் தம்பிரான், பத்திரகாளி, பரமராக்கித்தி, சிவனிணைந்தபெருமாள், தளவாய்மாடசாமி, சுடலைமாடன், காத்தவராயன், வன்னியராயன், பாவாடைவராயன், பட்டவராயன், பெரியதம்பி, சின்னதம்பி, கருப்பன், முன்னடியான், பின்னடியான், முண்டன், பேச்சியம்மன், இசக்கியம்மன், பலவேசக்காரன், முனீஸ்வரன், சங்கிலிமாடன் இவ்வாறு மேற்கண்ட பெயர்களுடனோ அல்லது சிறிதளவு மாற்றத்துடனோ இருக்கும். சிலைகள்- சிற்ப மரபிலிருந்து மாறுபட்டு இருக்கும்.சிலைகள் அளவில் பெருசாகவும் அல்லது சிறுசாகவும் இருக்கும்.கையில் ஆயுதம் வைத்திருக்கும்.பூமியில்ஆயுதத்தை ஊன்றி நிற்பார்கள். பூடங்கள் - இவைகள் களிமண் சாந்தினால் அமைக்கப்படுகின்றன. நீண்டசெவ்வக வடிவில் உயரமாக அடிப்பாகம் அகலமாகவும் மேல்பாகம் அடிப்பாகத்தை விட அளவில் குறைவாகவும் இருக்கும். பீடங்கள் - செவ்வகம் அல்லது சதுரவடிவில் 1 அடியிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இவைகள் பீடங்கள் என்றழைக்கப்படுகின்றன. சிற்பபீடங்கள்- பீடங்களின் உச்சியில் அல்லது முன்பகுதியில் தெய்வத்தின் வடிவம் அல்லது முகத்தின் அமைப்பு காணப்படும். ஓவிய பீடங்கள்- பூடங்களின் முன்பகுதியில் வண்ணங்களைக் கொண்டு தெய்வ உருவத்தை வரைந்திருப்பர். பரண்கள்- நான்கு தூண்களை உயரமாக நிறுத்தி மேல் பாகத்தை,கூம்பு வடிவில் அமைத்து உச்சியில் கலசம் வச்சுருப்பங்க. இத்தூண்களை மரச்சட்டங்கள் இணைத்திருக்கும். மண்சட்டிகள்- புதிய மண்சட்டியை கவிழ்த்தி வைத்து அதன்மீது வெள்ளையடித்து வழிபடுவார்கள். ஆயுதங்கள்- ,சூலாயுதம்,வேல்,கழுமரம்,வாள்,அறிவாள்,ஆகியவற்றை நட்டிவைத்தும்,சாய்த்து வைத்தும் வழிபடுவர். திரைச்சீலை- கோயிலில் தொங்கும் திரைச்சீலை ஓவியம் வரையப்பட்டிருக்கும் . விளக்குக்கள்- மாடவிளக்கு, குத்துவிளக்கு தெய்வமாக வழிப்படுகின்றன. மரங்கள் - பனைமரம், வேப்பமரம், உடைமரம், பூவரசுமரம், என பல்வேறு மரங்களிலும் தெய்வங்கள் குடிருக்கின்றன. பனைநார்ப் பெட்டி- வீடுகளில் தென்மேற்கு மூலையில் பனைநார்ப் பெட்டியில் இறந்துபோன கன்னியின் உடைகள்,அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும்,நகைகளையும் கட்டி வைத்திருப்பர்.இது கன்னி தெய்வ வழிபாடாகும். வழிபாடு- கிராமப்புற தெய்வங்களுக்கு நாள்வழிபாடு , வாரவழிபாடு, மாத வழிபாடு, ஆண்டுவழிபாடு, கொடைவிழா வழிபாடு என்று சிறப்பாக நடத்தப்படுகின்றன. செவ்வாய்க் கிழமை, வெள்ளிகிழமை வழிபாடு உண்டு, கொடைவிழாவில் ஆடு, கோழி, பன்றி பலியிட்டு பொங்கலிட்டு முன்னோருக்கு படையலிட்டு வழிபடுகின்றனர். தெய்வத்தை வரவழைக்கும் ஊடகங்களாக வில்லிசை, கணியான் இசைகள் உள்ளன. பாடலுக்கேற்ப சாமியாடல் நடைபெறுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் வழிபாட்டு மரபுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறப்பையும் பெற்றுள்ளன. ஆக்கம்- முனைவர் தவசிமுத்து மாறன்

No comments:

Post a Comment