"அடிமைத்தனம் அகலட்டும் "
அற்றை நாள் அரசர்கட்கு அவர்களின் ஆட்சி நிலைக்க வள்ளுவப் பெருந்தகை பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு ' என்று சொல்லிப் போர்ந்தார் . இக்குறள்வழி அரசர்கள் நடந்தார்களோ இல்லையோ , பின்னால் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனைப் பின்பற்றி நம் நாட்டை அடிமைப்படுத்தினார்கள் .
பல மொழிகள் கற்றறிந்த மேதையான சர் வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார் . இவர்தான் ' ஏஷியாடிக் சொசைட்டி ' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் . ஹிந்துகளுக்கு என்று ஒரு சட்ட நூலை , மனுதர்ம சாஸ்திரப்படி என்று சொல்லி உருவாக்கினார் . ஹிந்துக்களின் சமூக ஒற்றுமை குலைய இவரது தவறான மனுஸ்மிரிதியின் மொழிபெயர்ப்பும் ஒரு காரணம் .
பாரதத்தின் இதிகாச நூல்களான இராமயணத்தைப் படைத்தவர் ' வேடுவ குல ' மகரிஷி வால்மீகி . மகாபாரத்தை யாத்தவர் ' செம்படவ ' இனத்தில் உதித்த பகவான் வியாசர் . இன்று நாள்தோறும் பலகோடி மக்கள் உச்சாடனம் செய்யும் காயத்திரி மந்திரத்தை உலகிற்கு அளித்தவர் ' க்ஷத்திரிய'ரான சுவாமி விசுவாமித்திர ரிஷிதான் . இராமகாதையை அமுதத் தமிழிலில் வடித்த கம்பநாடர் உவச்ச குல மரபினர் .
இவர்களில் எவரும் அந்தணர் இல்லை . ' எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ' என்ற வகையான் நாம் வாழாது , குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து பொருள் சொன்னாற்போல் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வழக்கில் இருந்த மனு ஸ்மிருதியைத் தவறாக அடையாளப்படுத்திய ஆங்கிலேய அறிஞரின் கூற்றை நம்பி நம்மை நாமே கூறுபோட்டுக் கொள்கிறோம் .
தரும நூலை தவறான சட்டவடிவ நூலாக்கியது போலவே நமது தொன்மையான கல்வி முறையை அகற்ற லார்டு மெக்காலே என்பவர் 1835 - இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து , ' நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தபோது பிச்சைக்காரனையோ . திருடனையோ பார்க்கவில்லை . அத்தகைய செல்வ வளம் நிரம்பிய நாடு ; உயர்ந்த நன்னெறிகள் வாய்க்கப்பெற்ற
மக்கள் .
அவர்களது முதுகெலும்பாக இருக்கின்ற தொன்மையான தெய்வ விழுமியங்களை அழித்தால் ஒழிய இந்தியாவை நம்மால் வெல்லமுடியாது . எனவே அவர்களது புராதனமான கல்வி முறையைவிட நமது மொழி , கலாசாரம் இவையே மேலானவை என்று இந்தியர்களை எண்ணும்படி நாம் மாற்றி விட்டால் அந்த நாட்டை நம் ஆளுகைக்குக் கொண்டுவந்து விடலாம் . அப்போது இந்தியர்கள் ரத்தத்திலும் , நிறத்திலும் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்கள் . ஆனால் குணங்களில் , கருத்துகளில் , ஒழுக்க நெறிகளில் , அறிவாற்றலில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள் என்று சொல்லி மெக்காலே கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . இதனால் சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் இந்த கல்வி முறையால் நமது முன்னோர்களின் ஆற்றலை , பெருமையை முழுமையாக உணரத் தவறிவிட்டோம் . அரசியலில் தொடங்கி , சட்டங்களில் தடம் பிறழச் செய்து கல்வி முறையிலும் இந்தியர்களை மதியிழக்க சதி செய்தார்கள் .
1836 - இல் அயர்லாந்து பாதிரி கால்டுவெல் இந்தியா வந்தார் . முதலில் தமிழ் . சம்ஸ்கிருதம் இரண்டும் இரண்டறக் கலந்த உறவை வெட்டிட ' ஒப்பிலக்கணம் ' என்ற பெயரில் இந்திய மொழிகளை , குறிப்பாக சம்ஸ்கிருதத்தையும் , தமிழையும் மோதவிட்டார் . கிறித்துவ மத போதகர்களால் உலகில் அழிக்கப்பட்ட மொழிகள் எப்ரூ , குரோன் , கிரேக்கம் , லத்தீன் , காலிக் போன்றவை . இதைப்போன்றே கால்டுவெல் 50 எழுத்துகளைக் கொண்ட மலையாளம் , தெலுங்கு , கன்னடம் போன்ற மொழிகளை 30 எழுத்துகளை கொண்ட தமிழுடன் இணைத்து இவை “ திராவிட மொழிக் குடும்பம் ' என்று கூறி , சம்ஸ்கிருதம் , திராவிட மொழிக் குடும்பத்துடன் சற்றும் தொடர்பு இல்லாதது எனும் மாயையை உருவாக்கினார் . அன்று அவர் தோற்றுவித்த மொழிக்காழ்ப்பு இன்று வரை தொடர்கிறது .
பிறகு 1849 - இல் “ தின்னவேலி சாணார்ஸ் : தெயர் ரிலிஜீன் அண்ட் தெயர் மாரல் கண்டிஷன் ' ( திருநெல்வேலி சாணார்கள் - அவர்களது மதமும் , ஒழுக்கமும் ) என்ற நூலை லண்டனில் வெளியிட்டார் . இதில் நாடார்களைத் தன்னால் முழுமையாக மதம் மாற்ற முடியாமல் போனதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார் . அவை , சாணார்களின் பரம்பரை குணம் , அவர்கள் தங்களின் முன்னோர் பாதையிலேயே பயணிக்க விரும்புவது , புதிய கருத்துகளை உள்வாங்கும் திறமையின்மை ஆகியவை . இவ்வாறு குறிப்பிட்டு ஆங்கிலத்தில் இவர் எழுதிய புத்தகம் இன்றும் உள்ளது .
இதனை 1823 - இல் பிறந்த அருமைநாயகம் என்ற கிறித்துவ சாணார் தமிழில் மொழி பெயர்த்தார் . அக்கால கட்டத்தில்தான் ஹிந்துக்களில் ஒரு பிரிவினர் கால்டுவெல் கூற்றை நம்பி நாடார்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது எனத் தடுத்தனர் . இது தொடர்பாக நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது ( ஓ எஸ் நம்பர் 88 ஆஃப் 1872 ) .
ஈரோடு மாவட்டம் பாசூர் மடாதிபதி ஐயாசாமி தீட்சிதர் , கால்டுவெல் பாதிரியின் பிரசாரம் பொய் என்றும் , நாடார்கள் பாண்டிய குலத்தைச் சார்ந்த க்ஷத்திரியர்கள் என்றும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார் . பின்னர் நாடார்கள் மீதான ஆலய பிரவேச தடை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது .
இதைப்போன்றே கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் ( ஓ.எஸ் 33 ஃ 1898 ) நாடார்களுக்காக தில்லைவாழ் தீட்சிதர்களும் , பிற அந்தணர்களும் மதுரை சார்பு மன்றத்தில் சாட்சியம் அளித்தனர் . நாடார்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆதாரமாக வைக்கப்பட்டவை கால்டுவெல்லின் நூல்கள் .
கால்டுவெல் எழுதியுள்ளதை நம்பி ஹிந்துகளில் சில பிரிவினர் நாடார்களின் கோயில் பிரவேசத்தை எதிர்த்ததால் , அருப்புக்கோட்டை , மதுரை , கழுகுமலை , கமுதி , பாட்டகுளம் , புதுப்பட்டி , சுக்கிரவார்பட்டி , ஐயம்பட்டி , குன்னூர் , சங்கரலிங்கபுரம் , கரிசல் குளம் , கட்டமார்பட்டி போன்ற இடங்களில் 1860 முதல் 1900 வரை ஜாதிக் கலவரங்கள் நடந்தன . உண்மையில் , சோழ - பாண்டிய மன்னர்களின் ஆட்சியின்போது இம்மக்கள் ' நாடாழ்வான் ' எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் கல்வெட்டில் ஜெயமுரி நாடாழ்வான் என்பவர் 1053 - ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்குப் படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது . அச்சரபாக்கம் கோயில் கல்வெட்டிலும் , மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டிலும் , மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1230-14 - ஆவது ஆட்சி கால கல்வெட்டிலும் கண்டியூர் நாடாழ்வான் சாத்தநேரி நிலங்களைக் கொடையாக பெற்றதும் குறிக்கப்பட்டுள்ளது .
உ.வே.சா. ( 1842 ) ' நாடாழ்வான் ' எனும் சொல் சாணார்களின் பட்டப்பெயர் என்று எழுதியுள்ளார் . இந்திய சென்ஸஸ் ( மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ) அறிக்கை ( 1891 ) வால்யூம் 12. பக் 297 - இல் நாடாழ்வான் என்பவர் நாடு எனும் பகுதியை ஆளுமை செய்பவர் என்ற குறிப்பு உள்ளது . 1907 - ஆண்டு வி . நாகம்மையாவரால் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பில் , சாணார் வம்சத்தில் உடுமால்கட்டு என்ற பெயரில் தலைப்பாகையும் , வீரத்தின் அடையாளமாக சத்திரிய பாரம்பரியம் மிக்க உடைவாளையும் அணிவதை சம்பிரதாயமாக கொண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர் திருக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு அடித்தளம் அமைத்து அதன் பிறகு தன்னால் கட்ட முடியாததால் பாண்டிய மன்னர்களின் ஒருவன் , ' வருங்காலத்தில் கட்டி முடிக்கின்றவனது திருவடிகளை என் சென்னியில் வைத்து போற்றுவேன் ' என்று கல்வெட்டாக எழுதி வைத்தான் . இன்றைக்கு நாடார் குலத்தோன்றல் சிவந்தி ஆதித்த நாடார் தன் காலத்தில் அந்த ராஜகோபுரத்தைக் கட்டி குடமுழுக்கும் செய்து புகழாய்ந்தார் . தற்போது திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு எச்.சி.எல் . நிறுவன அதிபர் ஷிவ் நாடார் ரூ . 200 கோடி கொடுத்துள்ளார் .
வணிகம் இயற்றி வாழ்க்கை நடத்த வந்தவர்கள் நம்மிடையே வேற்றுமையுணர்வைக் கற்பித்து நம்மை பிரித்தாண்டார்கள் . இதனால்தான் 1902 பிப்ரவரி 4 - ஆம் நாள் சென்னை " மகாஜனசபை ” தனக்கு அளித்த வரவேற்பில் மகாகவி பாரதியாரால் தனது குருவாகப் போற்றப்படும் சகோதரி நிவேதிதை . ' இந்திய மக்களாகிய உங்களிடம் மற்ற நாடுகளுக்குத் தருவதற்கு ஆன்மிகக் கருத்துக்கள் நிறைய இருக்கின்றன . இந்தியா மேற்கு நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ளுவதற்கு ஆன்மிகத்தில் எதுவும் இல்லை .
இந்தியாவிற்குத் தேவைப்படும் சமுதாய மாற்றங்களைச் செய்வதற்கு உரிய முழுத் தகுதியும் இந்தியர்களாகிய உங்களிடம் இருக்கிறது . இதில் தலையிட்டு அறிவுரை கூறுவதற்கு வெளியில் இருக்கும் யாருக்கும் உரிமை இல்லை மூன்றாயிரம் வருட நாகரிகம் கொண்டியிருக்கும் உங்களை சமீபத்தில் தோன்றிய மேற்கு நாடுகள் வழிநடத்தும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள் ' என்று கேட்டார் .
சகோதரி நிவேதிதையின் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் , இந்தியாவின் இன்றைய பிரச்னைக்கு விடை கிடைக்கும் . உலகுக்கு வழிகாட்ட வேண்டிய நாம் , எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை எண்ணித் தெளிவடைய வேண்டிய காலம் இது . பிரித்தாள நினைப்பவர்களை இனம்கண்டு தெளிவடைய வேண்டிய நேரம் இது !
கட்டுரையாளர் டி . எஸ் . தியாகராசன் தலைவர் , திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் .
No comments:
Post a Comment