நாடார்களின் திருமணத்தில் காணப்பெறும் பண்பாட்டுக்கூறுகள்



திருமணச்சடங்குகள் மனித வாழ்க்கைக் கூறுகளில் மனங்களின் இணைப்பாகவும் இரு குடும்பங்களின் பிணைப்பாகவும் திருமணம் என்ற நிகழ்வு உள்ளது. தென்தமிழகத்தில் நாடார் குலத்தில் திருமணச்சடங்குகள் பண்பட்ட பழக்கவழக்கமாக கடைபிடிக்கப் பெற்று வருகின்றன. ”மனப்பொருத்தமிருந்தால் மணப்பொருத்தம் வரும்” என்பதற்கேற்ப சாதகப் பொருத்தம் அல்லது மனப்பொருத்தம் நிச்சயித்தல் ; பொன் உருக்குதலும் பந்தல்கால் நாட்டுதலும் ; வெற்றிலைப் பாக்கு வைத்தல் அழைத்தல்;முகூர்த்தச் சாப்பாடு அல்லது மாமன் சோறு போடுதல், தாய் மாமன் சடங்கு நடத்தல், நகர் வலம் வருதல், மைத்துநர் வரவேற்றல் ,திருநாண் தாலி கட்டுதல், சொக்காரர்கள் அனந்தரம் செய்தல் எண்ணெய் தேய்த்தல், மறுவீடு செல்லுதல் என்று திருமணத்தின் உட்கூறுகளாகப் பல நிகழ்வுகள் காணப்படுகின்றன. அவைகள் சுருக்கமாக எடுத்தியம்பப்படுகின்றன. மனப்பொருத்தம் மனப்பொருத்தம் ஏற்படுவதற்கான சந்திப்பினை ஜாதகங்கள் ஏற்படுத்துகின்றன. மணமகனின் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து பொருத்தமிருப்பின் மணமகன் வீட்டிற்குச் சென்று மணமகனின் பழக்கவழக்கம் தொழில் மாமனார் மாமியாரின் குணநலன்கள் குடும்பத்தின் நற்பெயர்கள் இவற்றை நேரடியாகக் காண்கின்றனர். தங்களுடைய மனதிற்குச் சம்பந்தம் செய்திட ஏற்ற இடம் என்று மனதில் பட்டவுடன் தங்களுடைய புதல்வியின் ஜாதகத்தைப் பார்த்து நல்ல பதில் கூறிட பணிக்கின்றனர். மனமகிழ்ச்சியான செய்தி வந்தவுடன் மணமகளை பார்க்க கோயில் அல்லது தங்களுடைய வீட்டிற்கு நல்ல நேரத்தில் வருகை தர வேண்டுகின்றனர். பெண் பிடிக்கிறதென்றால் திருமணப் பேச்சுத் தொடங்குகிறது. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிற்குப் பூ வைத்து திருமணம் உறுதி செய்திட நல்ல நாளைக் கூறுகின்றனர். நிச்சயித்தல் (உறுதி செய்தல்) மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் வீட்டிற்கு ஒற்றைப்படை எண்களின் கூட்டுத்தொகை வரும் விதத்தில் பழங்கள் பூக்கள் தட்டுகள் பின்தொடர ஆரவாரத்துடன் வருகின்றனர். பெண்வீட்டார் அன்புடன் வரவேற்கின்றனர். மணமகளுக்குப் பூ வைத்து விடுகின்றனர். பெண்கள் குரவையிடுகின்றனர். அன்றைய நாளில் சூலமற்ற திசை நோக்கி மணமகள் மணமகனின் பெற்றோர்கள் அல்லது குடும்பத்தில் மூத்தவர்கள் எதிரெதிரே அமர்கின்றனர். இரு குடும்பங்களின் இணைப்பின் அறிகுறியாக ஒருவரக்கொருவர் திருநீறு சந்தனம் குங்குமம் பூசிக்கொள்கின்றனர். பெண் வீட்டார் சார்பில் தாம்பளத்தட்டைச் சுற்றிலும் வெற்றிலை வைத்து பழம் பாக்கு , முனைமுறியாத மஞ்கள் துண்டு இவற்றின் மீது ரொக்கப்பணத்(சீதனம்)துடன் மல்லிகைப் பூவை சுற்றி வைத்து மணமகனின் தந்தையிடம் கொடுக்கின்றனர். இது நிச்சயதாம்பூலம் என்றும் அழைக்கப்படுகிறது. பெண்ணின் தந்தையிடம் தாம்பாளத்தை பெற்றுக் கொண்ட மணமகனின் தந்தை தம்முடைய மனைவி அல்லது குடும்பத்தில் மூத்த மருமகள் அல்லது மகளை அழைத்து அத்தட்டை வழங்குகிறார். பணம் பழம் வெற்றிலைப்பாக்கு பூ மஞ்சள் இவற்றை எடுத்துக் கொண்டு அத்தட்டை வெறுமையாகக் கொடுக்காமல் ரூ.101, 1001 என வைத்து திரும்பக் கொடுக்கின்றனர். மணமகன் மணமகள் குடும்பத்தின் பெயருடன் பெற்றோர் பெயரையும் கூறி மணமக்கள் பெயரையும் கூறித் திருமணம் உறுதி செய்துள்ளதைக் கூறுவர். மணமகளுக்குப் புதுப்பட்டு கட்டி பூச்சுடி அமரவைப்பர் வந்திருக்கும் பெரியவர்களில் ஆண்கள் குங்குமமிட்டு வாழ்த்துவர் பின்பு பெண்கள் அனைவரும் வாழ்த்துவர். மணமகள் வீட்டார் தங்களுடைய உறவினர்களுக்கும் ஊராருக்கும் அழைப்பு கொடுக்கும் போது வெற்றிலை பாக்குப் பழம் வைத்து அழைக்க வேண்டும். அதற்குரிய பழம் மணமகன் வீட்டாரே வழங்க வேண்டும் என்ற மரபு உள்ளது. ஆயிரம் இரண்டாயிரம் எனப் பழம் வழங்கவேண்டும் என பெண்வீட்டார் கேட்பர். இது பரிசப்பழம் எனப்படும். அதே போன்று மணமகன் வீட்டார் அதே எண்ணிக்கையில் லட்டு முறுக்கு கேட்கின்றனர். முன்னாளில் பொருளங்காய் (பொறிவிளங்காய்) அதிரசம் முறுக்கு வழங்கப்பட்டன. தற்காலத்தில் இது இல்லை. இப்பேச்சு வார்த்தைகள் நிறைவான பின்னவே உணவருந்தும் வழக்கம் உள்ளது. பொன் உருக்குதலும் பந்தல்கால் நாட்டுதலும் ”பொன் உருக்குவது பாதி கல்யாணம்” என்ற பேச்சு வழக்கு இவ்வட்டாரத்தில் உள்ளது. உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானவர்கள் அழைக்கப்படுகின்றனர். மணமகன் வீட்டில் பொன் உருக்குநிகழ்வு நடைபெறுகிறது. ஆசாரி வழவழைக்கப்படுகிறார். மணமகன் வீட்டிலிருந்து பெரியவர்கள் வருகின்றனர். பந்தல்கால் நாட்டுவதற்கு ”ப” என்று முனையில் செதுக்கப்பட்ட வைரம் பாய்ந்த பனைமரம் பயன்படுத்தப்படுகிறது. பல தலைமுறைகளாக பல திருமணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மரம் புனிதமிக்க மரமாகக் கருதப்படுகிறது. இம்மரத்தை சுத்தமான நீரில் கழுவுகின்றனர் மணமகனின் உறவினர்கள் சொக்காரர்கள் ஊர் யவர்கள் இம்மரத்தைச் சாய்த்துப் பிடித்துக் கொள்கின்றனர். உச்சிப் பகுதியிலிருந்து சந்தனத்தால் பட்டையிட்டு குங்குமப்பொட்டு இடுகின்றனர். புதிய மஞ்சளில் தோய்த்தெடுத்த நூலில் அதில் முனைமுறியாத மஞ்சள் வெற்றிலை இவற்றை ஒற்றை இலக்கம் வரும் விதத்தில் கோர்த்து மரத்தின் உச்சிப்பகுதியில் கட்டுகின்றனர். மாவிலை பூச்சரம் இவற்றையும் சுற்றிக் கட்டுகின்றனர். பந்தக்கால் மரத்தை வீட்டின் கன்னி மூலையில் அல்லது கிழக்கு திசை நோக்கி வீடடிற்கேதுவான முன் பகுதியில் நடுகின்றனர். பெண்களின் குரவை ஒலியும் மௌ ஒலியும் ஒலிக்கப்படுகின்றன. புனிதமிக்க இம்மரத்திற்குத் தூப தீபம் காட்டுகின்றனர். மரத்தினடியில் நீருற்றுகின்றனர். ஆசாரியிடம் தாலி செய்வதற்காகப் புதிய தங்கம் மணமகன் வீட்டாரால் வழங்கப்படுகிறது. நிறைநாழி நெல் தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் குத்துவிளக்கேற்றி அவர் அதனை யவர்கள் முன்னிலையில் உருக்குகின்றார். தங்கத்தைக் தட்டி வெற்றிலையின் மீது சந்தணம் வைத்து அதன் மீது உருக்கிய தங்கத்தை வைத்து சுற்றிலும் பூச்சரத்தால் அமைத்து அவையினரின் பார்வைக்கு அனுப்புகிறார். அனைவரும் அதனைத் தொட்டு வணங்குகின்றனர். அதன்பின்பு நிறைநாழி நெல் தேங்காய் பழத்துடன் தன்னுடைய உபகரணங்களை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். ஆசாரி புறப்பட்டுச் செல்லும் போது கைக்குழந்தையுடன் பெண்ணை எதிரே வரச் செய்கின்றனர். சம்பந்தி மரியாதை நிகழ்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் சூலமற்ற திசைநோக்கி அமர்ந்து விபூதி சந்தனம் குங்குமம் ஒருவரக்கொருவர் வைத்துக் கொண்டு தாம்பளத்தில் கொடுக்க வேணடடி சீர்வரிசைப் பணம் (ரொக்கத்தை) மணமகளின் தந்தை அல்லது பெரியவர் கொடுக்கிறார். மணமகன் வீட்டார் சார்பில் மமகனின் தந்தை அல்லது குடும்பத்தில் பெரியவர் அதனைப் பெற்றுக் கொள்கிறார். பெண்கள் குரவையிடுகின்றனர். திருமண நாள் உறுதிசெய்யப்படுகிறது. இந்நிகழ்வு முடிந்த பின்பு மகிழ்ச்சி நிறைந்திட விருந்துண்ணதல் நிகழ்கிறது. பெண்வீட்டார் தங்களுடைய இல்லத்திற்குத் திரும்புகின்றனர்.தாலி விநாயகர் சிவலிங்கம் சங்கு சக்கரம் ஆகிய வடிவங்களில் விரும்பியவாறு செய்யப்படுகின்றன. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் முற்காலத்தில் வெற்றிலை பாக்கு பழம் இவற்றை தட்டொன்றில் வைத்து திருமணத்திற்கு வாய்மொழியாக அழைப்பர். அந்நாளில் அழைப்பிதழ் கிடையாது இந்நாளில் அழைப்பிதழ் திருமணவிழாவிற்குரிய அடிப்படையாக உள்ளது. திருமண அழைப்பிதழை உறவினர்கள் பெரியவர்கள் வீடுகளுக்குக் கொடுத்து அழைக்கும் போது வெற்றிலை பாக்கு பழம் வைக்க வேண்டும் என்ற மரபு உள்ளது. அழைப்பிதழ் அச்சிட்டு வந்தவுடன் மஞ்சளை நான்கு ஓரங்களிலும் தடவி குலதெய்வக்கோயில் ஊரம்மன் கோயில் அல்லது மனதுக்கேற்ற கோயில்களில் வைத்து வழிபட்டு வந்தவுடன் அழைப்பிதழ் கொடுக்கும் வேலை நடைபெறுகிறது. பெரு நகரங்களில் மஞ்சள் குங்குமம் பழம் வெற்றிலை வைத்து நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கின்றனர். மணமகன் மாமன் சடங்கு தாயுடன் பிறந்த சகோதரன் உயர்வான நிலையில் கருதப்படுகிறார். அவருக்குப் பல சிறப்பகளை உடன்பிறந்ததாள் செய்ய வேண்டும். அதே போல் தாய்மாமன் தன்னுடைய மருமகனுக்கு உயர்வான சிறப்புகளைச் செய்ய வேண்டும். இப்பகுதியில் மணமகன் வீட்டிலும் மணமகள் வீட்டிலும் மாமன் சடங்கு முறைகள் இடம் பெறுகின்றன. தாய்மாமன் இல்லாத நிலையில் உறவு முறையில் மாமன் முறை வருகின்றவர்கள் அமரச்செய்து அச்சிறப்புகள் வழங்கப்படுகின்றன. முகூர்த்த நிகழ்வுகள் திருமணத்திற்கு முன்னிரவு திருமணத்திற்குரிய திருமாங்கல்யம் பட்டுச்சேலை பட்டு வேட்டி உட்பட மணமகளுக்குரிய பொருட்களை தாய்மாமனுக்குரிய பட்டு வேட்டி துண்டு முதலியவற்றை ஒரு வண்ணப்பெட்டி (நார்ப்பெட்டி) யில் எடுத்து வைத்துக் கொண்டு நாதஸ்வரம் மேளத்துடன் குலதெய்வம் ஊர் அம்மன் சாமி கோயில்களுக்குச் சென்று மாலை சாற்றி தூப தீகமிட்டு வழிபட்டு வருகின்றனர். அவ்விதம் வழிபாடு முடிந்தவுடன் தாய்மாமன் உறவினர்கள் நண்பர்களுக்கு “முகூர்த்தச் சோறு“ வழங்குகின்றனர். விடியற்காலையில் தாய்மாமன் சடங்கு மணமகன் வீட்டில் நிகழ்த்தப் பெறுகிறது. அந்நேரம் முகூர்த்தக்கால் நடுகின்றனர். தாய்மாமனுக்கு மாலையிட்டு அமரவைக்கின்றனர். இது மாமன் “குறுங்கட்டில் ஏறுதல்” என்று அழைக்கப் பெறுகிறது. முற்காலத்தில் அரசபரம்பரையினரின் இல்லத்தில் “அரசு கட்டில்“ இருந்தது. அரச குலத்தவர்கள் அவற்றின் மீது அமர்வர் தகுதிபடைத்தவர்கள் அமர்வதங்குத் தகுதியானது “கட்டில்“ என்றழைக்கப்பெற்றது. இக்காலத்தில் பிளாஸ்டிக் இருக்கையில் அமரவைக்கின்றனர். தாய்மாமனுக்குரிய சீர்களை அவனுடைய சகோதரி நார்பெட்டியில் வைத்து வழங்குகிறாள். முற்காலத்தில் தாய்மாமனுக்கு தங்கநகைகள் பட்டுகள் பல்லாக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் தங்களுடைய வசதிக்கேற்ப வேட்டி சட்டை துண்டு வழங்கப்படுகிறது. மணமகன் தாய்மாமன் காலில் விழுந்து வணங்குகிறார். தன்னுடைய கழுத்தில் போடப்பட்ட முகூர்த்த மாலையை மருமகன் கழுத்தில் பொடுகிறார். முற்காலத்தில் தன்னுடைய பெருமையை சபைக்கு எடுத்துக்காட்டும் விதத்தில் தங்கநகைகள் நிலங்கள் நாடுகள் முதலியவற்றை வழங்கியுள்ளதை நாட்டுபுறக் கதைப்பாடல்கள் கூறுகின்றன. முற்காலத்தில் நீண்ட வாள் அல்லது குறுவாளை மணமகன் கையில் கொடுத்துளடளனர். (மருமகன் இனி நாட்டை ஆள்வதற்கான தகுதி படைத்து விட்டார் என்பதங்கான குறியீடாகும்) இக்காலத்தில் மணமகன் கையில் வாளானது பாக்குவெட்டியாக மாறி தற்போது இரும்பு ஆணி அல்லது இரும்பினாலான சாவியாக மாற்றம் பெற்றுள்ளது. திருமணம் முடியும் வரை கழுத்தில் மாமனிட்ட மாலையும் கையில் வாளும் (இக்காலத்தில் இரும்புப் பொருட்கள்) மணமகனின் கையிலிருக்க வேண்டியதாகும். மைத்துனரின் வரவேற்பு மணமகள் வீட்டிற்கு உறவினர்களுடன் மேளதாளத்துடன் மணமகளுக்குரிய பட்டு தாலியுடன் புறப்பட்டுச் செல்கின்றனர். மணமகள் வீட்டின் வாசலுக்கு வந்தவுடன் பெண்ணின் தந்தை அல்லது அக்குடும்பத்தில் வயதில் மூத்தவர் மணமகனுக்கு எதிர்மாலை அணிவித்து வரவேற்கிறார். ஆரத்தி எடுக்கப் பெறுகிறது. மணமகளின் சகோதரன் மணமகனின் கையைப் பற்றி அழைத்துச் செல்கின்றான். மணமகன் அறையில் காத்திருக்கிறார் மணமகன். மணமகள் மாமன் சடங்கு மணப்பந்தலில் மாப்பிள்ளை வீட்டாரும் மணமகள் வீட்டாரும் அமர்ந்திருக்கும் நேரத்தில் மாமன் சடங்கு நிகழ்த்தப் பெறுகிறது. தாய்மாமன் மாமன் குறுங்கட்டிலில் அமர்கிறார். அவருக்கு மாலையிட்டு வண்ணப்பெட்டியுடன் பெண்ணை அழைத்து வருகின்றனர். தாய்மாமன் தன் மருமகளுக்கு வழங்க வேண்டிய சீர்களை தங்கநகைகளாக பணமாக நிலமாக வழங்குகிறார். பெண் தாய்மாமனின் காலில் விழுந்து வணங்கிய பின்னர் அலங்கார அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். மணமகனின் சகோதரி தாங்கள் கொண்டு வந்த பட்டுச்சேலை சட்டை மற்றும் அலங்காரப் பொருட்களுடன் மணமகளின் அறைக்குச் சென்று மணமகளை மணவறைக்கு வரும் விதத்தில் பட்டுடுத்தி அணிகலன்களை அணியச் செய்து ஆயத்தப்படுத்துகின்றனர். திருநாண் பூட்டுதல் மணமகன் மணமேடைக்கு மைத்துனரால் அழைத்துவரப்படுகிறார். கிழக்குத்திசை நோக்கி அமர்கிறார். மணமகளை மணமகனின் சகோதரிகளும் உறவினர்களும் அழைத்து வந்து மணமகனின் வலப்புறம் அமரச் செய்கின்றனர். தற்காலத்தில் குடும்பத்தில் உள்ள பெரியவர் அல்லது ஐயர் திருமணத்தை நடத்துகின்றார். (குடிமகன்தான் முற்காலத்தில் திருமணங்களை நடத்தியுள்ளார்) மணமகனின் சகோதரி ”பொன் பூட்டும்” உரிமை பெற்றவளாக விளங்குகிறாள். பொன் பூட்டும் சொல்லானது பொய்மூட்டி என்று மாற்றம் பெற்றது. மணமகன் குடும்பத்தில் மூத்தவர் வெற்றிலைத் தட்டில் தாலிச்சரட்டை வைத்து அரங்கத்தில் அமர்ந்துள்ளவர்களிடம் கொண்ட செல்கின்றனர். அனைவரும் தட்டை தொட்டு வணங்கி வாழ்த்துகின்றனர். மணமகன் தாலியைப் பெற்று மணமகளுக்கு கட்டி விடுகிறார். பொன்பூட்டும் உரிமை மணமகனின் உடன் பிறந்த சகோதரி அல்லது உறவு முறை சகோதரி உண்டு. பொன்பூட்ட வருகை தர தன்னுடைய சகோதரி நாடு நகரம் தங்கநகைகள் வயல்கள் தேர்களையெல்லாம் கொடுத்ததாக பல்வேறு நாடார் வரலாற்றுப் பாடல்கள் கூறுகின்றன. மணமகளுடன் உடன்பிறந்தவர்கள் தாம்பளத்தில் மஞ்சள்நீர் பன்னீர் சந்தனம் வெற்றிலைத்தட்டுடன் முன்வந்து பொன்னகைகள் என வசதிக்கேற்ப வைப்பார்கள். அனந்தரம் செய்தல் தாலிக் கட்டியவுடன் மணமகனின் பங்காளிகள் (சொக்காரர்கள்) செய்யும் சடங்கு ”அனந்தரம்” ஆகும். அரச இலையினால் மணமகள் மணமகன் இருவருக்கும் தலையைச் சுற்றி வலம் இடமாக சுற்றிப் போடுவது ஆகும். மணமகனின் உறவினர்களை காட்டும் விதத்தில் இந்நிகழ்வு அமைகிறது. மணமக்களுக்குப் பால் பழம் கொடுக்கப்படுகிறது. உறவினர்கள் உணவருந்தி மகிழ்கின்றனர். மதியம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருந்துள்ளது. அவ்வெண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு முன் மணமகனின் சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் பெண் வீட்டார் எண்ணெய் காசு போடும் வழக்கம் இருந்தது. தங்கமோதிரம் உட்பட ஏராளமான பணம் கொடுப்பது வழக்கம் இருந்தது. தற்காலத்தில் இவ்வழக்கம் குறைந்து விட்டது. மணமக்கள் மணமகன் வீட்டிற்கு நல்லநேரம் சகுனம் பார்த்துச் செல்கின்றனர். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சம்பந்தம் கலத்தல் மணமகளின் வீட்டார் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு மணமகனின் தாயாருக்கு மரியாதைகளைச் செய்வர். பணம் மற்றும் நகைகளும் வழங்குவர் இரவு உணவை மணமகள் தயாரித்துக் கொடுப்பார். விருந்துண்டு திரும்புவர். இத்தகைய பழக்க வழக்கங்கங்கள் தென் தமிழகத்தில் தட்சிண மாற நாடார்களின் குடும்பத்தில் காணப்பெறுகின்றன.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...