பாண்டியன் நெடுமாறனின் இளையான்புத்தூர்ச் செப்பேடு = [மறக்கேடு பற்றியது] நன்றி ஆவணம்- இதழ்-18 ஆண்டு 2007
By
Dr Thavasimuthu maran
COPPER PLATES
நன்றி
ஆவணம்- இதழ்-18 ஆண்டு 2007
தமிழகத்தொல்லியல் கழகம் தஞ்சாவூர்
1.பாண்டியன் நெடுமாறனின் இளையான்புத்தூர்ச் செப்பேடு
எ.சுப்பராயலு , புதுச்சேரி
வெ.வேதாசலம் , மதுரை
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முற்காலப் பாண்டிய மன்னனான மாறவர்மன் அரிகேசரி , சேந்தன்மாறன் அரிகேசரி , பராங்குசன் என்று பலவாறு அழைக்கப்பட்ட முற்காலப் பாண்டிய மன்னனின் செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது . இச்செப்பேட்டில் குறிப்பிடப்படும் பாண்டியன் ' நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் ' என்று சுந்தரரால் அறுபத்துமூன்று அடியாருள் ஒருவராகப் போற்றப்பட்ட அரசன் ஆவான் . திருஞான
சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்ட கூன்பாண்டியன் என்று சைவபுராணங்கள் கூறும் மன்னன் இவன் ஆவான் . இம்மன்னனைப் பற்றிய பல புதிய செய்திகளை இச்செப்பேடு தருகிறது . முற்காலப்பாண்டிய மன்னர்கள் நால்வரால் வெளியிட்டப்பட்ட ஆறுசெப்பேடுகள் இதுவரை கிடைத்துள்ளன . இவற்றில் பழமையான எட்டாம் நூற்றாண்டு வேள்விக்குடிச் செப்பேட்டிற்கும் இது முந்தியது . இந்நிலையில் இனிமேல் முற்காலப்பாண்டிய மன்னர்களின் காலத்தால் பழமையான முதற்செப்பேடு என்று இதனைக் கூறலாம் . இது முற்காலப்பாண்டிய நாட்டு வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது . இச்செப்பேட்டை வெளியிட்ட நெடுமாறனின் கல்வெட்டுகள் மதுரையில் வைகையாற்றங்கரையிலும் , ஏனாதியிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
இச்செப்பேட்டைத் திருச்செங்கோடு நாணயவியல் ஆர்வலர் எம்.விஜயகுமார் மதுரையில் களஆய்வின்போது கண்டறிந்தார் . இதனை ஈரோடு புலவர் செ.இராசு , முனைவர் இரா.பூங்குன்றன் ஆகியோர் ஆய்வுசெய்து செய்தித்தாளில் இது குறித்த செய்தியை வெளியிட்டனர் . [1]
அமைப்பு
செம்பாலான மூன்று ஏடுகளாக நான்கு பக்கங்களில் இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது . ஓர் ஏட்டில் மட்டும் இருபுறமும் எழுதப்பட்டுள்ளது . ஒவ்வொரு ஏடும் ஓலைச்சுவடி போன்று 24 செ.மீ. நீளமும் 11.5 செ.மீ. அகலமும் கொண்ட செவ்வக வடிவில் அமைந்துள்ளது . இதன் மொத்த எடை 2.724 கிலோவாகும் . ஒவ்வொரு ஏட்டிலும் இடதுபுறத்தின் நடுவே வட்டவடிவில் துளையிடப்பட்டுள்ளது . இது ஏடுகளை ஒன்றாகச் சேர்த்துச் இணைப்பதற்குரிய வளையம் கோர்ப்பதற்கு இடப்பட்ட துளையாகும் . இவ்வேடுகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுப் பாண்டியர் முத்திரையால் இணைப்பட்டிருக்க வேண்டும் . முத்திரையுடன் கூடிய அவ்வளையம் தற்போது கிடைக்கவில்லை . ஏடுகள் மட்டுமே இச்செப்பேட்டில் தொடக்கத்தில் வடமொழிப் பகுதி இருந்ததா அதற்குரிய கிடைத்துள்ளன , ஏடுகள் இருந்தனவா என்பதை அறியமுடியவில்லை .
எழுத்தமைதியும் காலமும்
இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன . செப்பேட்டு வாசகம் தூயதமிழ் நடையில் அழகிய செய்யுள் வடிவில் அமைந்துள்ளது . தொடக்கத்திலும் இறுதியிலும் வடமொழிச் சுலோகங்கள் கிரந்த எழுத்துக் களில் பொறிக்கப்பட்டுள்ளன . தமிழ்ப்பகுதி முழுவதும் வட்டெழுத்தில் அமைந்துள்ளது . இடையிடையே வரும் வடசொற்கள் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன . கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட பாண்டியர் செப்பேடுகளைப் போன்று மெய்யெழுத்துக்களும் எகரம் ஒகரம் ஏறிய உயிர்மெய் குறிலெழுத்துக்களும் புள்ளியிட்டுக் காட்டப் பெறவில்லை . இச்செப்பேட்டின் எழுத்தமைதி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது . இது முதலில் ஓலையில் எழுதப்பட்ட ஆவணமாக இருந்து பின்னர் செப்பேட்டில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர் . பல்லவ மன்னன் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த சிம்மவர்மன் காலத்துப் பள்ளன்கோயில் செப்பேடும் அவனது காலத்திற்குப் பின்னர் நூறாண்டுகள் கழித்து எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது . ஏதோ ஒரு காரணத்தினால் மன்னன் ஆட்சிபுரிந்த காலத்தில் எழுதாமல் பிற்காலத்தில் செப்பேடுகள் எழுதப்பட்டிருக்கின்றன . முன்பு கூறியதுபோல் நெடுமாறன் வெளியிட்ட செப்பேட்டு ஆவணமும் ஓலையில் எழுதப்பட்ட நிலையில் , செப்பேடுகளில் வெகுகாலம் பொறிக்கப்படாமல் , பின்பு தேவை கருதிச் செப்பேட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம் . இது தவிர்த்து மன்னன் வெளியிட்ட செப்பேடுகள் தொலைந்துபோன நிலையிலோ அல்லது அபகரிக்கப்பட்ட நிலையிலோ தேவை கருதி மீண்டும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுவதற்கு வாய்ப்புள்ளது . பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரம் செப்பேட்டில் கூறப்பட்டிருப்பது போன்று மறக்கேட்டால் ( தானம் வழங்கப்பட்ட நிலத்தின் பழைய உடமையாளர் உரிமையைக் பெறுவதற்கு நடத்திய கிளர்ச்சியில் செப்பேட்டு ஆவணத்தை இழந்த பிராமணர்கள் பிற்காலத்தில் மீண்டும் அதன் உரிமையை நிலைநாட்ட எழுதியிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது . இச்செப்பேடு ஆவணத்தினை எழுதிய தச்சனின் பெயர் குறிப்பிடப்படுவதால் பாண்டியன் நெடுமாறன் காலத்திலேயே இது எழுதப்பட்டு பின்பு தொலைந்து போன நிலையில் மீண்டும் செப்பேட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனலாம் .
இச்செப்பேடு நெடுமாறன் ஆட்சிபுரிந்து நூறாண்டுகள் கழித்து எழுதப்பட்டாலும் இதன் செய்தியைக் கொண்டு இதனை ஏழாம் நூற்றாண்டு நெடுமாறனுக்குரிய ஆணையைக் கொண்ட செப்பேடாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது . நெடுமாறனின் முப்பத்தாறாவது ஆட்சியாண்டில் இச்செப்பேடு வெளியிடப்பட்டிருக்கிறது . திருஞானசம்பந்தரின் காலத்தவனாக மதுரையில் ஏழாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இம்மன்னனின் தொடக்க ஆட்சியாண்டைப் பற்றி வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன . தி.நா.சுப்பிரமணியன் மாறவர்மன் அரிகேசரியான நெடுமாறன் கி.பி. 640 ல் ஆட்சியைத் தொடங்கினான் என்று கூறுகின்றார் [ 2]. இதனை ஏற்றுக்கொண்டால் இச்செப்பேடு கி.பி. 676 ல் வெளியிடப் பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம் . பாண்டியன் நெடுமாறனின் ஐம்பதாம் ஆட்சியாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று மதுரையில் வைகைக்கரையில் கிடைத்துள்ளது . இங்கு குறிப்பிடத்தக்கது[3] . ' இச்செப்பேட்டுத் தானம் , உத்திரமயன காலத்தில் ( உத்திராயணம் ) வழங்கப்பட்டிருக்கிறது . உத்திராயணத்தில் தானம் வழங்கப்பட்டதாக வரும் காலக்குறிப்பு முற்காலப் பாண்டியர் வெளியிட்ட வேறு செப்பேடுகளில் இல்லை .
செய்தியமைப்பு
செப்பேட்டின் முதலிரண்டு வரிகள் சிவபெருமானையும் அரசனையும் வடமொழியில் புகழ்ந்து கூறுவதாக உள்ளது . அதனையடுத்து வரும் தமிழ்ப் பகுதியில் பாண்டியரின் குலப்பெருமையும் புராணப் பெருமைகளும் ( வரி . 3 20 ) எடுத்துக் கூறப்பட்டுள்ளன . அதன்பிறகு ஐயந்தவர்மன் ( செழியன்சேந்தன் ) சிறப்புகள் ( வரி 20-24 ) , அவன் மகன் செப்பேடு வெளியிட்ட பராங்குசன் ( மாறவர்மன் அரிகேசரி ) பெருமைகள் , செயல்கள் , அவனது ஆட்சியாண்டு ஆகியவை காணப்படுகின்றன ( வரி . 25-36 ) இதனைத் தொடர்ந்து பிரமதேயம் பெற்ற பிராமணனின் பெருமைகள் ( வரி . 36-45 ) தானம் அளித்த ஊர் எவ்வாறு அளிக்கப்பட்டது . அதன் நான்கெல்லைகள் , சாசனத்தைப் போற்றும்படியாகச் சொல்லப்பட்ட ஒம்படைக்கிளவி , செப்பேட்டு ஆணையை நிறைவேற்ற அரசனால் பணிக்கப்பட்ட அதிகாரியின் பெயரும் , விரிவாகச் சொல்லப்படுகின்றன . ( வரி.45-59 ) இதனையடுத்துப் பிராமணர்குடியைக் காப்பதற்கு அரசன் அளித்த பிரமதேயம் குறித்த பூமிதானம் பற்றி வடமொழியில் கூறப்பட்டுள்ளது ( வரி . 60-64 ) இறுதிவரிகள் ( வரி 64-65 ) இச்செப்பேட்டை எழுதிய அரசதச்சனின் பெயரை எடுத்துக் கூறுகிறது . இச்செப்பேட்டில் ஐயந்தவர்மன் ( செழியன்சேந்தன் ) அவன் மகன் பராங்குசன் ( அரிகேசரி ) என்ற இருவரின் வரலாறு மட்டும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது .
தொடக்கம்
செப்பேட்டின் தொடக்கத்தில் இரண்டு வரிகளிலுள்ள வடமொழி சுலோகம் ( அநுஸ்டுப்விருத்தம் ) சிவபெருமானையும் அரசனையும் ஒருசேரப் புகழ்ந்து கூறுகிறது . எந்தக் கடவுளின் அருளால் அரசர்களுக்குப் பேரறிவும் வீடுபேறும் கிடைக்கின்றதோ அந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளியானவன் ( சிவன் ) தங்களுடைய ( அந்த அரசனுடைய ) நாட்டின் செழிப்பிற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கட்டும் என்று கூறுகின்றது .
பாண்டியரின் பெருமையும் வழிமுறையும்
பாண்டியரின் பொதுச்சிறப்பும் தனிச்சிறப்பும் செப்பேட்டில் பின்வருமாறு எடுத்துக்கூறப்பட்டுள்ளன .
1. கருங்கடல் நீரானது தனது அடியைவருட வேல் ஏந்தி நின்றவனின் வழிவந்தவர்கள் பாண்டியர்கள் ( பிரளையகாலத்தில் ஏற்பட்ட கடல்கோளால் பாண்டியநாடு அழியாமல் வேல் எறிந்து தடுத்து நிறுத்திய வடிவலம்பநின்ற பாண்டியனைக் குறிக்கிறது )
அமிர்தம் கடைந்து தேவர்களுக்கு அதனைக்
2 . பாற்கடலில் கொடுத்தவர்கள்
3 . இந்திரனை வெற்றிகண்டு அவனது ஆசனத்தில் அவனுக்கு நிகராக அமர்ந்தவர்கள்
4 . இந்திரனின் மணிமுடிமீது தங்களது வீரத்தால் வளை ஆயுதத்தை அடித்து உடைத்தவர்கள்.
5. பகைவர்கள் ஒடுங்கும்படி தேவர்க்கும் அசுரருக்கும் நடைபெற்ற போரில் பங்குகொண்டு வெற்றிபெற்றவர்கள்.
6 . அரிஜனனை வென்று சூழ்ந்தவர்களின் துயர் நீக்கியவர்கள் 7. மகாபாரதப்போரில் பங்கு கொண்டு வெற்றியுடன் திரும்பியவர்கள் 8. பூதங்களின் துணைகொண்டு பல குளங்கள் ( பாசனக் குளங்கள் ) உருவாக கரைகளை அமைத்தவர்கள் ( பூதங்களின் துணைகொண்டு பல நீர்பாசனக் குளங்களைப் பாண்டியர்கள் தோற்றுவித்தனர் என்று செப்பேடுகள் கூறுகின்றன . தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பல திருத்தியும் ' என்று சின்னமனூர் பெரியசெப்பேடு கூறுகிறது )
9 . இமயமலையில் தங்களது குலச் சின்னமான இணைக்கயலைப் பொறித்தவர்கள்
10. அனைவருக்கும் இவ்வுலகம் பொது என்பதை நீக்கித் தனக்குரியதாக ஆக்கி அனுபவித்தவர்கள்
ஐயந்தவர்மன்
மேற்கண்ட சிறப்புக்களையுடைய பாண்டியர்களின் வழிவந்தவனே ஐயந்தவர்மன் . அவன் மாபலிச் சக்கரவர்த்தியின் ஏழுலகையும் மூவடியால் அளந்த முகில்வண்ணன் ( திருமால் ) போன்றவன் . கலியுகத்தில் தர்மத்திற்கு வந்த தளர்ச்சியை அகற்றி கருமத்தியே கருதி நின்றவன் பராங்குசன் என்று சேந்தன்செழியன் பற்றி இச்செப்பேடு கூறுகிறது .
பராங்குசன்
ஐயந்தவர்மனின் மகனாகத் தோன்றியவனே பராங்குசன் ( மாறவர்மன் அரிகேசரி ) என்று கூறி அவனது சிறப்பைப் பின்வருமாறு செப்பேடு எடுத்துக் கூறுகிறது . இவன் பாண்டிய வம்சம் செழிக்க அவதரித்தவன் . உலகம் முழுமையும் ஒரு வெண்குடைக்கீழ் பலர்புகழும்படி செங்கோல் செலுத்திய பைந்தார் பராங்குசன் . அகிலத்திலுள்ள அரசர்களை வெற்றி கண்டு தர்மத்தைத் தலைநிறுத்தி கருமத்தையே நினைத்துச் செயல்பட்டவன் . சந்திரசேகரனாக விளங்கும் சிவபெருமானுக்கு மகிழ்ச்சியுடன் களக்குடி போன்ற இடங்களில் அரிகேசரி ஈஸ்வரம் என்று தன்பெயரால் கோயில்கள் பல செய்வித்தவன் . இரண்யகர்பம் , துலாபாரம் போன்ற தானங்களைச் செய்தவன் . மண்ணகம் மகிழும்படியாக ஆட்சிபுரிந்த ஒன்றை வெண்குடை இரட்டைச் சாமரை பெற்ற கொற்றவன் , பொற்றேர் மாறன் என்று பெயர் கொண்டவன் ன்று செப்பேடு வெளியிட்ட அரிகேசரியின் புகழ் எடுத்துக்
கூறப்படுகிறது .
பொற்றேர் மாறன் என்று இம்மன்னன் பெயர் பெற்றது போல இவனது பேரனான முதலாம் இராசசிம்மன் மான்தேர்மாறன் என்று வேள்விக்குடி.
செப்பேட்டில் அழைக்கப்பட்டிருக்கின்றான் . மாறவர்மன் அரிகேசரி செய்த இரண்யகர்ப்பம் , துலாபாரம் , போன்ற தானங்கள் அவனது வைகைக்கரை , ஏனாதிக் கல்வெட்டுகளிலும் கூறப்பட்டுள்ளன . அவற்றில் இல்லாத புதிய செய்தி ஒன்று இச்செப்பேட்டில் காணப்படுகிறது . சைவ சமயத்தினைச் சார்ந்து சிவபெருமானிடத்துக் கொண்ட பக்தியினை வெளிப்படுத்தும் வகையில் அரிகேசரி தன்பெயரில் களக்குடி முதலான ஊர்களில் மகிழ்ந்து சிவன்கோயில்கள் எடுத்ததாக இச்செப்பேடு கூறுகிறது . இச்செப்பேட்டில் சிவபெருமானைக் குறிப்பிடும்போது பாண்டியரின் குலமுதல்வனான சந்திரனைத் தலையில் சூடிவிளங்கும் ' சந்திரசேகரர் ' என்று குறிப்பிடப்படுகிறது . சந்திரசேகரர்க்காகவே ' அரிகேசரி ஈஸ்வரம் ' என்ற பெயரில் களக்குடி முதலான இடங்களில் கோயில்களைப் பராங்குசள் எடுத்துள்ளான் என்று கூறுகிறது .
செப்பேட்டில் குறிப்பிடப்படும் களக்குடி முற்காலப் பாண்டியர் காலத்தில் சிறப்புடன் விளங்கிய உக்கிரன்கோட்டைப் பகுதியில் உள்ளது . திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இவ்வூரில் இன்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் முற்காலப் பாண்டியர் சிற்பங்களும் உள்ள பழமையான சிவன்கோயில் உள்ளது . இவ்வூரிலிருந்து வந்தவர்களே மாறன்காரி , மாறன்எயினன் , சாத்தன் கணபதி போன்ற பராந்தக நெடுஞ்சடையனின் ( கி.பி.765-815 ) அதிகாரிகள் ஆவர்[4] . ' இதனால் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே களக்குடி சமயம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக விளங்கியிருக்கிறது என்பதை அறிலாம் .
பாண்டிய நாட்டில் அரிகேசவநல்லூர் ( திருநெல்வேலி மாவட்டம் ) , கமுதி ( இராமநாதபுரம் மாவட்டம் ) , திருச்சுழி ( விருதுநகர் மாவட்டம் ) முதலிய இடங்களில் ' அரிகேசரிஈஸ்வரம் ' என்ற பெயரில் சிவன்கோயில்கள் இருந்திருப்பதை முற்காலப் பாண்டியர் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன[5] . ' இவ்வூர்களில் அமைந்த சிவன்கோயில்கள் மாறவர்மன் அரிகேசரியால் எடுக்கப்பட்ட கோயில்களாக இருக்கலாம் . நெடுமாறனின் செப்பேடு சைவசமயவளர்ச்சிக்கு நெடுமாறன் செய்த தொண்டினை நன்கு எடுத்துக் காட்டுகிறது . இச்செப்பேட்டின் முதல் சொல்லே சிவபெருமானைக் குறிப்பிடும் பெயராக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது [6]. " சமணத்திலிருந்து சைவத்திற்குச் சம்பந்தரால் மாறியதாகக் கூறப்படும் நெடுமாறன் பாண்டியநாட்டின் பல பகுதிகளில் சிவன்கோயில் எடுத்து சைவத்திற்குச் சிறந்த தொண்டாற்றியதன் காரணமாகவே இவன் 63 அடியாருள் ஒருவனாகக் கருதப்பட்டு சுந்தரரால் போற்றப்பட்டான் என்று கூறலாம் .
தானத்தைப் பெற்றவர்
நெடுமாறனின் சிறப்புக்களை அடுத்து பிரமதேயம் பெற்ற பிராமணரின் ஊரும் சிறப்பும் செப்பேட்டில்எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன . இப்பிராமணன் கங்கை நதியோடு ஒத்த சிறப்புபெற்ற காவிரிக்கரையில் இருந்த தெங்கு , கமுகு , வாழை , தேமா , பலா , இலைக்கொடி நிறைந்த வளமிக்க அருமறையோர்கள் வாழக்கூடிய இடமாக விளங்கிய பெருமருதூர் என்ற ஊரில் பிறந்தவன் . நான்மறை , முத்தீ , அம்புரி , ஆறுஅங்கங்கள்
ஆகியவ்ற்றில் வழுவாத பதினெட்டுத் தருமங்கள் , சர்வசாஸ்திரங்கள் , யோகம் , புராணங்கள் , வேதாந்தம் , சித்தாந்தம் , ஆகியவற்றில் வல்லவனாய் விளங்கியவன் . பாரத்துவாஜ கோத்திரத்தினைச் சார்ந்த நாராயணபட்ட சோமயாஜி என்று பெயர் பெற்றவன் ஆவான் எனச் வினியோகம் செப்பேடு தெரிவிக்கிறது .
தானம் பெற்ற ஊர்
இத்தகு சிறப்புவாய்ந்த சோழநாட்டுப் பிராமணன் நாராயணபட்ட . சோமயாஜியார்க்கே பாண்டிய நாட்டில் ஆசிநாடு என்ற சிறுநாட்டுப் பிரிவில் இருந்த ஊர் ஒன்றைப் பிரமதேயமாக நெடுமாறன் வழங்கினான் . நெடுமாறனின் காலத்தில் ஆசிநாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த கம்பலை என்னும் மறக்குடித்தலைவனை வென்று அவனுக்குரிய நிலத்தை ( காணியை ) உரிமையுடையதாக மாற்றினான் நெடுமாறன் . இது சிறிது காலம் கோபற்றாய்க் காடாக விளைவற்று கிடந்தது . அதனையே நெடுமாறன் நாராயண பட்டனுக்கு ' இளையான்புத்தூர் ' என்று பெயரிட்டு காராண்மை மீயாட்சி உரிமைகளோடு பிரமதேயமாக அளித்தான் என்று செப்பேடு தெரிவிக்கிறது .
பிரமதேயத்தின் எல்லைகள்
தானமாகக் கொடுக்கப்பட்ட இளையான்புத்தூரைச் சுற்றியமைந்த நாற்பால் எல்லைகள் பின்வருமாறு செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளன . கீழெல்லை ஒழுகுக்கல் , பெரும்பாறை , நெடுங்களர் ஆகியவற்றிற்கு மேற்கு தென்னெல்லை : கூட்டக்கல் , உமிப்பாறைப் பொற்றை முரம்புக்கு வடக்கு மேல்லெல்லை : ஆனசாய்ஞ்சான்வாட்டு , நிலப்பாறை , நெடுங்களர் , திரளைக்கல் ஆகியவற்றிற்கு மேற்கு வடவெல்லை : மணிக்கற்களூர் , சிறியாள்எறிச்சில் , எயிற்பொற்றை ஆகியவற்றிற்குத் தெற்கு .
இச்செப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிநாடு இன்று கோயில்பட்டி , சங்கரன்கோயில் வட்டங்களிலுள்ள ஊர்களின் பகுதியாகும் . கோயில்பட்டியிலிருந்தும் கழுகுமலையிலிருந்தும் கயத்தாறு செல்லும் வழிகளின் இருபுறங்களிலும் இந்நாடு அமைந்திருந்தது . செப்பேட்டில் குறிப்பிடப்படும் ' இளையான்புத்தூர் ' இப்பகுதிகளில் அமைந்த ஊர்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும் . தளவாய்புரம் செப்பேட்டில் தானமாக வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் பிரமதேய ஊர்களான சோமாசிக் குறிச்சியும் திருமங்கலமும் ஆசிநாட்டில் அமைந்த ஊர்களாகும் . இவ்வூர்கள் இரண்டும் இணைந்து இன்று ' திருமங்கலக்குறிச்சி ' என்ற பெயரில் கழுகுமலையிலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் கழுகுமலையிலிருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது[7] . இப்பிரமதேய ஊரின் நான்கெல்லைகள் தளவாய்புரம் செப்பேட்டில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன . இவற்றில் தென்னெல்லையில் அமைந்த
திருநிலப்பாறையும் நெடுமணிகற்றாழ்வும் மேல்எல்லையில் அமைந்த எறிச்சிலும் நெடுமாறன் செப்பேட்டிலும் குறிப்பிடப்படுகின்றன . தளவாய்புரம் செப்பேட்டில் குறிப்பிடப்படும் திருநிலப்பாறை , நெடுமணிகற்றாழ்வு , எறிச்சில் என்பவையே நெடுமாறன் செப்பேட்டில் முறையே நிலப்பாறை , நெடுங்களர் , சிறியாளெறிச்சில் என்று குறிப்பிடப்படுகின்றன . எனவே ' இளையான்புத்தூர் ' என்ற பெயரில் நெடுமாறன் வழங்கிய பிரமதேய ஊர் இன்றைய திருமங்கலக்குறிச்சிப் பகுதியிலேயே அமைந்திருந்தது எனலாம் . அப்பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது அப்பெயரில் அமைந்த ஊர் எதுவும் புலப்படவில்லை . இப்பெயரில் அமைந்த ஊர் காலப்போக்கில் வேறு பெயரில் மாறியிருக்கலாம் . எதிர்கால ஆய்வுகள் தான் இதற்கு விடை காண வேண்டும் .
கம்பலை என்னும் மறவனை வெற்றி கண்டது
செப்பேடு குறிப்பிடுவது போல் இன்றும் இப்பகுதி மறவர்சமூகம் நிறைந்த பகுதியாக ( ஆசிநாட்டுப்பகுதி ) விளங்கி வருகிறது ஊற்றுக்குழி , சாயாமலை போன்ற மறவர்பாளைய ஊர்கள் திருமங்கலக்குறிச்சிக்கு மேற்கே உள்ளன . களப்பிரர் காலத்திற்குப் பின்னர் இப்பகுதி மறக்குடித் தலைவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.நெடுமாறனுக்கு முன்பு ஆட்சிசெய்த கடுங்கோனும் கழுதுரில் உயிர்துறந்த பாண்டியன் ஒருவனும் ஆசிநாடான இப்பகுதியில் பிரமதேயங்களை வழங்கியிருக்கின்றனர்[8] . * இவர்களைத் தொடர்ந்து நெடுமாறனும் இப்பகுதியில் பிரமதேயம் வழங்கியுள்ளான் . மறக்குடி மக்களின் நிலங்களை அரசனின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள ஊர்களாக மாற்றிப் பிராமணர்க்கு வழங்கியபோது அதற்கு மறக்குடி தலைவர்களிடமிருந்து எதிர்ப்புத் தோன்றியது . அதனை முறியடித்தே இப்பகுதியில் பிரமதேயத்தை நெடுமாறன் ஏற்படுத்தியுள்ளான் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கம்பலை என்னும் மறவனை வென்று பிரமதேயம் வழங்கியுள்ளான் . இப்பகுதியில் பிரமதேயங்களை அரசன் ஏற்படுத்தியபோது மறக்குடிமக்கள் பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து பிரமதேயங்களுக்குரிய அரச ஆவணங்களை அழித்ததைத் தளவாய்புரம் செப்பேடு மூலம் உணரமுடி கிறது . ' இவ்வூரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில் இழந்துபோயின ' என்று இதனைத் தளவாய்புரம் செப்பேடு தெரிவிக்கிறது . இங்கு மறக்கேடு என்று குறிப்பிடப்படுவது மறவர்கள் பிராமணர்க்கு எதிராக செய்த கிளர்ச்சி என்று கொள்ள வேண்டியுள்ளது . இதுபோன்ற கிளர்ச்சியே கம்பலை என்னும் மறக்குடித் தலைவன் தலைமையில் நெடுமாறன் காலத்தில் இப்பகுதியில் தோன்றியிருக்க வேண்டும் . அதனை ஒடுக்கி நெடுமாறன் ' இளையான்புத்தூர் ' என்ற பெயரில் இன்றைய திருமங்கலக்குறிச்சிக்கு அருகில் பிரமதேயம் ஏற்படுத்தி செப்பேடு வழங்கியுள்ளான் . இச்செய்தி இச்செப்பேட்டின் இறுதியில் காணும் வடமொழி வாசகத்திலும் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .
செப்பேட்டின் இறுதிப்பகுதி
செப்பேட்டின் இறுதிப்பகுதியில் முதலில் தானத்தைக் காத்தவர் மலரடி தன்முடிமேல் வைத்து போற்றப்படுவர் என்ற ஒம்படைக்கிளவி உள்ளது . அடுத்து அரசன் ஆணைப்படி இவ்வாவணத்தைத் தாம்பிரசாசனமாக்கி அதனை நிறைவேற்றி வைக்கும் ஆணத்தியாக அண்டநாட்டுக் குண்டூர் கூற்றத்துக் குண்டூரைச் சார்ந்த குமான்தாயன் வடதரன் குறிப்பிடப் படுகின்றான் . அண்டநாட்டுக் குண்டூர்க் கூற்றம் என்ற சிறுநாட்டுப்பிரிவு இன்று மதுரை மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் அமைந்து பகுதியாகும் . தோன்றியவர்கள் அவர்களது
பாண்டிய அரசன் அதிகாரிகளாக பிற்காலத்திலும்
செப்பேடுகளில் குறிப்பிடப்படுகின்றனர் . பராந்தக நெடுஞ்சடையனின் சின்னமனூர்ச் சிறியசெப்பேட்டின் ஆணத்தியாக விளங்கியவன் அண்டநாட்டுக் குண்டூர்க்கூற்றத்துக் குண்டூரைச் சார்ந்த தாயன்சிங்கன் ஆவான் . இவனுக்கும் நெடுமாறன் செப்பேட்டில் குறிப்பிடப்படும் குமான் தாயனுக்கும் ஏதோ ஒருவகையில் உறவு இருப்பதாகத் தோன்றுகிறது .
செப்பேட்டில் ஆணத்தியின் பெயரையடுத்து ஐந்துவரிகளில் அமைந்த வடமொழிச்சுலோகம் பின்வருமாறு கூறுகிறது . " பிரமதேயமாக நன்கு காப்பதற்காசுக் பூமிசாசனம் இதைப்போல் வேறொன்றில்லை . அரசன் தன் வில்லேந்தி வெற்றிகண்டு அளித்த பூமிசாசனம் இது . பிராமணர்களின் குலத்தைக் காப்பதற்காகக் காடாகி கிடந்த பூமி மாற்றியமைத்துக் கொடுக்கப்பட்டது . பல செல்வங்களை ( பிள்ளைகளை ) ஈன்றெடுத்த உத்திரதேச அரசன் சகரனால் ஆண்ட , பூமிக்கு எந்த அளவு வளமை இருக்குமோ அந்த அளவு பலன்கொண்ட பூமிதான்
செப்பேட்டை எழுதியவன்
செப்பேட்டின் இறுதிப்பகுதி செப்பேட்டை உருவாக்கி அதில் அரசனது ஆவணத்தைப் பொறித்தவனின் கையெழுத்தோடு முடிவடைகிறது . இதனை உருவாக்கியன் பாண்டிப் பெரும்பணைக்காரன் மகன் அரிகேசரி ஆவான் . அரசனது பெயரைப் பெற்ற இவன் பாண்டிய அரசர்க்குரிய பெருந்தச்சனாக விளங்கியவன் ஆவான் . பெரும்பணைக்காரன் என்றால் பெருந்தச்சன் என்று பொருளாகும்[9] . ' எட்டாம் நூற்றாண்டு பராந்தக நெடுஞ்சடையனின் ஸ்ரீவரமங்கலம் செப்பேட்டையும் சின்னமனூர்ச் சிறியசெப்பேட்டையும் எழுதியவனும் பாண்டிப்பெரும்பணைக்காரன் அரிகேசரி என்று பெயர் பெற்றவன் ஆவான் . இவன் நெடுமாறன் செப்பேட்டில் குறிப்பிடப்படும் பெருந்தச்சனின் முன்னோன் பெயரைப் பெற்ற அவன் வழிவந்த தச்சனாக இருக்க வேண்டும் .
முடிவு
அண்மையில் கண்டறியப்பட்ட பாண்டியன் நெடுமாறனின் செப்பேடு முற்காலப்பாண்டியர் கால அரசியல் , சமூக , சமய வரலாற்றை அறிவதற்குப் பல்வகையிலும் உறுதுணைபுரிகிறது .
1 . இதுவரை கிடைத்த முற்காலப் பாண்டியர் செப்பேடுகளில் காலத்தால் பழமையான ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த முதற்செப்பேடு இதுவாகும்
2 . சைவ சமயவளர்ச்சிக்கும் பிராமணர்குடிக்கும் நெடுமாறன் மிகுந்த ஆதரவு அளித்துள்ளான் என்பதைக் காட்டுகிறது
3. பிரமதேயமாக மன்னன் பிராமணர்க்கு ஊரைத் தானமாக அளிக்கும்போது மண்ணின் மைந்தர்களான மறக்குடியினரிடையே
எதிர்ப்பு தோன்றியது . அது மன்னனால் முறியடிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது .
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!
திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment