- பாண்டியர் வரலாறு -


கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்

வடிம்பலம்பநின்ற பாண்டியன் : இவன் நிலந்தரு திருவிற் பாண்டியனெனவும் பாண்டியன் மாகீர்த்தி யெனவும் வழங்கப் பெறுவன். தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெரியாருள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் இவ் வேந்தன் இருபத்துநாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தனனென்றும் இவனது பேரவையின் கண்ணேதான் தொல்காப்பியம் அரங்கேற்றப் பெற்றதென்றும் கூறியுள்ளார்.1 ஆசிரியர் கூறியுள்ள ஆண்டின் தொகை புனைந்துரையாயிருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆயினும் இவன் முடிசூடி நெடுங்காலம் ஆட்சி புரிந்தோனாதல் வேண்டுமென்பது சங்கத்துச் சான்றோர் இவனை 'நெடியோன்' என்று பல்லிடத்தும் குறித்துள்ளமையானே வெளியாகின்றது.

இவன், கடற்பிரளயத்தால் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த குமரிநாடு முதலியன அழிதற்கு முன்னர் அக் குமரி நாட்டில் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டுவித்துக் கடற்றெய்வத்திற்கு விழாவெடுத்தனன். இச் செய்தி புறநானூற்றிலுள்ள ஒன்பதாம் பாடலால் நன்கறியப்படுகின்றது. ஆகவே இவன் தலைச்சங்கத் தினிறுதியில் வாழந்தவனென்க.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி:- இவ் வேந்தன் வடிம்பலம்பநின்ற பாண்டியனது வழியில் தோன்றியவன். இவனது இயற்பெயர் குடுமி யென்பது. இவன் அரசர்க் குரிய பரிமேதம்
முதலிய வேள்விகள் செய்து சிறப்புற்றன னாதலின் இவனது இயற் பெயர்க்கு முன்னர்ப் 'பல்யாக சாலை' என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பாண்டியருடைய முன்னோர்களிலொருவன் ஆயிரம் வேள்விகளியற்றிப் புகழ்பெற்றன னென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இஃது இவ் வேந்தனையே குறிக் கின்றதுபோலும். இவனைக் 'கொல் யானை டலவோட்டிக் கூடா மன்னர் குழாந் தவிர்த்த - பலயாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசன்' என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பது ஈண்டு அறியத்தக்கது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன்மீது அவனது அவைக்களப்புலவர் தலைவராகிய மாங்குடி மருதனாரால் பாடப்பெற்ற மதுரைக் காஞ்சி யென்ற நூலிலுள்ள 'பல்சாலை முதுகுடுமித்- தொல்லாணை நல்லாசிரியர்-புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்' (759, 61, 62) என்ற அடிகளில் இவ் வேந்தன் புகழப்பட்டிருத்தல் காண்க. இதனால் சங்கச் செய்யுட்-களிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பிற்காலத்துச் செப்பேடுகளா லும் கல்வெட்டுக்களாலும் உறுதியெய்து தல் நன்குணரத்தக்கது.

நம்முடைய முதுகுடுமியின் சிறப்பை விளக்கக் கூடிய ஐந்து பாடல்கள் புறநானூற்றிற் காணப்படுகின்றன. அவநறைப் பாடினோர், காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் என்ற புலவர்களேயாவர். அவர்களுடைய பாடல்களால் அறிந்து கோடற் குரியவை: இம் மன்னர் பெருமான் அக் காலத்தில் நிலவிய அரசர் பலரையும் புறங்கண்ட பெருவீரன்; வேண்டிய வேண்டியாங்குப் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங் கொடை வள்ளல்; அரசர்க்குரிய பல வேள்விகளை முடித்துப் பெருமை யெய்தியவன்; சிவ பெருமானிடத்தும் பெரியோர்களிடத்தும் பேரன்புடையோன்-என்பன. இவனை நெட்டிமையார் பாடிய பாடல்களுள் ஒன்றைக் கீழே தருகின்றோம்.

'பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர் மண் கொண்டு இனிய செய்தியின் ஆர்வலர் முகத்த'
(40-18)
 (நன்றி- டி.வி.சதாசிவ பண்டாரத்தார்)

No comments:

Post a Comment

சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்

சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்  கேரளத்தின் அறுவடை திருநாள் (ஓணம்) ஆகும் , மலையாளம் என்ற மொழி தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ...