கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்


கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியரது தலைநகராகிய மதுரையில் விளங்கிய கடைச்
சங்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் முடி
வெய்தியது என்பது ஆராய்ச்சியாளரது கொள்கையாகும். ஆகவே,
கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஆட்சி புரிந்த பாண்டிய
அரசர்களது வரலாறே இப் பகுதியில் எழுதப்படுகின்றது.

இறையனார் களவியற்கு உரைகண்ட தொல்லாசிரியர் கடைச்
சங்கத்தைப் புரந்து வந்த பாண்டி மன்னர்கள் நாற்பத் தொன்
பதின்மர் ஆவர் என்று அவ்வுரையிற் கூறியுள்ளார். சிலப்பதி
காரத்தின் உரைப்பாயிரத்திற்கு மேற்கோளாகக் காட்டப் பெற்ற
"வேங்கடங் குமரி தீம்புனற் பௌவம்" என்று தொடங்கும்
ஆசிரியப்பாவும் அங்ஙனமே உணர்த்துகின்றது. எனவே, கடைச்
சங்க நாள்களில் அரசு செலுத்திய பாண்டிய அரசர்கள் நாற்பத்
தொன்பதின்மர் ஆவர் என்பது நன்கு புலப்படுகின்றது. அன்னோர்
ஆட்சிபுரிந்த காலம் ஆயிரத்துத் தொண்ணூற்றைம்பது
ஆண்டுகள் என்பர் களவியலுரைகண்ட பெரியார். ஆகவே, ஒவ்
வொரு மன்னனது 'சராசரி' ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய
முப்பத்தெட்டாண்டுகளாகும். கடைச் சங்ககாலத்துப் பாண்டியர்
நாற்பத்தொன்பதின்மருள் சிலர் பெயர்களே நற்றிணை, குறுந்
தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு என்னும் நூல்
களால் அறியப் படுகின்றன. அவர்களுள் பாண்டியன் முடத்
திருமாறன் என்பவனே மிக்க பழைமை வாய்ந்தவன் என்பது
களவியலுரையால் பெறப்படுகின்றது. எனவே, அவன் வரலாற்றை
முதலில் ஆராய்வோம்.

பாண்டியன் முடத்திருமாறன் : - குமரிநாடு கடல் கோளால்
அழிந்தபின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபரணியாற்றிற்கும்.இடையிலுள்ள லெப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத்
தலைநகராய் இருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட
பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ் வேந்தனே' 
] இறுதியில் வாழ்ந்தவன் ஆவன். ஆகவே, இவன் இடைச்சங்கத்
தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் காலத்தில்
நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும்
அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.] இக் கடல்
கோளினால் எண்ணிறந்த தமிழ் நூல்கள் இறந்தன. இச்
செய்தியை,
'ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலர்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்னமான நூல் யாவும் 
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள'
என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க. தமிழ்மக்கள்
செய்த உயர் தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம்
ஒன்றேயாகும். இக் கடல்கோள்களுக்குத் தப்பி யுய்ந்த பாண்டியன்
முடத்திருமாறனும் செந்தமிழ்ப்புலவர்களும் சிறிது வடக்கே
சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள்.
இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர் மதுரை
மாநகரையடைந் தனர். இப்பாண்டியனும் அந் நகரை வளம்படுத்தித்
தனக்குரிய தலைநகராகக்கொண்டு கடைச்சங்கத்தை அங்கு நிறுவினான். பல நல்லிசைப் புலவர்கள் தமிழ் ஆராய்ச்சி செய்யத்
தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர்.
இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின .
எனவே, கடைச்சங்கத்தை மதுரைமா நகரின்கண் நிறுவி அதனைப்
போற்றி வளர்த்து வந்த பாண்டியன் முடத்திருமாறன் நம் தமிழ்த்
தாயின் பொருட்டு ஆற்றிய அரும்பணி அளவிட்டு உரைக்குச்
தரத்ததன்று. இம் மன்னனே தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த
ஒண்டிறற்குரிசில் ஆவன். இவன் பாலைத்திணையையும், குறிஞ்சித்
திணையையும் இன்சுவை பொருந்தப் பாடுவதில் வன்மை உடையவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையில் இவன்
பாடிய இரண்டு பாடல்கள காணப்படுகின்றன (நற்றிணை 105; 228).
இவன் மதுரைநகரை அமைத்ததையும் கடைச்சங்கத்தை அங்கே
நிறுவியதையும் பராந்தக பாண்டியனுடைய செப்பேடுகள் குறிப்பிடு
கின்றன. இவனைப்பற்றிய பிற செய்திகள் இக்காலத்திற் புலப்
படவில்லை.

நன்றி - டி.வி.சதாசிவ பண்டாரத்தார்

No comments:

Post a Comment

சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்

சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்  கேரளத்தின் அறுவடை திருநாள் (ஓணம்) ஆகும் , மலையாளம் என்ற மொழி தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ...