பாண்டியன் மதிவாணன்


பாண்டியன் மதிவாணன் :-
 இவன் கடைச்சங்கத்தைப் புரந்து வந்த பாண்டிய அரசர்களுள் ஒருவனாவன். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கேறியவன் என்று தம் உரைப் பாயிரத்திற் கூறியுள்ளார். ஆகவே இவன் செந்தமிழ்ப்புலமையிற் சிறந்து விளங்கிய வேந்தனாவன். இவன் ஒரு நாடகத் தமிழ் நூல் இயற்றியுள்ளான். அது மதிவாணர் நாடகத் தமிழ் நூல் எனப் படும். அந்நூல், நூற்பாவாலும் வெண்பாவாலும் இயற்றப் பெற்றது என்பர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை யெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட ஐந்து இசைநாடக நூல்களுள் மதிவாணர் நாடகத் தமிழ்நூலும் ஒன்றாகும். அது முதனூலிலுள்ள வசைக்கூத்திற்கு மறு தலையாகிய புகழ்க்கூத்தின் இலக்கணத்தை உணர்த்தும் சிறப்புடையது என்று சிலப்பதிகார உரையாசிரியர் குறித்துள்ளார். இம் மன்னன் இயற்றிய அத்தகைய பெருமைவாய்ந்த நாடகத் தமிழ் நூல் இந் நாளிற் கிடைக்கப் பெறாதிருத்தல் பெரிதும் வருந்தத் தக்கதாகும். சிற்சில சூத்திரங்களே சிலப்பதிகார உரையிற் காணப்படுகின்றன.

நன்றி - டி.வி.சதாசிவ பண்டாரத்தார்


No comments:

Post a Comment

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி:- இவ் வேந்தன் கடைச் சங்க நாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவனாவன் இளம் பருவத்திலேயே பேரறிவினனாக இ...